ETV Bharat / state

பவானிசாகர் நீர்மட்டம் உயர்வு: சிசிடிவி மூலம் ஆன்லைனின் கண்காணிப்பு!

author img

By

Published : Sep 28, 2020, 11:12 PM IST

பவானிசாகர் அணையின் நீர்மட்ட அளவைக் கண்காணிக்கும் பொருட்டு அலுவலர்கள் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளனர்.

அணையின் நீர்மட்டத்தை கண்காணிக்க பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி
அணையின் நீர்மட்டத்தை கண்காணிக்க பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி

ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்ட அளவு குறித்து உடனடியாக அலுவலர்கள் தெரிந்துகொள்ள தற்போது கண்காணிப்புக் கேமரா மூலம் ஆன்லைனில் கண்காணித்துவருகின்றனர்.

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக பவானிசாகர் அணை விளங்குகிறது. 105 அடி உயரமும் 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள இரண்டு லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றது.

அணையின் நீர்மட்டத்தைக் கண்காணிப்பதற்காக அணையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் அளவீடு அறையிலுள்ள அளவீட்டுக் கருவியின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு அதன் விவரத்தை தொலைபேசி மூலம் பவானிசாகர் செயற்பொறியாளர் அலுவலகத்துக்கு தெரிவித்து, கணக்கிடுவது நடைமுறையில் இருந்தது.

இந்நிலையில் தற்போது உயர் அலுவலர்கள், பவானிசாகர் அணை நீர்மட்டத்தை நேரடியாக கண்காணிக்கும் வகையில் தண்ணீர் அளவீட்டுக் கருவி அமைந்துள்ள பகுதியில், கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட்டு, இணையதள வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் கண்காணிப்புக் கேமராவின் மூலம் தண்ணீர் அளவிடும் கருவியிலுள்ள அளவினை, பவானிசாகர் அணை கோட்ட செயற்பொறியாளர், உதவி பொறியாளர், அலுவலகத்திலுள்ள கணக்கீட்டு அலுவலர் ஆகிய மூவரும் அறிந்துகொள்ளும் வகையில் ஆன்லைனில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டத்தை கண்காணிக்க பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி

இதன்மூலம் அணையின் மேல் பகுதியிலுள்ள தண்ணீர் அளவீடு எடுக்கும் அறையிலிருந்து, பணியாளர்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்கு முன்பாகவே குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலர்கள், அணையின் நீர்மட்டத்தை அறிந்துகொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஆழியாறு அணையிலிருந்து 9 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.