மாவட்ட நிர்வாகத்திற்கு இது மிகப்பெரிய வெட்கக்கேடு - உயர் நீதிமன்றக்கிளையின் அதிருப்திக்கு காரணம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Desk

Published : Jan 20, 2024, 9:25 AM IST

Etv Bharat

Madurai Bench: கனிம வளக் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் காணாமல் போயிருப்பது குறித்து, மாவட்ட நிர்வாகத்தின் மீது உயர் நீதிமன்றக்கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.

மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், “தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு சட்ட விரோதமாக கனிமங்களை கடத்தியதாக எனது டிராக்டர் மற்றும் டிப்பர் லாரி ஆகியவை, தூத்துக்குடி மாவட்டம் கனிம வளத்துறை உதவி இயக்குனர் பறிமுதல் செய்தார்.

பின்னர், எனது வாகனங்கள் கோவில்பட்டி வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன்படி, லாரி தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனது லாரி மற்றும் டிராக்டர் வாகனங்களை திரும்ப ஒப்படைக்க மனு அளித்தேன். அப்போது எனது வாகனம்
2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.

எனவே, எனது வாகனங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இது குறித்து விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க” கோரி கடந்த 2014ஆம் ஆண்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாஸ்கர், “2013 பிப்ரவரி மாதம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம், தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, காவல்துறையினார் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறி சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “அரசு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு, அரசாங்க அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் காணாமல் போனதாக கூறுவது மாவட்ட நிர்வாகத்திற்கு மிகப்பெரிய வெட்கக்கேடாகும். அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனம் காணாமல் போனது கூட தெரியமால், அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றார்கள்.

சம்பந்தப்பட்ட காவல்துறையினர் இந்த வழக்கை முறையாக விசாரணை செய்யாமல் வழக்கை முடித்துள்ளார்கள். கனிம வளத்துறை அதிகாரிகளும் இந்த வாழ்க்கை முறையாக கையாளவில்லை. சட்ட விரோதமாக கனிம வளம் கடத்தியிருந்தால், முறைப்படி குற்ற வழக்கு பதிவு செய்து, நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும், அதுவும் செய்யவில்லை.

இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனருக்கு அறிக்கை அனுப்பி, அரசு அலுவலகத்திலிருந்து வாகனம் காணாமல் போனதை புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட தவறு செய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட விரோத கடத்தல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள், நீதிமன்றத்தில் அல்லது காவல் நிலையத்திலோ அல்லது வருவாய்த்துறை அலுவலத்திலோ நிறுத்தி வைக்க போதிய இடம் இல்லை என தெரிய வருகிறது. எனவே, இந்த வழக்கில் உள்துறை செயலரை எதிர் மனுதாரராக சேர்த்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கனிம வளக் கடத்தல் குற்றச் செயல்களில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்த, அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் கீழ் தனி இடத்தை ஒதுக்க வேண்டும்.

அந்த வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா அமைத்து மற்றும் காவலாளிகள் மூலம் பாதுகாக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்; மு க ஸ்டாலின் தலைமையில் 23ம் தேதி நடைபெறும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.