ETV Bharat / state

என்னை குளித்தலையில் போட்டியிடச் சொன்னார் ‘இவர்’ - உதயநிதி ஸ்டாலின்

author img

By

Published : Mar 4, 2023, 5:43 PM IST

கரூரில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த 1,22,019 பேருக்கு 267.43 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

என்னை குளித்தலையில் போட்டியிடச் சொன்னார் ‘இவர்’ - உதயநிதி ஸ்டாலின்
என்னை குளித்தலையில் போட்டியிடச் சொன்னார் ‘இவர்’ - உதயநிதி ஸ்டாலின்

கரூர்: ராயானூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1,22,019 பேருக்கு 267.43 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கரூர் மாவட்டத்தில் 52.40 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து 114.16 கோடி ரூபாய் மதிப்பிலான 39 புதிய திட்டப்பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

கரூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

இதனையடுத்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காலை முதலே காத்திருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற இருக்கிற பயனாளிகளே சிறப்பு விருந்தினர்கள். இதற்காக முதற்கண் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கரூர் மாவட்டத்தில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல் முறையாக அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வருகை தந்திருக்கிறேன்.

இந்த நிகழ்வில் ஆண்களுக்கு நிகராக உழைத்து, தங்கள் குடும்பங்களை காப்பாற்றும் தாய்மார்களை பார்த்தது உள்ளபடியே மனமகிழ்ச்சி அளிக்கிறது. கரூர் மாவட்டம் ஒரு முன்னுதாரணமான மாவட்டம். கரூர் மாவட்டத்தில் ஒரு செயலைத் தொடங்கினால், அது மிகப் பெரிய வெற்றிதான். அதனால்தான் கரூர் மாவட்டம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் முன்மாதிரி மாவட்டமாக கரூர் மாவட்டம் திகழ்கிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக, இரண்டு அரசு பள்ளி மாணவிகளான சர்மிளா மற்றும் நசீமா பானு ஆகியோர் ஆங்கிலத்தில் உரையாற்றியதை அனைவருமே வியந்து பார்த்தோம். அதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் 50 புதிய திட்டங்கள் குறித்து காணொளி வெளியிட்டார்கள். இவை அனைத்துமே கரூர் மாவட்டத்தில் முன்னோடியான திட்டங்கள் செயல்படுத்தி வருவதற்கு எடுத்துக்காட்டு.

கரூர் மாவட்டம் முன்மாதிரியான திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாட்டிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கரூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் மீதும், தங்கள் உழைப்பின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையால் கரூர் மாவட்டம் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கிறது. குறிப்பாக செந்தில் பாலாஜி எந்த செயலை முன்னெடுத்தாலும், அதில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் செய்து முடிக்கிறார். அதற்கு ஆதாரமாக நீங்கள் இங்கு திரண்டு இருப்பதே சாட்சி.

கரூர் மாவட்டத்தில் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் அரசியல் பயணத்தை கருணாநிதி தொடங்கினார். நானும் எனது அரசியல் பயணத்தை குளித்தலையில் தொடங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டி இருந்ததால், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.

கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் உள்பட கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பலமுறை வருகை புரிந்து இருந்தாலும், அமைச்சராகப் பொறுப்பேற்று முதல் முறையாக கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறேன். இந்தியாவுக்கு முன்னுதாரணமாக திராவிட மாடல் ஆட்சி வழங்கி வரும் திமுக அரசுக்கு, கடந்த ஐந்து ஆண்டுகளில் கரூர் மாவட்டத்தில் நடந்த அனைத்துத் தேர்தலிலும் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது.

கரூர் நகரம் ஒரு தொழில் நகரம் ஆகும். இங்கு லாரி, பஸ், கூண்டு கட்டும் தொழில், கொசுவலை உற்பத்தி, விவசாயம் என உழைக்கும் மக்கள் நிறைந்த நகரமாக உள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றவுடன் கடந்த ஆட்சி காலத்தில் கிடப்பில் போடப்பட்ட விவசாயிகளின் கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்து, ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இரண்டு கட்டமாக இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் கரூர் மாவட்டத்தில் மட்டும் 3,450 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவசப் பேருந்து பயணத் திட்டத்தில் இதுவரை 250 கோடி மகளிர் பயணித்துள்ளனர். இந்த திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 31 கோடி மகளிர் இலவசப் பேருந்து பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தில் முதல் கட்டமாக, 1.5 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றனர். தற்போது இந்த திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு 2 லட்சம் மாணவர்கள் காலை சிற்றுண்டி திட்டத்தால் பயன் பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.

இதனால் அரசுப் பள்ளியில் பயின்று உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் 1,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்றார். இந்த நிகழ்ச்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ (அரவக்குறிச்சி), மாணிக்கம் (குளித்தலை), சிவகாமசுந்தரி (சிவகாமசுந்திரி) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'குவாரி வேண்டாம்; வாடும் பயிருக்கு தண்ணீர் திறங்க' - கரூர் விவசாயிகளின் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.