ETV Bharat / state

திம்மசமுத்திரம் கொள்ளைச் சம்பவம்: உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்க!

author img

By

Published : May 1, 2021, 6:31 AM IST

காஞ்சிபுரம்: திம்மசமுத்திரம் அருகே சித்தேரிமேடு கிராமத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் உண்மைக் குற்றவாளிகளைக் கைதுசெய்ய வலியுறுத்தி அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம்
காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம்

காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் அருகே சித்தேரிமேடு கிராமத்தில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதியன்று இரவு, ரயில்வே துறையில் கேட் கீப்பராக பணிபுரியும் துரையரசன் என்பவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவிலிருந்த நெக்லஸ், ஆரம், செயின், கம்மல், வெள்ளி என சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 60 சவரன் தங்க நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக துரையரசன் பாலுச்செட்டிசத்திரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இந்நிலையில் சித்தேரி மேடு கிராமத்தினர் காஞ்சிபுரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிமேகலையைச் சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில்,

"துரையரசன் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக காவல் துறையினர் சித்தேரி மேடு இளைஞர்களை இரவு நேரத்தில் காவல் நிலையத்துக்கு விசாரணை என்ற பெயரில் வரச்சொல்லி துன்புறுத்துகின்றனர்.

இதனால் இளைஞர்கள் அன்றாட பிழைப்புக்காக கூலி வேலைக்குச் சென்று பிழைப்பதற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.

அண்மையில் துரையரசன் மகன் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டவர்களையும், அவரது வீட்டில் குடியிருந்துவரும் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களையும் விசாரித்தால் உண்மை தெரியவரலாம்.

எனவே சம்பவத்தில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும். தேவையில்லாமல் கிராமத்தில் வசித்துவரும் இளைஞர்களைத் துன்புறுத்தாமல் இருக்க அறிவுரை வழங்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.