ETV Bharat / state

'நிர்வாகத் தவறை நியாயப்படுத்த முயற்சிக்கும் வங்கி ஊழியர் தேர்வுக் கழகம்'

author img

By

Published : Feb 19, 2021, 10:15 PM IST

தனது நிர்வாகத் தவறை நியாயப்படுத்த முயற்சிப்பதால் வங்கி ஊழியர் தேர்வுக் கழகம் தேர்வுத் தேதிகளை மாற்ற மறுக்கிறது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

bank exam issue madurai mp venkatesan again wrote a letter to ibbs
bank exam issue madurai mp venkatesan again wrote a letter to ibbs

ஒரே நாளில் ஒரே வங்கி நிறுவனத்தின் இரு பதவிகளுக்கு தேர்வுகள் நடத்துவதை மாற்றியமைக்க வேண்டும். இதனால் பல தேர்வர்கள் பாதிக்கப்படுவர் என மதுரை நாடாளுமன்ற எம்பி சு. வெங்கடேசன் வங்கி ஊழியர் தேர்வுக் கழகத்திற்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியிருந்தார். இவரது கடிதத்திற்கு பதிலளித்த வங்கி ஊழியர் தேர்வுக் கழகம் (ஐ.பி.பி.எஸ்) உங்களது கோரிக்கையை உள் ஆய்வுக் குழு ஒன்று பரிசீலித்தது. அதே தேதிகளில் தேர்வுகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

இது குறித்து எம்.பி சு.வெங்கடேசன் மீண்டும் ஐ.பி.பி.எஸ்-க்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'உங்கள் பதில் ஏமாற்றம் அளிக்கிறது. நீங்கள் அளித்த உள் ஆய்வுக் குழு இரண்டு தேர்வுகளிலும் பங்கேற்கவுள்ள தேர்வர்களின் சிரமங்களை மறுக்கவில்லை. தேர்வர்கள் தங்களின் சிரமங்களை உங்களுக்கே தெரிவித்துள்ளதையும் உங்கள் கடிதமே ஏற்றுக் கொண்டுள்ளது.

நேர்காணலில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கக் கூடுமென்பதால் அந்த தேதியை நீங்கள் மாற்றி இருக்கலாம். மேலும் இரு தேர்வுகளுமே ஒரே தொழில் சார்ந்தவை. முடிவெடுத்தலும் ஒரே கூரையின் கீழ் இருக்கிறது. இருப்பினும் தேர்வர்கள் ஏதாவது ஒரு வாய்ப்பை நழுவ விடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இது அந்த தேர்வர்களில் சிலருக்கு வாழ் நாள் வாய்ப்பை இழக்கச் செய்வதாகக் கூட அமைந்து விடக் கூடும்.

கால அவகாசம் உங்களுக்கு குறைவாக இப்போது இருப்பினும், உங்கள் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள். பிரிவு 1 அலுவலர்கள் பதவிக்கான நேர்காணலை சம்பந்தப்பட்ட தேர்வர்கள் நலனைக் கருத்தில் கொண்டு பிறிதொரு தேதியில் நடத்துங்கள். நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து சு. வெங்கடேசன் கூறியுள்ளதாவது, 'முதலில் செய்த நிர்வாகத் தவறை நியாயப்படுத்துவதற்காகவே இம் முடிவை மாற்ற மறுக்கிறார்கள் எனக் கருதுகிறேன். இது தேர்வர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும். நிறைய எண்ணிக்கையில் எழுதும் அலுவலக உதவியாளர் பதவிக்கான தேர்வை மாற்ற வேண்டும். குறைவான எண்ணிக்கையில் தேர்வர்கள் உள்ள அலுவலர்கள் பதவிக்கான நேர்காணலை மாற்றலாமே.

ஒவ்வொருவர் வாழ்க்கையும், அவர்களுக்கான வாய்ப்பும் முக்கியம். உள் ஆய்வுக் குழுவும் தேர்வர்களுக்கு உள்ள பிரச்னையை மறுக்காத போது முடிவு மட்டும் இப்படி அமைந்தது ஏன்? அறுவை சிகிச்சை வெற்றி... நோயாளி காலி" என்பது போல இருக்கிறது. தேதியை மாற்றுவதே தேர்வர்களுக்கு வழங்கப்படும் நீதி' எனக் குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.