பள்ளி செல்ல பேட்டரி வாகனம் வேண்டும் - ஆட்சியரிடம் கண்ணீர் மழ்க மனு அளித்த மாணவர்!

author img

By

Published : Jul 5, 2023, 10:56 PM IST

'நானும் படிக்க வேண்டும்’ மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த மாணவன் கார்த்திகேயன் !

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு படித்து வரும் மாற்றுத்திறனாளி மாணவர், பள்ளி சென்று வர யாருடைய துணையாவது தேவைப்படுவதால் தனக்கு பேட்டரி வாகனம் வாங்கித் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ஈயனூர் கிராம பகுதியைச் சேர்ந்தவர் பூமாலை. இவரது மகன் கார்த்திகேயன் (15). மாற்றுத்திறனாளியான இவர் சுமார் மூன்றரை அடி உயரத்துடன் உடல் வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளார். இவர் எஸ். ஒகையூர் கிராம பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கார்த்திகேயனுக்கு அவருடைய உடல் வளர்ச்சியை பற்றிய கவலை இருந்தாலும் தான் படிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். படித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்கிற எண்ணம் அவருக்குள் இருந்தாலும் பள்ளிக்கு தினசரி சென்றுவர அவருக்கு ஒரு துணை தேவைப்படுகிறது. இது நாள் வரை அவருடைய தினசரி பள்ளி வகுப்பிற்குச் செல்ல அவரது பெற்றோரில் யாரேனும் ஒருவர் உடன் சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில் மாற்றுத்திறனாளி மாணவரான கார்த்திகேயன், தான் தினசரி பள்ளிக்குச் சென்று வர தனக்கு மின்சார வாகனம் வழங்க வேண்டு என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்க காத்திருந்தார்.

இதையும் படிங்க: 8-ஆம் வகுப்பிலேயே எழுத்தாளர்.. கலைத்துறையில் கலக்கும் அரசு பள்ளி மாணவி மோனிகா!

இந்நிலையில் மாணவன் கார்த்திகேயன் தன்னிடம் மனு அளிக்க வந்திருப்பதை அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் மாணவரிடம் நேரடியாக சென்று அவரின் அருகில் அமர்ந்து அவருடைய கோரிக்கைகள் என்னவென்று கேட்டறிந்தார். அப்போது சிறுவன் கார்த்திகேயன், தான் தினசரி பள்ளிக்குச் சென்று வர யாருடைய துணையாவது தேவைப்படுகிறது என்றும் தனக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்தால் பள்ளி சென்று வர உதவியாக இருக்கும் என்ற கோரிக்கையை அழுது கொண்டே மாவட்ட ஆட்சியரிடம் முன் வைத்தார். மாணவன் கார்த்திகேயன் கூறுவதை மாவட்ட ஆட்சியர் கூர்ந்து கவனித்தார்.

பின்னர் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கலந்தாலோசித்த அவர், “மின்சார இருசக்கர வாகனம் இயக்குகின்ற அளவிற்கு சிறுவனின் உடல் திறன் இல்லை என்றாலும் சிறுவனின் எதிர்காலம் மற்றும் படிக்க வேண்டும் என்கிற அவரின் ஆர்வத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்குச் சென்று வர மாற்று வாகனம் ஏதாவது ஏற்பாடு செய்து அளிக்கலாம்" என கூறினார்.

மேலும் விரைவில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாணவன் பள்ளிக்குச் சென்று தன்னுடைய படிப்பினை தொடர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இந்நிலையில் அழுது கொண்டே மாவட்ட ஆட்சியரிடம் மாணவன் கார்த்திகேயன் கோரிக்கை மனு அளித்த நிகழ்வு அங்கே இருந்தவர்களை கண் கண்கலங்க செய்தது.

இதையும் படிங்க: உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டதாக ரேஷன் அட்டையில் பெயர் நீக்கம்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.