ETV Bharat / state

திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு: பெண் எரித்துக் கொலை!

author img

By

Published : Feb 12, 2021, 9:57 AM IST

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே திருமண பந்தத்தைத் தாண்டிய உறவால் பெண் எரித்துக் கொலைசெய்யப்பட்டார்.

பெண் எரித்துக் கொலை
பெண் எரித்துக் கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு பாதி எரிந்த நிலையில் அடையாளம் காண முடியாத அளவிற்குப் பெண்ணின் சடலம் இருப்பதாக சங்கராபுரம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அந்த உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், இது குறித்து தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் உடனடியாக இறந்த பெண் யார் என்பது குறித்தும், இறப்பு குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பெயரில், திருக்கோவிலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜி.கே. ராஜு மேற்பார்வையில் சங்கராபுரம் ஆய்வாளர், நான்கு உதவி ஆய்வாளர்கள், குற்றப்பிரிவு காவலர்கள் எனத் தனிப்படைகள் அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்த விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த முருகேசனின் மனைவி வெண்ணிலா என்பவர் காணாமல்போனது தெரியவந்தது.

பின்னர் மேற்கொண்ட விசாரணையில், வெண்ணிலாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத ரஜினிகாந்த் என்பவருக்கும் இடையே திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு இருந்தது தெரியவந்தது. பின்னர் இறந்துபோன வெண்ணிலாவின் செல்போன் எண்ணை பரிசோதனை செய்ததில், ரஜினிகாந்தின் செல்போனிலிருந்து வெண்ணிலாவின் செல்போன் எண்ணிற்கு பலமுறை அழைப்புகள் சென்றதும் இருவரும் பேசிவந்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து தனிப்படை காவல் துறையினர் ரஜினிகாந்தை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் ரஜினிகாந்த் வெண்ணிலாவை கொலைசெய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், வெண்ணிலா ரஜினிகாந்திடம் திருமணம் செய்துகொள்ளாமல் தன்னுடன் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வெண்ணிலா தனக்குச் சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை அடைமானம் வைத்து இரண்டு லட்சம் ரூபாய் ரஜினிகாந்துக்கு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. தன்னிடமிருந்து பெற்ற பணத்தை உடனே திருப்பித் தர வேண்டும் இல்லையேல் திருமணம் செய்துகொள்ளாமல் தன்னுடனே வாழ வேண்டும் என வெண்ணிலா ரஜினிகாந்தை வற்புறுத்தியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த ரஜினிகாந்த் வெண்ணிலாவை கொலைசெய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதனையடுத்து, சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள முள்புதரின் அருகே திட்டமிட்டபடி வெண்ணிலாவை அழைத்துச்சென்று உடலுறவில் ஈடுபட்டுள்ளார். மேலும் தமது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த மதுவையும் வெண்ணிலாவுக்கு ஊற்றி குடிக்கவைத்து, அவரை மயக்கமடையச் செய்துள்ளார்.

இதில் மயக்கமடைந்த வெண்ணிலாவை தமது வாகனத்தில் மறைத்துவைத்திருந்த இரும்பு ராடால் பின்னந்தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த வெண்ணிலாவை தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலைப் பிடித்து அவர் மீது ஊற்றி பற்றவைத்துள்ளார்.

பின்னர் வெண்ணிலாவின் செல்போனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார். அதில் கடைசியாக வெண்ணிலா பயன்படுத்திய செல்போன் எண்ணை கொண்டு குற்றவாளியைப் பிடித்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலை நடந்த நான்கு நாள்களில் குற்றவாளியைப் பிடித்த தனிப்படை காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் வெகுவாகப் பாராட்டி வெகுமதி அளித்தனர்.

இதையும் படிங்க: சீர்காழி இரட்டை கொலை வழக்கு குற்றவாளிகளை காவல்துறை விசாரிக்க அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.