ETV Bharat / state

திமுக எதை எழுதிக்கொடுத்து பாஜகவுடன் கூட்டணி வைத்தது? - ஈரோட்டில் எடப்பாடி விளாசல்!

author img

By

Published : Feb 13, 2023, 7:42 AM IST

திமுக அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டா பாஜகவுடன் கூட்டணி வைத்து 5 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

திமுக எதை எழுதிக்கொடுத்து பாஜகவுடன் கூட்டணி வைத்தது? - ஈரோட்டில் எடப்பாடி விளாசல்!

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், செம்மலை, தங்கமணி, சி.வி.சண்முகம், உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 21 மாத திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் நிறைவேற்றவில்லை. ஈரோட்டில் அதிமுக ஆட்சியில் 484 கோடியில் ஊராட்சி கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி சோதனை ஓட்டமும் நடத்தினோம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின் இன்னும் வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு கூட கொடுக்கவில்லை.

பணத்தை வைத்து ஓட்டு வாங்க நினைக்கின்றனர். வாக்குச்சாவடி வாரியாக 200, 300 எனப் பணம் கொடுத்து வருகின்றனர். ஆனால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. அடிமை சாசனம் செய்து விட்டா பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்தது. அமைச்சரவையில் 5 ஆண்டுகள் இருந்தார்களே? முரசொலி மாறன் நோய்வாய் பட்டு கோமா நிலையிலும் அமைச்சரவையிலிருந்தார். அப்படிப்பட்ட கட்சி தான் திமுக. எங்களைப் பற்றி விமர்சனம் செய்ய அருகதை இல்லை.

கூட்டணியில் உள்ள கட்சிகள் சொத்து வரி உயர்வு குறித்து எதிர்த்துப் பேசவில்லை. மேலும் மக்கள் பிரச்னை, விலைவாசி உயர்வு, போதைப்பொருள் புழக்கம், மின்சார கட்டணம் உயர்வு குறித்து கேள்வி எழுப்பவில்லை. எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக ஆட்சியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். இன்று டேப் போட்டு வாயை மூடிக் கொள்கிறார்கள். இன்று எட்டு வழி சாலை கொண்டு வரப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார் அதற்கு எந்த குரலும் தரவில்லை. குரல் கொடுக்காத கூட்டணி கட்சிகள் அடிமைக் கட்சிகளாக உள்ளன. இரண்டு ஆண்டு காலமாக எந்த பிரச்சனைக்கும் போராட்டம் நடத்தவில்லை.

டெல்டா பகுதியில் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த கருத்தும் சொல்லவில்லை, டெல்டா பகுதி விவசாயிகளுக்கு குரல் கொடுக்கவில்லை அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துள்ளனர்.காவிரி நதிநீர் பிரச்சனை பல ஆண்டு காலமாக தீர்க்கப்படாமல் இருந்தது. ஜெயலலிதா சட்ட போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார். 22 நாட்கள் அவையை முடக்கினோம். கூட்டணியில் அங்கம் வகித்தாலும் கூட தமிழ்நாடு பிரச்சனைக்காக குரல் கொடுத்து 22 நாட்கள் அவையை முடக்கினோம். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்கள். நீட் தேர்வில் 38 பேர் தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் யாரும் குரல் கொடுக்கவில்லை.

வெற்றி பெற்றவுடன் திமுக முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்கள். இதுவரை மத்திய அரசிடம் குரல் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டிற்காக எதற்கும் குரல் கொடுக்கவில்லை. 100% திமுக அங்கம் வகிக்கும் கூட்டணிகள் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டு ஒத்து ஊதி வருகின்றனர். பெட்ரோல் டீசல் விலையை மற்ற மாநிலங்கள் குறைத்தார்கள் ஏன் தமிழ்நாட்டில் குறைக்கவில்லை.

தேர்தல் அறிவிப்பில் ஆட்சிக்கு வந்தவுடன் பெட்ரோல் டீசல் விலை குறைப்பதாகக் கூறினார்கள் ஆனால் குறைக்கவில்லை. தேர்தல் அறிவிப்பில் கொடுத்ததை எதையும் நிறைவேற்றவில்லை 85 சதவிகிதம் நிறைவேற்றியதாகப் பச்சைப் பொய் சொல்கிறார்கள். இது எல்லாம் ஊடகத்தில் வெளிப்படுத்த மாட்டீர்கள். திமுக எந்த அறிவிப்பையும் நிறைவேற்றவில்லை. கொள்ளையடித்து பணத்தை வைத்துக்கொண்டு மக்களை விலைக்கு வாங்கப் பார்க்கிறார்கள். ஜனநாயக படுகொலை செய்கிறார்கள். நிச்சயமாக இந்த ஆட்சி சீக்கிரம் முடிந்துவிடும்" என கூறினார்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தேமுதிகவிற்கு திருப்புமுனையாக அமையும்: எல்.கே.சுதீஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.