ETV Bharat / state

இத்தாலி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க கோரிக்கை

author img

By

Published : Jan 5, 2021, 6:59 PM IST

இத்தாலி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு சர்வதேச தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின்படி நஷ்ட ஈடு பெற்றுத்தரக் கோரி தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் பாதிரியார் சர்ச்சில், மீனவர்கள் சார்பில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

மீனவர்களுக்கு சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பு படி நஷ்ட ஈடு
மீனவர்களுக்கு சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பு படி நஷ்ட ஈடு

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம், தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் பாதிரியார் சர்ச்சில் மற்றும் மீனவர்கள் சார்பில், இத்தாலி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு சர்வதேச தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி, நஷ்ட ஈடு பெற்றுத்தரக் கோரி மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில், ”கன்னியாகுமரி மாவட்டம் பூத்துறை கிராமத்தை சேர்ந்த பிரெடி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், குமரி மாவட்டத்து மீனவர்கள் பத்து பேர் கேரளாவை சேர்ந்த ஒரு மீனவர் ஆகியோர் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இத்தாலி நாட்டு சரக்கு கப்பலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இத்தாலி படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் விசைப் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மாவட்டத்தை சார்ந்த அஜிஸ் பின்க் என்ற மீனவரும் , கேரளா மாநிலத்தை சேர்ந்த ஜாலஸ்டின் என்ற மீனவரும் கொல்லப்பட்டார்கள்.

இதில் உடன் மீன் பிடித்துக் கொண்டிருந்த குமரி மாவட்டம் இரையுமந்துறையை சேர்ந்த கிலைமன்ஸ், கில்சரியான், ஹில்லாரி, பிரான்சிஸ், ஜான்சன், முத்தப்பன் மற்றும் பூத்துறை மீனவர் கிராமத்தைச் சார்ந்த மார்டின், மிக்கேல் அடிமை ஆகிய மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். அவர்கள் அனைவரும், சம்பவம் நடந்து எட்டு வருடங்கள் தாண்டியும் மனதளவில் பாதிக்கப்பட்டு இன்றும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல இயலாமல் அச்சத்தில் இருக்கிறார்கள்.

இந்தத் துப்பாக்கிச் சூடு வழக்கில், படகு உரிமையாளர் பிரெடி மட்டுமே சாட்சியாக சேர்க்கப்பட்டார். சக மீனவர்கள் யாரும் சாட்சியாக சேர்க்கப்படவில்லை . துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர்கள் குடும்பத்தார் இத்தாலி அரசு மீது வழக்கு தொடர்ந்தபோது கொல்லப்பட்ட மீனவர்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் இத்தாலி அரசு வழங்கியது. அது போன்று படகு உரிமையாளருக்கு 17 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.

இந்திய அரசு தொடர்ந்த வழக்கில் சர்வதேச தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின்படி 10 கோடி ரூபாய் பெறப்பட்டது. இந்த 10 கோடி ரூபாயில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 கோடி வீதம் 8 கோடியும், படகு உரிமையாளருக்கு இரண்டு கோடியும் வழங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட சக மீனவர்கள் யாருக்கும் எந்த நஷ்ட ஈடு தொகையும் வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது. எனவே இறந்துபோன மீனவர்களுக்கு வழங்கப்படுவது போல், துப்பாக்கி சூடு சம்பவத்தில் உடனிருந்து பாதிக்கப்பட்ட சக மீனவர்களுக்கும் உரிய இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு மூலம் தமிழக அரசு பெற்று மீனவர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் எருமை மாடுகள் பங்கேற்க அனுமதி: மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து சர்ச்சைக்குரிய சுவரொட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.