ETV Bharat / state

முருங்கைக்காய் பறிக்கச் சென்ற இளம்பெண் மாடியிலிருந்து விழுந்து உயிரிழப்பு!

author img

By

Published : Jun 15, 2021, 4:21 PM IST

கன்னியாகுமரி: அகஸ்தீஸ்வரம் அருகே வீட்டு மாடியில் முருங்கைக்காய் பறிக்கச் சென்ற இளம்பெண் கால் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

Young woman dies after falling from terrace
Young woman dies after falling from terrace

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகிலுள்ள விஜயநகரியைச் சேர்ந்தவர் அம்மாபழம் (56). இவரது கணவர் தங்கதுரை. இவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு செல்வ சரண் (34) என்ற மகனும், செல்வ அஜிதா என்ற மகளும் (31) உள்ளனர்.

செல்வா அஜிதாவிற்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு அகஸ்தீஸ்வரம் அருகிலுள்ள கருங்குளத்தான் விளையைச் சேர்ந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை பார்க்கும் ராஜன் என்பவருடன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. செல்வஅஜிதா கருங்குளத்தான் விளையிலுள்ள தன்னுடைய கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அம்மாபழம் தன்னுடைய மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக கருங்குளத்தான் விளையிலிருந்து தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இந்நிலையில், செல்வாஅஜிதா முருங்கைக்காய் பறிப்பதற்காக வீட்டு மாடிக்குச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி 15 அடி உயர மாடியிலிருந்து கீழே விழுந்தார்.

படுகாயம் அடைந்த அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஜூன் 15)உயிரிழந்தார். இதுகுறித்து தென்தாமரைகுளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.