ETV Bharat / state

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அழைப்பு

author img

By

Published : Jun 3, 2020, 3:33 AM IST

கிருஷ்ணகிரி: அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 2020-2021ஆம் ஆண்டிற்கான வாகனங்களுக்கு விண்ணப்பிக்கவுள்ளோர் சம்மந்தப்பட்ட அலுவலகங்களை தொடர்புகொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Amma two wheeler scheme application opened
Amma two wheeler scheme application opened

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புற பகுதிகளில் வாழும் மகளிர், பணியிடங்கள் மற்றும் பிற இடங்களுக்கு எளிதில் செல்ல இருசக்கர வாகனம் வாங்க மான்யம் வழங்க உள்ளாட்சி அமைப்பு வாரியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின்படி மானிய விலையில் ஸ்கூட்டி (இருசக்கர வாகனம்) பெற, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் மகளிரின் வருட வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாத அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், அமைப்புசார் மற்றும் அமைப்புச்சாரா நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள், சுயமாக சிறு தொழில் செய்யும் பெண்கள், அரசு நிதி உதவி பெறும் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள், மாவட்ட மக்கள் கற்றல் மையம் ஆகிய நிறுவனங்களில் தொகுப்பூதியம் தினக்கூலி அல்லது ஒப்பந்த ஊதிய அடிப்படையில் பணிபுரிந்து வரும் மகளிர்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் ஆகியோர் தகுதியுடையோர்‌ என விரிவுபடுத்தி திருத்திய உத்தரவு பெறப்பட்டுள்ளது.

மேலும், பயனாளிகள் வயது வரம்பும் 45 ஆக உயர்த்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டில் 2,704 பேருக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனுமதி ஆணை பெற்றுள்ள பயனாளிகள் உடனடியாக இருசக்கர வாகனங்கள் வாங்கி அதற்கான மானியத்தை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், கிருஷ்ணகிரி நகராட்சி, ஓசூர் மாநகராட்சி அலுவலகம் மற்றும் அனைத்து பேரூராட்சிகளிலும் சமர்பித்து மானியம் பெற்று கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 2020-2021ஆம் ஆண்டிற்கு 2,633 வாகனங்களுக்கு மானியம் வழங்க உத்தேச அனுமதி பெறப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் தகுதியுடைய மகளிர் ஏற்கனவே தெரிவித்துள்ளவாறு அனைத்து சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.