ETV Bharat / state

கரூர் மாவட்டத்திற்கு மூன்று புதிய திட்டங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

author img

By

Published : Jul 2, 2022, 7:18 PM IST

கரூர் மாவட்டத்தில் மூன்று புதிய திட்டங்களை தொடங்கவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்திற்கு மூன்று புதிய திட்டங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!
கரூர் மாவட்டத்திற்கு மூன்று புதிய திட்டங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

கரூர் திருமாநிலையூர் பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், நிறைவுற்ற திட்டங்கள் திறப்பு போன்ற நிகழ்வுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சி அரசு நிகழ்ச்சியா, கட்சி மாநாடா என்று வியந்து பார்க்கும் வகையில் உள்ளது. மாபெரும் கடல் அலை போல கூடி இருக்கிற மக்களைப் பார்க்கும் பொழுது, கடல் இல்லாத இந்த கரூர் நகருக்கு மக்கள் கடலையே உருவாக்கியுள்ளார், அமைச்சர் செந்தில் பாலாஜி.

அலையில்லாத கரூர் மாவட்டத்திற்குள் மக்கள் அலையை உருவாக்கி இருக்கிறார். கரூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட பொறுப்பையும் ஏற்று, எந்த தொய்வும் இன்றி சிறப்பாகச்செயல்பட்டு வருகிறார். ஓராண்டு காலமாக திமுக அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது என்பதற்கு கரூர் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள அரசு திட்டங்களே சாட்சி.

வழக்கமாக புதிதாக பொறுப்பேற்ற அரசிடம் ஆறு மாதங்களுக்கு எந்தவித அறிவிப்பையும் மக்கள் எதிர்பார்க்க மாட்டார்கள். அரசுக்கு கூடுதலாக இன்னும் ஆறு மாத காலம் திட்டமிடுதலுக்கு செலவாகும். இரண்டாவது ஆண்டுதான் புதிதாக பொறுப்பேற்ற அரசு செயல்படக்கூடிய காலமாக தமிழ்நாட்டில் இருந்துள்ளது.

ஆட்சிப் பொறுப்பேற்ற நிமிடத்தில் இருந்து செயல்படக்கூடிய அரசாக, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. அதுதான் உங்களில் ஒருவனான முத்துவேல் கருணாநிதி, ஆட்சித் தலைவராக என்னுள் இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறார். இன்றைய சூழ்நிலையில் தலைவர் கருணாநிதி இருந்தால் என்ன சிந்திப்பார், எப்படி செயல்படுவார்; அதுபோல நித்தமும் சிந்தித்து செயல்பட்டு வருகிறேன்.

மக்களுக்கு பயனுள்ள காலமாக ஓராண்டு திமுக ஆட்சி காலம் அமைந்துள்ளது. தேர்தல் நேரத்தில் கரூர் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது, புகலூர் பள்ளப்பட்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தியது, அரவக்குறிச்சியில் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது என கரூர் மாவட்டத்தில் பல்வேறு புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கரூர் மாவட்டத்திற்கு மூன்று புதிய திட்டங்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

மேலும் கரூர் காமராஜ் மார்க்கெட் புதுப்பிக்கும் பணி, சாயப்பட்டறை பூங்கா, ஜவுளிப் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நேற்று (ஜூலை 1) கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் முனைவோரிடம், இரண்டு மணி நேரம் கலந்துரையாடல் மேற்கொண்ட பொழுது வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தற்பொழுது மூன்று புதிய அறிவிப்புகளை அறிவிக்கின்றேன்.

  1. கரூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஜவுளிப்பொருட்களை வாங்குவதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு, ஜவுளி உற்பத்திப்பொருட்களை காட்சிப்படுத்துவதற்குத்தேவையான காட்சி அரங்கம் கரூர் மாவட்டத்தில் அமைக்கப்படும்.
  2. கரூர் மாவட்டத்தில் உற்பத்தியாக கூடிய ஜவுளிப்பொருட்களின் ‘தரம் மற்றும் தொழில்நுட்ப பரிசோதனை நிலையம் (International Advance Testing Lab)’ கரூரில் அமைக்கப்படும்.
  3. கரூரில் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தக்கூடிய, கரூர் மாநகராட்சியில் புதிய பேருந்து நிலையம் திருமாநிலையூரில் ரூ.47 கோடி மதிப்பீட்டில் நவீன புதிய பேருந்து நிலையமாக அமைக்கப்படும்' என மூன்று புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இதையும் படிங்க: 'சதுரங்க வேட்டை' பட பாணியில் அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி ரூ.1.26 கோடி மோசடி செய்தவர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.