ETV Bharat / state

பாசன கால்வாயில் மீண்டும் கான்கிரீட் பணி; 2வது நாளாக விவசாயிகள் போராட்டம்

author img

By

Published : Jun 27, 2023, 3:28 PM IST

ஈரோடு, கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டாவது நாளாக விவசாயிகள் கால்வாயில் இறங்கிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாசன கால்வாயில் மீண்டும் கான்கிரீட் பணியின் காரணமாக 2வது நாளாக விவசாயிகள் போராட்டம்
பாசன கால்வாயில் மீண்டும் கான்கிரீட் பணியின் காரணமாக 2வது நாளாக விவசாயிகள் போராட்டம்

பாசன கால்வாயில் மீண்டும் கான்கிரீட் பணியின் காரணமாக 2வது நாளாக விவசாயிகள் போராட்டம்

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்து உள்ள பவானி சாகர் அணையின் மூலமாக கீழ் பவானி, தடப்பள்ளி அரக்கன் கோட்டை, காலிங்கராயன் கால்வாய் மூலமாக விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இதில் பெரிய பாசனமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் வரையில் விவசாய நிலங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசனம் பெற்று வருகிறது.

கீழ்பவானி வாய்க்காலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 710 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கீழ்பவானி மூலம் பாசன வசதி பெறும் விவசாயிகள் இரு தரப்பாக பிரிந்து எதிர்ப்பும் ஆதரம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தப் பிரச்னை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பணிகளை துவங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகியது.

இதனைத்தொடர்ந்து கீழ்பவானி வாய்க்கால் கான்கிரீட் திட்டம் தொடர்பான அரசணை எண் 276 ரத்து செய்ய வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் பழைய கட்டுமானப் பணிகளை மட்டுமே துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாசன விவசாயப் பெருந்துறை அருகே உள்ள கீழ் பவானி கால்வாய்ப் பகுதி அருகே காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சு வார்த்தையில், 'விவசாயிகள் கீழ்பவானி கால்வாயில் பழுதடைந்த பழைய கட்டுமானத்தை மட்டுமே சீரமைக்க வேண்டும். மண் கரையாகவே இருக்க வேண்டும். அரசாணை 276ஐ ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

பணிகள் துவங்கப்பட்ட இடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளின் கருத்தைக் கேட்டுப் பணிகள் மேற்கொள்ள வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனர். இந்த கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் “தமிழக முதலமைச்சர் மூலமாக அரசாணையை ரத்து செய்வது உள்ளிட்ட கோரிக்கையை பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும்” என தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து விவசாயிகளின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம், காஞ்சிகோயில் கருங்கரடு பகுதியில் நல்ல நிலையில் எந்தவிதமான உடைப்பு பழுதும் ஏற்படாமல் மண் கரையாக உள்ள இடத்தில் அமைச்சரின் உறுதிமொழியை மீறி, இரவு நேரத்தில் பணிகள் தொடங்கியுள்ளனர். இதனைக் கண்டித்து கால்வாயில் இறங்கிய 200க்கும் மேற்பட்ட பாசன விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், ''நல்ல நிலையில் இருந்த கால்வாயின் கரையை உடைத்த பகுதியை மீண்டும் அதே மண் கொண்டு பலப்படுத்த வேண்டும். கான்கிரீட் தளம் அமைக்கக் கூடாது” என்று விவசாயிகள் கூறியுள்ளனர். பேச்சுவார்த்தையில் அதிகாரிகளின் உடன்பாடு எட்டப்படாத நிலையில் விவசாயிகள் இரண்டாவது நாளாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பணிகள் நடைபெறும் இடத்திற்கு வந்த பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த விவசாயிகள் கால்வாயின் உள்ளே இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாசன கால்வாயில் மீண்டும் கான்கிரீட் பணிகள்: அமைச்சர் பேச்சு என்ன ஆச்சு? - போராட்டத்தில் குதித்த விவசாயிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.