ETV Bharat / state

ஆன்லைன் பண மோசடி செய்த இரண்டு நைஜீரியா நாட்டு இளைஞர்கள் கைது; போலீசிடம் சிக்கியது எப்படி?

author img

By

Published : Jun 18, 2023, 12:00 PM IST

நாகர்கோவிலைச் சேர்ந்த பெண்ணிடம் 22 லட்சம் ரூபாய் மோசடி செய்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட நைஜீரியா நாட்டு இளைஞர்கள்
கைது செய்யப்பட்ட நைஜீரியா நாட்டு இளைஞர்கள்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி போன்ற சட்ட விரோதச் சம்பவங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. சமீபத்தில் வீடுகளை நோட்டமிட்டு சாமியார் வேடம் அணிந்தும், குறி சொல்வதை போலவும் வந்து கொள்ளை அடித்து செல்லும் சம்பவங்களும் அதிகம் நடைபெற்று வருகின்றன. இதே போல மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் முகமூடி கொள்ளையர்களின் நடமாட்டமும் உள்ளது.

மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெண்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருகிறது, பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்குவது, பொது இடத்தில் நடமாடும் பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி உள்ளது. இந்தச் சம்பவங்கள் காரணமாக பட்டப்பகலில் கூட பெண்கள் சாலையில் நடமாட முடியாத அளவிற்கு மிகவும் மொசமான நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுமட்டும் இன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் கடந்த சில காலமாக ரவுடிகளின் தொல்லையும் அதிகரித்து உள்ளது. இதனால், பொதுமக்கள் இரவு நேரங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கும் வெளியில் வர அச்சப்படும் சூழ்நிலை உள்ளது. இதனிடையே தற்போது புதிதாக பெண்களை குறிவைத்து சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெற தொடங்கி உள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், "இணைய வழியை பயன்படுத்தி தனக்கு விலை மதிப்பு மிக்க பரிசு பொருள்களை பார்சலில் அனுப்பி வைப்பதாக கூறி சுமார் 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை ஏமாற்றி விட்டனர்" என்று கூறியிருந்தார்.

இந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 'ஹரி கிரண் பிரசாத்' (Kanyakumari District Superintendent of Police Hari Kiran Prasad) சைபர் கிரைம் போலீசாருக்கு (Cyber Crime Police) உத்தரவிட்டார் . இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர் விசாரணையில் செல்போன் சிக்னல் மூலம் குற்றவாளிகள் டெல்லியில் இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து, ஆய்வாளர் வசந்தியின் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் டெல்லிக்கு சென்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பாஸ்கல் பங்கோரா (36) மற்றும் மார்டின் டபேரி (24) ஆகியோரை டெல்லி மாநிலம் துவாரகா மாவட்டத்தில் வைத்து சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து விசாரணையை தொடங்கி உள்ளனர். மேலும், இவர்களிடமிருந்து மோசடி செய்ய பயன்படுத்திய 22 மொபைல் போன்கள், 26 சிம் கார்டுகள் மற்றும் 16 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: Hijavu Scam: ஹிஜாவு மோசடியில் தம்பதி கைது: ரூ.500 கோடி சுருட்டியது அம்பலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.