ETV Bharat / state

பரந்தூர் ஏர்போர்ட் பிரச்சனைக்கு தீர்வு இருக்கு - அன்புமணி கூறியது என்ன?

author img

By

Published : Nov 30, 2022, 5:32 PM IST

அன்புமணி
அன்புமணி

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலரும் தற்கொலை செய்துவருகின்றனர், இதனை தடை செய்ய வேண்டும் என அரசு முடிவு செய்தும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காதது வேதனை அளிக்கிறது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம்: சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், பாட்டாளி மக்கள் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துக் கொண்டு நிர்வாகிகள் மத்தியில், கட்சி வளர்ச்சி குறித்து பேசினார். மேலும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி ஆரம்பம் முதலே போராடி வருகிறது. தடை செய்ய வேண்டும் என அரசு முடிவு செய்தும் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது, வேதனை அளிக்கிறது.

முதலமைச்சருக்கும், ஆளுநருக்கு பிரச்சினை என்றால், மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும். இந்த நான்கைந்து ஆண்டுகளில் , எங்களுக்குத் தெரிந்து 85 பேருக்கு மேல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தெரியாமல் 500க்கும் மேற்பட்டவர்கள் இருக்கலாம். இந்த 15 மாதத்தில் மட்டும் 35 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ்

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது அவசியமானது. இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியும் வலியுறுத்தி இருந்தது. ஆனால் அதை எங்கே அமைக்கிறோம் என்பது தான் கேள்வி, தமிழ்நாடு அரசு 6 இடங்கள் தேர்வு செய்து வைத்திருந்தது. இது தொடர்பாக பாமக சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது, மக்கள் எல்லாம் கருத்துக்கள் கேட்கப்பட்டிருக்கிறது, எங்களிடம் கருத்துக்களை பெற அரசிடம் தெரிவித்திருந்தோம்.ஆனால், அரசு இதுவரை எங்களை அழைக்கவில்லை” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், திருப்போரூர் அருகே உப்பளம் பகுதியில் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான, 5000க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பயன்படுத்தாமல் இருக்கிறது. அந்த இடத்தில் விவசாயம் பண்ண முடியாது என்பதால் அந்த இடத்தில் விமான நிலையம் அமைக்க முடியும், அந்த இடத்தில் விமான நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு ஆய்வு செய்து, மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும்.

தமிழ்நாட்டில் போதைப் பொருள் விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் அதிகளவு இளைஞர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதை தடுத்து நிறுத்த பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முதலமைச்சர், போதை பொருள்களை தடை செய்ய ஒரு முறை கூட்டம் நடத்தினார். அதன் பிறகு 10 நாள்கள் வேலை செய்தார்கள். ஆனால், மீண்டும் போதைப்பொருள் விற்பனை நடைபெற்று தான் வருகிறது.

முதலமைச்சர், இது குறித்து மாதம் ஒரு கூட்டம் நடத்தி, காவல் துறை அதிகாரிகள் கண்டித்துடன் இருக்க உத்தரவிட வேண்டும். போதைப் பொருள் விற்பனை நடைபெற்றால், அந்த பகுதியில் இருக்கும் உதவி ஆய்வாளரை பணி நீக்கம் செய்யக்கூட தயங்க கூடாது. இதே நிலை தொடர்ந்தால் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளை விட மிக மோசமான நிலைக்கு தமிழ்நாடு சென்று விடும்" என்றார்.

இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கு: சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.