ETV Bharat / state

போர்வைகள் தேக்கம் - சென்னிமலை விசைத்தறி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு!

author img

By

Published : May 5, 2023, 8:50 PM IST

ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுற்றுவட்டாரங்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான போர்வைகள் தேக்கமடைந்துள்ளதால், விசைத்தறி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளில் போர்வையை மக்களுக்கு இலவசமாக கொடுத்து, தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Erode
வாழ்வாதாரம்

சென்னிமலை விசைத்தறி உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம், சென்னிமலை சுற்றுவட்டாரங்களில் கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் போர்வை ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் போர்வை ரகங்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த தொழிலை நம்பி பல லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னிமலையில் போர்வை ரகங்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கத்தால் போர்வைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. உலகளவில் பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னிமலை வட்டாரங்களில் சுமார் 100 கோடி போர்வைகள் தேக்கமடைந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறி உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து சென்னிமலை வட்டார விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறும்போது, "உலகப் பொருளாதார வீழ்ச்சி, உக்ரைன் போர், பக்கத்து நாடுகளின் பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் போர்வைகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் போர்வைகளின் தேவை குறைந்துவிட்டது. இதனால், போர்வைகளின் விற்பனை வெகுவாக குறைந்துவிட்டது.

அதோடு பொருளாதார மந்தநிலையும் சேர்ந்து கொண்டதால் எங்களது தொழில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிற்கூடங்களை இயக்க முடியாமலும், தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாமலும் திணறிக்கொண்டிருக்கிறோம். இதுவரை, இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டதில்லை, இது தொடர்பாக தொழிற்சங்கங்களோடும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆனால், முடிவு கிடைத்தபாடில்லை. நாங்கள் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறோம்.

அதேபோல், தறிகளை விற்கப்போனால் அதை வாங்கவும் ஆள் இல்லை. ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கிய தறிகளை 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்றால் கூட வாங்க ஆட்கள் இல்லை. தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 200 ரூபாய் அளவுக்குக்கூட வேலை கொடுக்க முடியவில்லை. இந்த நிலை நீடித்தால், உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.

அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளில் போர்வையை மக்களுக்கு இலவசமாக கொடுத்தால், ஓரளவு உதவியாக இருக்கும். எங்களுக்கு உதவித்தொகை கொடுப்பதற்குப் பதிலாக மத்திய, மாநில அரசுகள் எங்களது போர்வைகளை கொள்முதல் செய்து மக்களுக்கு கொடுத்தால் உதவியாக இருக்கும். சுமார் 100 கோடி போர்வைகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. குளிர்காலம் வந்தால்தான் வியாபாரத்தின் போக்கு மாறும். அதுவரை எங்களது வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வதென தெரியாமல் இருக்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க: தாம்பரத்தில் இரவில் அம்பேத்கர் சிலையை அகற்ற முயற்சி - நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.