ETV Bharat / state

45 ஆண்டுகளாக பரிசலில் ஆபத்தான பயணம்.. பள்ளி செல்ல பரிதவிக்கும் மாணவர்கள்.. கிருஷ்ணகிரி மாவட்ட அவலம்!

author img

By

Published : Jun 15, 2023, 2:21 PM IST

Updated : Jun 15, 2023, 7:02 PM IST

சூளகிரி - சின்னாறு அணைக்கட்டு பகுதிக்குள் உள்ள கிராமத்தில் வசிக்கும் மக்கள் கரைக்கு செல்ல மேம்பாலம் கட்டித்தர பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவரும் நிலையில், முதல் நாள் பள்ளிக்கு சென்ற சிறுவர்கள் தாங்களாகவே பரிசலை இயங்கி செல்ல வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Villagers making the dangerous journey across the dam water to reach the shore Request to the government to complete the flyover works
அன்றாட தேவைகளுக்கு கூட ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் கிராம மக்கள்

போகிபுரம் கிராம மக்களின் கோரிக்கை

கிருஷ்ணகிரி: ஒசூர் அடுத்த சூளகிரி ஊராட்சிக்குட்பட்டது போகிபுரம் கிராமம். காமராஜர் காலத்தில் சூளகிரி - சின்னாறு அணைக்கட்டுவதற்காக காமநாயக்கன்பேட்டை, ஒண்டியூர், போகிபுரம் ஆகிய கிராம மக்கள் 45 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியேற்றப்பட்டு அணை கட்டப்பட்டது.

அணைக்கு மத்தியில் போகிபுரம் கிராமத்தின் ஒருபகுதி மக்கள் மட்டும் வெளியேற்றப்படாமல் அங்கேயே இருந்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தற்போது 100 குடும்பங்களாக வளர்ந்துள்ள போகிபுரம் கிராமத்தினருக்கு, அடிப்படை வசதிகள் வளரவில்லை என்பதுதான் சோகம்.

போகிபுரம் கிராமத்தினர் பள்ளி, கல்லூரிகளுக்கும், சாதாரண மளிகை பொருட்களின் தேவைக்கும் 5 கிமீ தூரத்தில் உள்ள சூளகிரிக்கு தான் செல்ல வேண்டும். 5 கிமீ தூரம் தான் என்றாலும் செல்ல வழியில்லை என்பது தான் அவலம். அவர்களின் அன்றாட தேவைகளுக்கு கூட சூளகிரி - சின்னாறு அணையை கடந்துதான் செல்ல வேண்டும்.

ஆண்டில் 10 மாதங்கள் அணையில் நீர் இருக்கும் என்பதால் 400 மீட்டர் தூரத்தை பரிசலில் கடந்தால் தான் அக்கறைக்கு செல்ல முடியும் என்கிற நிலையில் சூளகிரி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அக்கறைக்கு செல்ல 15 அடி ஆழ நீரில் ஆபத்தான பரிசல் பயணம் தான் ஒரே வழியாக உள்ளது.

காலை, மாலை பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்களை பெற்றோர்களே பரிசல்களில் அழைத்து சென்று, அழைத்து வருவதுமாக உள்ளனர். ஒரு தீப்பெட்டி வாங்க வேண்டுமென்றாலும் கூட சூளகிரிக்கு சென்றுதான் மளிகை பொருட்களை பெற வேண்டும். கறவை மாடுகளில் கறக்கும் பாலை விற்பனைக்கு கூட பரிசலில் தான் கொண்டு செல்ல வேண்டும்.

ஆற்றை கடக்கும் கிராமம் என்பதால் அங்கன்வாடி, நியாய விலைக்கடை, தொடக்கப்பள்ளி என எதுவுமே இங்கு இல்லை. கர்ப்பிணி பெண்கள், உடல்நல குறைப்பாடு நேரங்களில் அவசரமாக செல்ல முடியாத சூழலில் பலரிடமும் முறையிட்டும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போகிபுரம் கிராமத்திற்கு செல்ல மேம்பாலம் அமைக்க தொடங்கிய பணிகள் 30% அளவிலேயே நின்றுவிட்டன.

அணையில் நீர் அதிகமாக உள்ளதென்பதால் பணிகளை தொடர முடியாதென பொதுப்பணித்துறையினர் கைவிட்டதாக சொல்லப்படுகிறது. 45 ஆண்டுகளாக தொடரும் இந்த அவலநிலையில் பள்ளி படிப்பை தொடர முடியாமலும், திருமணத்திற்கு தயாரான ஆண்களுக்கு பெண் கொடுக்க தயங்கும் அவலமும் தொடர்வதால், போகிபுரம் கிராமத்திலிருந்து வசதிகளை எதிர்ப்பார்த்து ஏராளமான குடும்பங்கள் நகர பகுதிக்கு இடம்பெயர்ந்தது என்கின்றனர் கிராமத்தில் உள்ள மூத்தோர்.

ஆற்றை கடக்க முடியாவிட்டால் வனப்பகுதியினுள் ஒத்தையடி பாதையில் 10 கிமீ தூரம் பயணிக்க வேண்டும் என்பதால், கைவிடப்பட்ட உயர்மட்ட பால பணிகளை தொடர வேண்டுமென்பதே கிராம மக்களின் தலைமுறையைக் கடந்த கோரிக்கையாக உள்ளது. இல்லம் தேடி கல்வி வந்த நிலையில், இந்த கிராம மக்களோ அவர்களின் இல்லங்களுக்கு செல்ல அடிப்படை வசதிக்காக காத்து இருக்கின்றனர்.

1 முதல் 5ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டாவது கைவிடப்பட்ட மேம்பால பணிகளை தொடர்வார்களா என்கிற ஏக்கத்தோடு மாணவ, மாணவிகள் தாங்களாகவே பரிசலை இயங்கி சென்றனர். ஒரு பரிசல் மட்டுமே உள்ளநிலையில் இரு புறங்களிலும் கையிற்றால் கட்டப்பட்டு கயிற்றை இழுத்தவாறே கிராம மக்கள் பயணித்து வருகிறார்கள். அந்த பரிசல் கூட அரசால் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: டைமிங் ரொம்ப முக்கியம்.. பார் ஒப்பனுக்கு காத்திருந்த மது பிரியர்கள்.. புதுக்கோட்டை வைரல் வீடியோ!

Last Updated : Jun 15, 2023, 7:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.