ETV Bharat / state

அவனியாபுரத்தில் முறைகேடாக வெட்டப்பட்ட 300 மரங்கள் - மழுப்பலாகப்பதிலளித்த அலுவலர்கள்

author img

By

Published : Feb 6, 2022, 6:56 PM IST

அவனியாபுரத்தில் கடந்த ஆட்சியில் பெற்ற அனுமதி ஆவணத்தை வைத்துக் கொண்டு, முறைகேடாக 300-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டிய சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.

மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் தொடர்பான காணொலி
மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் தொடர்பான காணொலி

மதுரை: மதுரை அருகேயுள்ள அவனியாபுரம் - விமானநிலையம் செல்லும் புறவழிச்சாலையின் இருபுறமும் பல்வேறு வகையான மரங்கள் உள்ளன.

இதில் பெரும்பான மரங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட சாலை விரிவாக்க பணியின்போது வெட்டப்பட்டன.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் அப்பகுதியிலுள்ள மரங்களை வெட்டும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறை, ஒப்பந்தஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தற்காலிகமாக மரம் வெட்டும் பணி நிறுத்தப்பட்டது. இதற்கிடையே மீண்டும் எந்தவித அறிவிப்புமின்றி மரம் வெட்டப்படுவதை அறிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மதுரை மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்துள்ளனர்.

மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாகப் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் தொடர்பான காணொலி

வெட்டி சாய்க்கப்பட்ட 300 மரங்கள்

மரங்கள் வெட்டப்பட்டது குறித்து சமூக செயற்பாட்டாளர் முத்துமணி பேசுகையில், "இப்பகுதியில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் தொடர்ந்து மரங்கள் வெட்டப்படுகின்றன. மூன்று முறை நாங்கள் தலையிட்டு மரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்துள்ளோம்.

மரங்கள் வெட்டுவதற்குரிய எந்தவித முறையான ஆவணங்களும் இல்லாமல் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களும், ஒப்பந்ததாரர்களும் சட்டவிரோதமாக வெட்டி வருகின்றனர். ஒப்பந்ததாரர்கள் கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட அனுமதி ஆவணத்தை வைத்துக்கொண்டு, இப்போது மரங்களை வெட்டுகின்றனர்.

வெட்டப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ள மரங்கள்
வெட்டப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ள மரங்கள்

புகார் அளிக்கப்பட்டும் காவல்துறை தரப்பில் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. வெட்ட வேண்டியவை, வெட்டக்கூடாதவை எனும் வகையின்படி 147 மரங்கள் மட்டுமே வெட்டுவதற்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது 300-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டிச் சாய்த்துள்ளனர். தற்போது இருக்கின்ற மரங்களையாவது பாதுகாப்பது அவசியமாகும்' என்றார்.

பதிவு செய்யப்படாத எஃப்ஐஆர்
மரங்கள் அனைத்தும் முறைகேடான வகையில் வெட்டப்படுவதாகத் தொடர்ந்து புகாரளித்தும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல், ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஒட்டுமொத்த மாவட்டத்திலும் 33 விழுக்காடு பசுமைப்பரப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற நிலையில், அதற்கான எந்தவித முயற்சியும் மாவட்ட நிர்வாகம் தரப்பில் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.

பாதிக்கும் கீழே பசுமை பரப்பு

இதுகுறித்து மண்ணின் மரங்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் நெடுஞ்செழியன் பேசுகையில், "இது ஒரு தேசிய நெடுஞ்சாலை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சாலை விரிவாக்கம் என்ற பெயரில் தொடர்ந்து மரங்களை வெட்டி வருகின்றனர்.

அதிகரிக்கும் வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்க, மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது உலகளாவிய பார்வை. அதற்கு நேர்மாறாகவே இச்சம்பவம் நடைபெற்று வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக மதுரையில் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கையை கணக்கிலெடுத்தால் லட்சக்கணக்கில் இருக்கும். வனத்துறை எதற்காகப் பணி செய்ய வந்தார்களோ அதைவிட்டுவிட்டு, வெட்டப்படும் மரங்களுக்குப் பொருளாதார அளவுகோலை நிர்ணயிப்பதே வேலையாக மாறியுள்ளது.

மாவட்ட ஆட்சியரிடத்தில் புகாரளித்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
மாவட்ட ஆட்சியரிடத்தில் புகாரளித்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்

மதுரையின் பசுமைப் பரப்பு குறித்த ஆர்டிஐ கேள்விக்கு, வெறும் 14.96 விழுக்காடுதான் உள்ளது எனப் பதிலளிக்கப்பட்டுள்ளது.

சராசரியாக ஒரு மாவட்டத்தில் இருக்க வேண்டிய 33 விழுக்காடு வனப்பரப்பில் இது பாதிக்கும் குறைவாகும். இந்நிலையில் அச்சூழலை மீட்டுருவாக்கம் செய்வதற்கான எந்தப் பணியையும் வனத்துறையினர் இதுவரை மேற்கொள்ளவில்லை.

பொம்மையாக மாறிய மாவட்ட பசுமைக்குழு?

ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக மரங்களை அழிப்பதற்கான வேலையை மட்டும் அனைத்து அரசு துறைகளும் கூட்டுச்சேர்ந்து செய்கின்றன. பாலம், சாலை அமைப்பதற்கானப் பணிகள் அவசியம்தான்.

முறையான குழுக்களை உருவாக்கி, குழுவினரின் அறிக்கையின் அடிப்படையில் அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று மாவட்ட பசுமைக்குழுவின் செயல்பாடும் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

அக்குழுவை வெறும் பொம்மை அமைப்பு போன்று மாவட்ட நிர்வாகம் வைத்திருப்பது ஏற்புடையதல்ல” என்றார்.

என்ன பயன்?

முறையான அனுமதியின்றி மரங்களை வெட்டி, ஒப்பந்ததாரருக்கு ஆதரவாகச் செயல்படும் அரசு அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் தரப்பில் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, 'முறையான அனுமதி பெறப்பட்டே மரங்கள் வெட்டப்படுகின்றன. குறிப்பாக சாலை விரிவாக்கம் செய்யும்போது, அதற்கு இடையூறாக உள்ள மரங்களையே நாங்கள் வெட்ட அனுமதிக்கிறோம். இதில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது' என மழுப்பலாகப் பதிலளித்துள்ளனர்.

மிக அரிய வகையான மருத மரங்களும் வெட்டப்பட்ட கோபம் பொதுமக்களின் மனதில் கொந்தளிக்கிறது.

பல்லுயிர்ச்சூழலுக்கு மட்டுமன்றி, காற்றின் தூய்மைக்கும் முக்கியக் காரணியான மரங்களை வெட்ட ஆதரவளிப்பது எத்தகைய நன்மையைப் பயக்கும்? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி?

இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்புகள் சப்ளை செய்தநபர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.