ETV Bharat / state

மயக்க ஊசி செலுத்தி கட்டையன் யானையைப் பிடித்த வனத்துறையினர்!

author img

By

Published : Jul 24, 2023, 10:20 AM IST

ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே பகலில் ஊருக்குள் புகுந்த கட்டையன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர் தெங்குமரஹாடா தலமலை காப்பக்காட்டில் விட்டனர்.

The forest department caught the Katayan elephant by injecting anesthesia
மயக்க ஊசி செலுத்தி கட்டையன் யானையைப் பிடித்த வனத்துறையினர்

மயக்க ஊசி செலுத்தி கட்டையன் யானையைப் பிடித்த வனத்துறையினர்

ஈரோடு: கடம்பூர் அருகே பகலில் ஊருக்குள் புகுந்த கட்டையன் யானைக்கு மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வனத்துறையினர் தெங்குமரஹாடா தலமலை காப்புக்காட்டில் விட்டனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்து உள்ள கடம்பூர் மலைப் பகுதியில் உள்ள கடம்பூர், அத்தியூர், பவளக்குட்டை, ஏலஞ்சி, நடூர் செங்காடு உள்ளிட்டப் பல்வேறு கிராமங்களில் பகல் நேரங்களில் ஒற்றை காட்டு யானை புகுந்து, அங்கு சாகுபடி செய்த வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களைச் சேதப்படுத்தி வந்தது.

இதனால் வேதனை அடைந்த கிராம மக்கள், தினம்தோறும் பயிர்களைச் சேதப்படுத்தி வந்த யானையைப் பிடிக்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த யானைக்கு வனத்துறையினர் ‘கட்டையன்’ என பெயர் வைத்திருந்தனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறையினர் யானையைப் பிடிப்பதற்காக அரசிடம் உரிய அனுமதி பெற்றனர். இதை அடுத்து யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவர்கள் விஜயபிரகாஷ், சதாசிவம் ஆகியோர் கடம்பூரில் முகாமிட்டனர்.

மேலும், பிடிபட்ட யானையை ஏற்றுவதற்கு ஓசூர் வனக்கோட்டத்தில் இருந்து பிரத்யேக ஹைட்ராலிக் ஆம்புலன்ஸ் கடம்பூர் மலைப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. கட்டையன் யானையை பிடிப்பதற்காக வனத்துறை அதிகாரிகள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் அடங்கிய குழுவினர் பவளக்குட்டை கிராமத்தில் முகாமிட்டதோடு, ரோந்து வாகனங்களில் சென்று 10 மணி நேரமாக கட்டையன் யானையின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

இந்த நிலையில் வனப்பகுதியை ஒட்டி உள்ள பவளக்குட்டை பவானிகாரர் தோட்டம் என்ற இடத்தில் யானை இருப்பதைக் கண்டனர். அதனைத் தொடர்ந்து யானையைப் பிடிப்பதற்காக தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் யானைக்கு துப்பாக்கி மூலம் மயங்க மருந்தினை செலுத்தினர். மயக்க நிலையில் இருந்த கட்டையன் யானை மெதுவாக காட்டுக்குள் செல்லத் துவங்கியது. அதனை வனத்துறையினர் பின் தொடர்ந்தனர்.

பகலில் ஊருக்குள் புகுந்த கட்டையன் யானை
பகலில் ஊருக்குள் புகுந்த கட்டையன் யானை

சுமார் 3 மணி நேரத்துக்குப் பின் யானை மயக்க நிலையை அடைந்ததும், யானையின் கால்களில் கயிற்றினைக் கட்டி ஜேசிபி இயந்திரம் மூலம் ஹைட்ராலிக் லாரி செல்வதற்குப் பாதை அமைத்தனர். பின்னர், யானையை கிரேன் மூலம் மெதுவாக தள்ளி ஹைட்ராலிக் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர். கடந்த 6 மாதங்களாக தங்களை தொந்தரவு செய்த யானையைப் பிடித்த வனத்துறையினருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்வு குறித்து கடம்பூர் வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில், 'பிடிபட்ட கட்டையன் யானை இரவோடு இரவாக தெங்குமரஹாடா தலமலை காப்புக்காட்டில் நீர் நிறைந்த பகுதியில் விடப்பட்டது' என்றார். மேலும் யானை தற்போது நலமாக இருப்பதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: கடம்பூர் சாலையில் நின்ற பைக்கை துவம்சம் செய்த யானை - வெளியான அதிர்ச்சி வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.