ETV Bharat / state

கரூரில் ஒப்பந்தப் பணியாளர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டம்: அரசு கண்டுகொள்ளுமா?

author img

By

Published : Jul 12, 2023, 3:04 PM IST

கரூர் மாநகராட்சியில் பணியாற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் அதிகாலைப் பணிகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Corporation Contract workers protest in Karur
கரூரில் ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம்

கரூரில் ஒப்பந்த பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

கரூர்: கரூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஊதியத்தை ஒப்பந்ததாரர் வழங்க மறுப்பது கண்டித்தும், பணி நேரத்தின்போது தூய்மைப் பணியாளர்களை ஒப்பந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளர்கள் மரியாதை குறைவாக நடத்துவதை கண்டித்தும் (இன்று ஜூலை 12ஆம் தேதி) காலை முதல் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்காவது மண்டலம் அமைந்துள்ள தான்தோன்றிமலை மண்டல அலுவலகம் முன்பு இன்று காலை 6 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட கரூர் மாநகராட்சி ஒப்பந்தப் பணியாளர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, தான்தோன்றிமலையில் இருந்து சுங்க கேட், திருமாநிலையூர் லைட்ஹவுஸ் வழியாக ஊர்வலமாகப் பணியினை புறக்கணித்து, தூய்மைப் பணியாளர்கள் கரூர் மாநகராட்சி அலுவலகம் நோக்கி வந்தனர்.

அப்போது கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்யேகப்பேட்டி அளித்த ராசு கூறுகையில், "கரூர் மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளர்கள் மரியாதை குறைவாக ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர்களால் தினம்தோறும் நடத்தப்படுகின்றனர். விடுமுறைக்கு ஊதிய பிடித்தம் மேற்கொள்வது, பணியின்போது மரியாதை குறைவாகப் பேசுவது எனப் பல்வேறு வகையில் தூய்மைப் பணியாளர்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று மாதம் 12 நாட்கள் ஆயினும் இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு மாதமும் ஒப்பந்ததாரர் முறையாக ஊதிய நாளில் ஊதியம் வழங்குவது இல்லை. சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி முறையாக செலுத்தப்படுவதில்லை. அதற்கான உரிய ஆவணங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து மாநகராட்சியிடம் கோரிக்கை மனு அளித்த தூய்மைப் பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தூய்மைப் பணியாளர்களுக்கு, கரூர் மாநகராட்சியில் வழங்க வேண்டிய குறைந்தபட்ச கூலித் தொகையை ஒப்பந்த நிறுவனம் வழங்க மறுத்து வருகிறது. மேலும் 8 மணி நேர வேலை எனக்கூறி 12 மணி நேரம் வேலை செய்ய நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள்.

எனவே, இதனைக் கண்டித்து, இன்று கரூர் மாநகராட்சியில் உள்ள நான்கு மண்டலங்களில் பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் பணியினை புறக்கணித்து, கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்" எனத் தெரிவித்தார்.

மேலும் கரூர் மாநகராட்சியில் நகராட்சியாக இருந்தபொழுது சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் அனைத்து ஒப்பந்தப் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; கரூர் மாநகராட்சி புதிதாக வழங்கியுள்ள ஒப்பந்த நிறுவன உரிமையை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இந்த போராட்டத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக சிஐடியு கரூர் மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், சிஐடியு கரூர் மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட அமைப்பு செயலாளர் மாறன், மாநகராட்சி நிரந்தர பணியாளர் முருகன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Kanal kannan: கனல் கண்ணனை அவசரம் அசரமாக கைது செய்தது துரோக செயல் - இந்து முன்னணி கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.