ETV Bharat / state

'முன்களப் பணியாளர்கள் காப்பீட்டில் அரசே கைவிரிக்கலாமா?'

author img

By

Published : Apr 21, 2021, 8:03 AM IST

மதுரை: கரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் அரசே கைவிரிக்கலாமா என்று மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எம்.பி. சு.வெங்கடேசன்  சு.வெங்கடேசன்  கரோனா முன்களப் பணியாளர்கள் காப்பீடு  கரோனா காப்பீடு  மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்  MP Venkatesan Question  Madurai MP Venkatesan  Corona Insurance  corona workers insurance
MP Venkatesan

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா பேரிடரை எதிர்கொள்ளும் பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு வழங்கிவந்த ரூ.50 லட்சம் காப்பீட்டுத் திட்டம் காலாவதியாகி 27 நாள்கள் ஆகிவிட்டன என்கிற அதிர்ச்சியான செய்தியை எப்படி ஏற்றுக்கொள்வது?

அரசு மருத்துவமனைகள், உள்ளாட்சி அமைப்புகள், தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர், பணியாளர்கள் ஆகியோருக்கான காப்பீடாகும் இது. கரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வீசிக் கொண்டிருக்கும் வேளையில் முன்வரிசைப் போராளிகளை இப்படியா நடத்துவது?

மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கான கடிதத்தில் மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு வரையிலான உரிம கோரல்கள் மட்டுமே பரிசீலிக்கப்படுமென்றும், அதற்கான உரிம கோரலைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் ஏப்ரல் 24ஆம் தேதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அப்படியெனில், மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின் இறப்பைச் சந்தித்துள்ள விலை மதிப்பற்ற உயிர்களுக்கு என்ன பதில்? அவர்களை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் தரப் போகிறோம்? இன்னும் வீரியத்தோடு தாக்கிக் கொண்டிருக்கிற கரோனா இரண்டாவது அலையை எதிர்த்து முன் வரிசையில் நிற்கும் மருத்துவர், செவிலியர், ஊழியருக்கு என்ன நம்பிக்கையைத் தரப்போகிறோம்?

நேற்று (ஏப். 20) நான் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அக்கடிதத்தில் மூன்று மிக முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தியிருக்கிறேன்.

  1. இக்காப்பீட்டுத் திட்டம் எவ்வித காலதாமதமின்றி உடனடியாகப் புதுப்பிக்கப்பட வேண்டும்
  2. 24.03.2021 நள்ளிரவுக்குப் பின்னர் உயிரை இழந்துள்ளவர்களுக்கும் காப்பீட்டுப் பயன் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். இதற்கான அறிவிப்பு உடனடியாக வெளியாக வேண்டும்.
  3. இத்திட்டம் நடைமுறையாகும்போது தகுதியுள்ள உரிமங்கள் பல இழுத்தடிக்கப்படுவதாக அறிய வருகிறேன். ஆகவே இப்பயன் உரித்தானவர் ஒவ்வொருவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் தெளிவான வழிகாட்டல்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கும், அனைத்து மாநில/யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். உடனடியாக இக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுமென்று நம்புகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'கீழடி பொருள்களை பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும்' - சு. வெங்கடேசன் எம்.பி.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.