தந்தையை இழந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி பள்ளியில் 2ஆம் இடம்பிடித்த மாணவி!

author img

By

Published : May 21, 2023, 1:21 PM IST

தந்தையை இழந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திருக்கோவிலூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி, பொதுத்தேர்வின் போது தந்தையை இழந்த நிலையிலும் தேர்வெழுதி பள்ளியில் இரண்டாம் இடம் பிடித்து சாதித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே தசராபுரம் பகுதியில் வசித்து வந்தவர் முருகதாஸ். கூலித்தொழிலாளியான இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூன்றாவது மகளான திலகா அருகே உள்ள டேனிஷ் மிஷன் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த ஏப்ரம் மாதம் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்தது. அப்போது திலகாவும் தேர்விற்கு நன்றாகத் தயாராகி பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக முருகதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: தந்தை இறந்த சோகத்திலும் பொதுத்தேர்வு எழுதிய 10ஆம் வகுப்பு மாணவி!

தந்தையின் இழப்பில் மாணவி திலகா மிகவும் துவண்டு போயிருந்தார். இருந்த போதிலும் நன்றாகப் படிக்க வேண்டும் என்று தந்தை கூறிய சொல்லை மனதில் கொண்டவர், தந்தை மறைந்த 10ஆம் தேதி நடைபெற்ற ஆங்கிலத் தேர்வை மனம் தளராது உறுதியுடன் தேர்வு எழுத வந்தார். தந்தை இறந்த நிலையிலும் மாணவி திலக மன உறுதியுடன் தேர்வெழுதச் சென்றதும், உறவினர்கள் கண்ணீர் மல்க அவரை வழியனுப்பும் நிகழ்வும் அப்போது வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

வைரலான அந்த வீடியோவில், தந்தை இறந்த மறுநாளில் பள்ளிச் சீருடையை அணிந்து கொண்டு தேர்வெழுத தயாரான மாணவியை உறவினர்கள் கட்டித்தழுவி அழுது, தேர்வினை நன்றாக எழுத வேண்டும் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்திருப்பார்கள். மிகுந்த சோகத்தோடு தேர்வுக்குச் சென்ற மாணவி ஆங்கிலத் தேர்வையும் அடுத்தடுத்து நடைபெற்ற பிற தேர்வுகளையும் வெற்றிகரமாக எழுதி முடித்தார்.

இந்நிலையில் கடந்த மே 19ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில், தந்தை இறந்த மன சோகத்திலும் தேர்வுகளை எழுதிய மாணவி திலகா, 428 மதிப்பெண்கள் பெற்று டேனிஷ் மிஷன் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாம் இடத்தினைப் பிடித்து சாதித்துள்ளார்.

தந்தை உயிரிழந்த சோகத்திலும் மகள் தொடர்ச்சியாக தேர்வு எழுதி 428 மதிப்பெண்கள் பெற்றது, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் 428 மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து மாணவி திலகா கூறும்போது, ’’எனது தந்தை என்னை எப்போதுமே நன்றாக படித்து, அரசு துறைக்கு வேலைக்கு போக வேண்டும் எனக் கூறுவார். தற்போது அதுதான் என்னுடைய ஆசை” என நம்பிக்கையுடன் தெரிவித்தார், மாணவி திலகா

இதையும் படிங்க: தடை அதை உடை புது சரித்திரம் படை.. 56 வயதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.