ETV Bharat / state

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து - பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

author img

By

Published : Mar 23, 2023, 7:02 AM IST

காஞ்சிபுரம் அருகே நேர்ந்த பட்டாசு ஆலை கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்து உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் தொழிலாளர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

காஞ்சிபுரம்: குருவிமலை அடுத்த வளதோட்டம் பகுதியில் நரேந்திரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு அருகிலேயே குடோன் உள்ளது. ஆலையில் தயாரான பட்டாசுகள் இங்கு சேமித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. . 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த பட்டாசு ஆலையில் கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தக்கூடிய அதிர்வேட்டுகள், வண்ண பட்டாசுகள், சிறிய ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

குருவிமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பட்டாசு ஆலையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று (மார்ச். 22) வழக்கம் போல் வெடி மருந்து தயாரிப்பது, அதனை நிரப்புவது, திரி தயாரிப்பது உள்ளிட்ட வேலைகளில் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.

அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பட்டாசு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மூலப் பொருட்களில் பற்றிய தீ மெல்ல ஆலை முழுவதும் பரவியது. இந்த பயங்கர வெடி விபத்தில் பணியில் இருந்த 25-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சிக்கினர். பட்டாசு ஆலையில் இருந்த 4 கட்டிடங்களும் இடிந்து தரைமட்டமாகின.

வெடி விபத்து குறித்து தகவல் அறிந்து 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக போராடி வீரர்கள் தீயை அணைத்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பொக்லைன் எந்திரம் மூலம் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்த தொழிலாளர்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குகு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு தொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர். இந்த கோர வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இதேபோல் காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 5 பேரும், செங்கல்பட்டு மருத்துவமனையில் ஒருவரும் இறந்தனர். இந்த விபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தீவீர சிகிச்சப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் 11 பேரை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதேபோல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை தொழிலாளர் நலத்துறை மட்டும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இதற்கிடையே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆலையின் உரிமையாளர் நரேந்திரனை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிங்க: காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்து; அமைச்சர் ஆய்வு - முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.