ETV Bharat / state

தமிழக அரசு ஒட்டு மொத்த விவசாயிகளுக்கும் எதிராக உள்ளது - பி.ஆர்.பாண்டியன்

author img

By

Published : Aug 4, 2023, 7:12 PM IST

Updated : Aug 4, 2023, 7:55 PM IST

'முல்லைப் பெரியாறு அணையில் தமிழர்களுக்கு உள்ள உரிமைகளையும் கடமைகளையும் நிறைவேற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில்கூட முன்வரவில்லை. தமிழக அரசின் செயல்பாடுகள் ஒட்டு மொத்த தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிராக உள்ளது' என பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

பிஆர் பாண்டியன்
பிஆர் பாண்டியன்

தமிழக அரசு ஒட்டு மொத்த விவசாயிகளுக்கும் எதிராக உள்ளது - பி.ஆர்.பாண்டியன்

மதுரை: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த 2021ஆம் ஆண்டு ஆளும் திமுக அரசு நெல்லுக்கு, ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை வழங்குவதாக சொன்னதை தற்போது நிறைவேற்ற மறுக்கிறது.

மேலும், மதுரையில் வேளாண் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்கள். அதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. விவசாயிகளுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு, நிதி ஆதாரமில்லை எனத் தற்போது கைவிரிக்கிறது.

கடந்த 2 ஆண்டு காலமாக தாமிரபரணி, வைகை, முல்லைப் பெரியாறு பாசனப் பகுதி நீர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணித்து வருகிறது. காவிரிப் படுகையில் கண் துடைப்பாக ரூ.90 கோடியை ஒதுக்கீடு செய்துவிட்டு தூர்வாரியதாகச் சொல்கிறது.

விவசாய உற்பத்தி இந்த ஆண்டு மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்கப்போகிறது. காவிரி, வைகை, முல்லைப் பெரியாறு ஆறுகள் வறண்டுவிட்டன. ஒட்டுமொத்த தமிழகமும் உணவு உற்பத்தியில் அழிவைச் சந்திக்கும் பேராபத்து நெருங்குகிறது.

தமிழக முதலமைச்சர் இதுவரை எந்த ஒரு கருத்துக்கேட்புக் கூட்டங்களோ அல்லது அதிகாரிகளைக் கொண்ட ஆய்வுக் கூட்டங்களோ நடத்தவில்லை. தக்காளி விலை உயர்வைக் காரணம் காட்டி, ஒட்டு மொத்த தமிழகத்தையும் திசை திருப்புவதற்கு ஒன்றுகூடி முயற்சி எடுக்கிறார்கள்.

நூற்றுக்கணக்கான காய்கறிகளில் அன்றாடம் மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒன்றுதான், தக்காளி. எந்தவித மருத்துவக் குணமும் அதில் கிடையாது. தக்காளி இல்லாமல் வாழ முடியும். அரிசி இல்லாமல் வாழ முடியாது. இதனை தமிழக அரசு இதுவரை உணரவில்லை.

ஒட்டு மொத்தமாக மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சிக்கிறது. நிதி ஒதுக்கீடுகளில் பாரபட்சம் காட்டுகிறது. மதுரைக்கு என அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அறிவிப்பு செய்து 8 ஆண்டுகள் நிறைவடையப்போகிறது. தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.

மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளைகள் தீவிரமடைந்திருக்கின்றன. வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்து இங்குள்ள வளங்கள் சூறையாடப்பட்டு வருகிறது. அதன் மூலம் வருகின்ற வருவாயை அப்பகுதியிலுள்ள பாசனங்களை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்துங்கள் என்று கோருகிறோம். ஆனால், சாலைகள் அமைக்க மட்டும்தான் தமிழக அரசு முன்னுரிமை அளிக்கிறது.

ஒட்டுமொத்த விளைநிலங்களையும் அபகரித்து சிப்காட் உருவாக்குகிறோம் என்ற பெயரில் விவசாயிகளை போராட்டக்களத்தில் தள்ளியிருக்கிறது. விவசாயிகளின் அனுமதி இல்லாமலேயே அவர்களின் நிலங்களை கையகப்படுத்துவதற்கு, நீர் நிலைகளை சூறையாடுவதற்கு தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்புச் சட்டம் 2023ஐ சட்டப்பேரவையில் எந்த ஒரு விவாதமும் இல்லாமல் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது.

ஆளுநர் அதில் கையெழுத்திடக்கூடாது என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அந்தச் சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு தொடர்ந்து முயல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, சட்டவிரோதமாக ஆய்வுக்குழு அமைத்திருக்கிறது. அதுகுறித்து முதலமைச்சர் கண்டிப்பதற்கு முன்வரவில்லை. மத்திய அரசும் கண்டிக்கவில்லை. அவசரமாக ஆணையக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். ஆனால், தமிழக அரசு அதற்கான கடிதத்தைக்கூட ஆணையத்திற்கு எழுதவில்லை.

தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்குத் தீர்வு காண முதலமைச்சர் உடனடியாக முன்வர வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் தமிழர்களுக்கு உள்ள உரிமைகளையும் கடமைகளையும் நிறைவேற்ற தமிழக அரசு போர்க்கால அடிப்படையில்கூட முன்வரவில்லை. தமிழக அரசின் செயல்பாடுகள் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் நலனுக்கு எதிராக உள்ளது.

இதுவரை முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 132 அடிக்கு மேல் உயரவில்லை. ஆகையால், வைகை பாசனப்பகுதி வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் வலியுறுத்தி, வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி, தமிழக விவசாயிகள் சார்பாக அறவழிப் போராட்டத்தைத் துவங்குகிறோம்.

கடலூர் என்எல்சி விவகாரத்தில் விவசாயிகளுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. பயிருடன் கூடிய விளைநிலத்தை அழித்ததை உயர் நீதிமன்றம் கண்டித்த பிறகும்கூட, என்எல்சியின் தலைவர் பணியில் நீடிப்பதைக் கண்டிக்கிறோம். அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். இந்த விவகாரத்தில் எந்த அடிப்படையில் தமிழக அரசு அனுமதி அளித்தது என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

வேளாண் பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்கீடே கிடையாது. கலைஞர் கிராம விவசாய வளர்ச்சித் திட்டம் என்று அறிவித்தார்கள். முதல் ஆண்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு பைசா கூட ஒதுக்கப்படவில்லை. அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது.

வேளாண்மைத்துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு இன்றி மொத்தமாக முடங்கிக் கிடக்கிறது. பத்திரப்பதிவுத் துறையில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில்கூட விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: விவசாயி புகாருக்கு சிரித்த மின்வாரிய அதிகாரி: "ஏன் சிரிக்கிறீங்க?" - கோபப்பட்ட ஆட்சியர்!

Last Updated : Aug 4, 2023, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.