ETV Bharat / state

திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மாணவர்கள் வேலைக்குச் செல்கின்றனர்.. அதிகாரிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 11:56 AM IST

Minister Anbil Mahesh: ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக் கொண்டார்.

ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு..
ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு..

ஈரோடு: பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசுப் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று (நவ.21) ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பள்ளி வளாகம், வகுப்பறை, கழிப்பறை, குடிநீர் வசதி முறையாக உள்ளதா என்பது குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பள்ளிகளில் நிலவும் குறைகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

இதேபோல பெருந்துறை, மொடக்குறிச்சி, பவானி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர், அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் பேசினார்.

அப்போது பேசிய அவர், “அமைச்சர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அனைவரும் மிகவும் முக்கியமானவர்கள். ஏனென்றால், அரசு தீட்டும் திட்டங்கள் முறையாக கால அளவில் சென்று சேர வைப்பவர்கள் நீங்கள்தான்.

அதே போன்று, தங்களுக்கு வரும் கோப்புகளை உடனடியாக அனுப்புவது, பள்ளிக்கு வரும் பொருட்கள் முறையாக சென்று சேருகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் மாணவர்கள் வேலைக்குச் சென்று விடுகிறார்கள். அவர்களை கண்டறிந்து, வீடுகளுக்குச் சென்று பெற்றோர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பின்னர், மீண்டும் அந்த மாணவர்களை பள்ளிக்குக் கொண்டு வர வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் நல்ல முறையில் உள்ளது, முன்னேறி கொண்டே வருகிறது. அதனை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ஈரோடு மாவட்டத்தில் முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் உரையாற்றி உள்ளேன்.

தாங்களாகவே ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, ஈரோடு மாவட்டத்தில் இந்த ஆண்டு 100 சதவீத தேர்ச்சி அடையச் செய்ய வேண்டும். சமுதாயத்தில் மாணவர்கள் அடுத்த கட்டம் செல்வதற்கு நீங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: அரசுப் பள்ளிகளில் திறன் வழி மதிப்பீட்டு தேர்வு நடத்த அறிவுறுத்தல்; பிரிண்டர் பிரச்னை.. எமிஸ் பணிகளுக்கு இடையே இதுவுமா? - ஆசிரியர்கள் குமுறல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.