ETV Bharat / state

ஊர் பஞ்சாயத்து முன்பு காலில் விழுந்த தந்தை, மகன் - விழவைத்தவர்கள் மீது வழக்குப்பதிவு!

author img

By

Published : Jun 20, 2021, 7:41 PM IST

மதுரையில் கன்றுக் குட்டியை திருடியதற்காக தந்தை, மகன் இருவரை ஊர் பஞ்சாயத்து முன்பு காலில் விழ வைத்த நபர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊர் காலில் விழுந்த சம்பவம்
ஊர் காலில் விழுந்த சம்பவம்

மதுரை: அலங்காநல்லூர் அருகேவுள்ள மேலபனங்காடி பகுதியைச் சேர்ந்தவர், நாகலட்சுமி. இவர் வீட்டில் மாடுகள் வைத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், ஜுன் 18ஆம் தேதி இரவு வீட்டில் கட்டிவைத்திருந்த கன்று காலையில் மாயமானதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதையடுத்து, அவர் தனது கன்றைப் பல இடங்களில் தேடி வந்துள்ளார்.

அப்போது, கோசாகுளம் அருகே சென்றபோது, தனது கன்று இறைச்சிக் கடையில் கட்டிப் போட்டிருப்பதைக் கண்டுள்ளார். உடனே அந்த கடைக்காரரிடம் சென்று 'இந்த கன்றுக்குட்டி எப்படி இங்கு வந்தது' என விசாரித்துள்ளார்.

அப்போது, மேலபனங்காடி சீதாலட்சுமி நகரைச் சேர்ந்த பாண்டி என்பவரது மகன் கண்ணன் தான் இங்கு விற்பனை செய்ததாகக் கூறியுள்ளார்.

உடனே ஆத்திரமடைந்த நாகலட்சுமி, கண்ணன் வீட்டிற்குச் சென்று கன்றுக்குட்டியை திருடி விற்றுள்ளதாகக் கூறி தகராறு செய்துள்ளார். இதையடுத்து, பாண்டியும் அவரது மகன் கண்ணனும் கன்றுக் குட்டியை திரும்ப அழைத்து வந்து நாகலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.

ஊர் காலில் விழுந்த சம்பவம்

இது குறித்து அப்பகுதி மக்கள் முன்பு பஞ்சாயத்து நடந்தப்பட்டது.

அப்போது, கன்றைத் திருடிய குற்றத்திற்காக இருவரும் ஊர் பஞ்சாயத்து முன்பு காலில் விழுந்து மன்னிப்புக்கேட்க வைக்கப்பட்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனையறிந்து அப்பகுதிக்கு வந்த அலங்காநல்லூர் காவல் துறையினர், சட்ட விரோதமாக பஞ்சாயத்து செய்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிய நபர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.