ETV Bharat / state

ஈரோடு வனத்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு - ஒருவர் கைது, 4 பேர் தப்பியோட்டம்

author img

By

Published : Dec 9, 2022, 11:57 AM IST

ஈரோடு அருகே சென்னம்பட்டி வனச்சரகத்தில் வன விலங்குகளை வேட்டையாட சென்றவர்களில் ஒருவரை வனத்துறையினர் கைது செய்த நிலையில், 4 பேர் தப்பியோடினர்.

Etv Bharat
Etv Bharat

ஈரோடு: பர்கூர் வனப்பகுதி, சென்னம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலாறு பீட், வாளங்குழி பள்ளம் என்ற இடத்தில் துப்பாக்கியுடன் சிலர் வன விலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. தகவலறிந்த சென்னம்பட்டி வனச்சரகர் ராஜா தலைமையில் வனக்காப்பாளர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் என 9 பேர் அப்பகுதியில் நள்ளிரவில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 5 பேர் அடங்கிய வேட்டை கும்பலைக் கண்டறிந்தனர்.

தொடர்ந்து வனத்துறையினரின் எச்சரிக்கையை மீறி தப்பியோட முயன்றதோடு, வனத்துறையினர் மீது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதலிலும் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த வனத்துறையினரும் பதிலுக்கு முதலில் தரையை நோக்கி சுட்டு மீண்டும் எச்சரித்தனர்.

தொடர்ந்து வேட்டைக்காரர்கள் தப்பி ஓடினர். அப்போது, கோவிந்தபாடியைச் சேர்ந்த குமார் (40) என்பவரை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் தப்பி ஓடிய மற்றவர்கள் கோவிந்தப்பாடியைச் சேர்ந்த ராஜா(எ)காரவடையான், காமராஜ், செட்டிபட்டியைச் சேர்ந்த பச்சைக் கண்ணன், தர்மபுரி மாவட்டம் ஆத்து மேட்டூரைச் சேர்ந்த ரவி என்பதும் தெரியவந்தது.

இவர்கள் இரண்டு துப்பாக்கிகளுடன் மான்களை வேட்டையாட வனப்பகுதிக்குள் நுழைந்ததும் வனத்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த கும்பலில் தலைவனாக ராஜா (எ) காரவடையான் இருந்ததும் தெரியவந்தது. மேலும் இவர் ஏற்கெனவே, பல வன குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து குமாரை சம்பவ இடத்திற்கு அழைத்துச்சென்ற வனத்துறையினர் அங்கிருந்து கறி மருந்து, பால்ரஸ் குண்டுகள் மற்றும் மான் கறி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நான்கு பேரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையே இந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் (டிச.7) கர்நாடக வனப்பகுதியில் உள்ள மத்திய மரத்தூர் என்ற இடத்தில் வன விலங்குகளை வேட்டையாடி உள்ளதும் தெரிய வந்துள்ளது. இரு மாநில எல்லையில் வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வேட்டைக்காரர் ஒருவரைப் பிடித்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் சலூனில் நுழைந்து 2.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழிப்பறி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.