ETV Bharat / state

முதலமைச்சர் கரூர் மாவட்ட ஆட்சியரை விசாரிக்க வேண்டும் - தென்னிலை ராஜா விளக்கம்

author img

By

Published : Jun 18, 2023, 2:19 PM IST

கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், விவசாயியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வேன் என்று மிரட்டிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்க அறிக்கை கொடுத்திருந்தார். இந்நிலையில், அவரின் விளக்க அறிக்கைக்கு, தென்னிலை ராஜா பதிலளித்துள்ளார்.

Thennialai raja & distric collector
தெல்லிலை ராஜா & மாவட்ட ஆட்சியர்

கரூர்: கரூர் மாவட்டம், தென்னிலையைச் சேர்ந்த விவசாயி ராஜாவை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மிரட்டியதாக சமீபத்தில் ஒரு ஆடியோ வைரல் ஆனது. இந்நிலையில், இதுகுறித்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அளித்த விளக்கம், 'ராஜா என்பவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து விடுவேன் என மிரட்டியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இது குறித்து விளக்கம் அளிக்க இந்தப் பதிவு அவசியமாகிறது. செய்திகளில் சொல்லப்படும் உரையாடல் என்பது உண்மைதான் என்றாலும் அது முழுமையானது அல்ல என்றும் திரிக்கப்பட்டது என்றும் முதற்கண் தெரிவிக்கப்படுகிறது.

கரூர் மாவட்டம், தென்னிலை, மேல்பாகம் கிராமத்தைச் சேர்ந்த திரு.ராஜா த/பெ ராசப்பன் என்பவர் கடந்த பல ஆண்டுகளாகவே சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வருபவர் ஆவார். அவர் மீது கரூர் மாவட்டத்தில் உள்ள தென்னிலை மற்றும் கரூர் நகர காவல் நிலையங்களிலும் மதுவிலக்கு பிரிவிலும், இன்னும் பதினைந்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவற்றில் பத்து வழக்குகள் கடுமையான பிரிவுகளில் போடப்பட்டது ஆகும்.

மேலும் இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகளையும் தொழில் முனைவோரையும் தொடர்ந்து மிரட்டி வருவதாகப் பல்வேறு புகார்கள் வரப் பெற்றுள்ளன. மேலும் இவர் மீது 107 சி.ஆர்.பி.சி பிரிவின் கீழ் விசாரிக்க கரூர் வருவாய் கோட்டாட்சியர் மூன்று முறை சம்மன் அனுப்பியும் இதுவரை ஆஜராகவில்லை. இது குறித்து கரூர் வருவாய் கோட்டாட்சியர், கரூர் மாவட்ட துணை கண்காணிப்பாளருக்குப் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் க.பரமத்தி வட்டாரத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மின்சார வாரியத்தால் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது. மொத்தம் 48 இடங்களில் 41 இடங்களில் கோபுரம் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இப்பணியை தடை செய்ய வேண்டும் எனக் கூறி ராஜா தொடர்ந்து அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து வந்தார்.

மேலும் உயர் நீதிமன்றத்தில் அவரால் வழக்குத் தொடரப்பட்டதில் மாவட்ட ஆட்சியர் விசாரித்து உத்தரவிட மாண்புமிகு நீதிமன்றம் பணித்துள்ளது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களை நேரில் அழைத்து விசாரிக்கப்பட்டு, பணி தொடர்வதற்கு உத்தரவு அளிக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் மாவட்ட ஆட்சியரிடம் அலைபேசியில் பேசியபோது, அவர் மீது உள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அதை ராஜா தவறாக திரித்து விவசாயிகள் எதிர்க்கும் மின் கோபுரம் அமைக்கும் பணியை கைவிட ஆட்சியர் மிரட்டியதாக தவறாக சித்தரித்து, ஒரு ஆடியோவை ராஜா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கும் பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட்டு அவர்களின் நியாயமான கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றன என்பதை பல்வேறு சங்கத்தினரும் பாராட்டி உள்ளனர். விவசாயி என்ற போர்வை போர்த்திக்கொண்டு தொடர்ந்து தவறு இழைத்து வருவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையிலேயே ராஜா என்பவருக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. அவர் மீதுஉள்ள புகார்களின் அடிப்படையில் கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று கரூர் ஆட்சியர் பிரபு சங்கர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து விவசாயி ராஜா விளக்கம் ஒன்றை அறிவித்துள்ளார். அந்த விளக்கத்தில், “கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் குரல் பதிவு வெளியானதும், அது தொடர்பாக பத்திரிகையாளர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கேட்ட பொழுது, பாரதி சிமென்ட் நிறுவனத்திடம் இருந்தும் மின் தொடரமைப்பு கழக ஒப்பந்ததாரர்களிடம் இருந்தும், தான் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறியுள்ளார்.

அது தொடர்பாக கீழ்க்கண்ட விளக்கங்களை அளிக்க கடமைப்பட்டுள்ளேன். கரூர் மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டது போல், அது பாரதி சிமென்ட் அல்ல சத்யா சிமென்ட் நிறுவனம். அது தன்னுடைய நிலமான தென்னிலை மேற்கு கிராமம் புல எண்.446 வடபுற எல்லையில் அமைந்துள்ளது.

இதனால் மற்ற விவசாயிகளை விட மிகக் கடுமையான பாதிப்பு எனக்கு ஏற்படுகிறது. இந்த சிமென்ட் தொழிற்சாலை இயங்கும் பொழுது 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மாசு ஏற்படும். எனவே அந்த இடத்தை சுற்றியுள்ள அனைத்து விவசாயிகளும் சேர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

அந்தப் போராட்டத்தை எதிர்த்து சத்யா சிமென்ட் நிறுவனம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு வழக்குத் தொடர்ந்தது. வழக்கு எண் WP MD no.13369 of 2023 and WMP MD No.11342 of 2023 அந்த வழக்கில், நீதிமன்றமே வழக்கு தவறான நோக்கத்தில் தொடரப்பட்டது என்று தீர்ப்பளித்து சத்யா சிமென்ட் நிர்வாகத்திடம் 25,000 ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு நீதியரசர் வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

மேலும் இந்த சிமென்ட் தொழிற்சாலை ஆனது ஊராட்சி நிர்வாகத்திடமிருந்து கட்டட அனுமதி பெறவில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் தொழிற்சாலையின் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கட்டுமானம் இன்று வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அனுமதி இல்லாமல், சட்டவிரோதமாக செயல்பட்டுவரும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர் என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை எடுத்து வைக்கிறார்கள். மேலும் க.பரமத்தி அருகே உள்ள ஆண்டி செட்டிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து தென்னிலை கரை தோட்டம் வரை துணை மின் நிலையம் அமைப்பதற்கு உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வரும், 110 கே.வி மின் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் 28 விவசாயிகள் 05-05-2023 அன்று கைதானார்கள்.

இந்தத் திட்டத்தினால் தன்னுடைய ஒரு ஏக்கருக்கு மேற்பட்ட விளைந்து கொண்டிருக்கும் கத்தரி செடியும் முருங்கை மரங்களும், 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும், மூன்று ஆழ்துளைக் கிணறுகளும் ஒரு கிணறும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மின் திட்டத்திற்குப் பிறகு என்னால் விவசாயமே செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நான் ஒரு முழுநேர விவசாயி. காய்கறி பயிரிட்டு உழவர் சந்தையில் அதை விற்று அதன் மூலம் வரும் வருமானமே எனது வாழ்வாதாரமாகும்.

மேலும், இதற்காக நான் மட்டுமே போராடவில்லை. நான் மட்டுமே உண்ணாவிரதம் இருக்கவில்லை. மற்ற இரண்டு விவசாயிகளும் உண்ணாவிரதம் இருந்துள்ளார்கள். அவர்களிடமும் மாவட்ட நிர்வாகம் கடுமையாக நடந்து கொண்டுள்ளது. இது தொடர்பான செய்தி அனைத்து ஊடகங்களிலும்,செய்தித்தாள்களிலும் வெளியாகி உள்ளது.

அதிகாரிகள் தவறு செய்யும்போது அதை விவசாயி தான், தட்டிக் கேட்டால் பொய் வழக்குப் புனைகிறார்கள். ஒவ்வொரு முறையும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் என்னை நேரில் ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பிவிட்டு அன்றைய தினம் என்னை காவல் துறை கைது செய்து அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். பிறகு எப்படி நான் நேரில் ஆஜராக முடியும். வழக்கறிஞர் மூலம் வக்காலத்து கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு அரசிடம் ஏதேனும் கோரிக்கை வைத்தால், போராட்டங்கள் நடத்தினால் விவசாயி என்ற போர்வையில் தவறு செய்வதாக சித்தரிக்கப்படுகிறது. எனவே என்னை குண்டர் சட்டத்தில் அடைப்பேன் என்று தொலைபேசியில் மிரட்டி விட்டு அந்த ஆடியோ ஊடகங்களில் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் தற்பொழுது தன்னை நியாயப்படுத்திக் கொள்வதற்காகக் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உண்மைக்கு புறம்பான தகவல்களை ஒன்றை விளக்க அறிக்கையாக ஊடகங்களுக்கு அளித்துள்ளார்.

எனவே, தமிழக முதலமைச்சர் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் மீது, உரிய விசாரணை செய்து, உண்மையை கண்டறியும் வகையில் நேர்மையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார் கரூர் தென்னிலை பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜா.

இதையும் படிங்க: ”நீ எல்லா இடத்திலேயும் பிரச்னை பண்ற, உன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பேன்” - விவசாயியை மிரட்டிய கரூர் கலெக்டர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.