ETV Bharat / state

பழனி உற்சவர் சிலைக்கடத்தல் விவகாரம்: பழனி கோயில் அலுவலர்களிடம் விசாரணை

author img

By

Published : Dec 4, 2020, 6:59 AM IST

திண்டுக்கல்: மறைத்துவைக்கப்பட்ட நவபாஷாண உற்சவர் சிலை முறைகேடு தொடர்பாக பழனி கோயிலில் பணிபுரியும் அலுவலர்களிடம் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

palanimurugan
palanimurugan

பழனி முருகன் கோயிலில் 2004ஆம் ஆண்டு மறைத்துவைக்கப்பட்ட நவபாஷாண உற்சவர் சிலையில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 220 கிலோ எடை கொண்ட இந்த உற்சவர் சிலையானது முதலில் தங்கச்சிலை என்று சொல்லப்பட்டது. பிறகு தங்கச்சிலை என்ற கருத்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

பின்னர் இது குறித்து நடந்த விசாரணையில் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அளவு தங்கம் கலக்கவில்லை என்றும், குறிப்பிட்ட அளவைவிட மிகவும் குறைவான அளவே தங்கம் கலந்திருப்பதும் தெரியவந்தது. சென்னை ஐஐடி உலோகவியல் பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் தலைமையிலான குழுவினர் சிலையை ஆய்வுசெய்து தங்கம் குறைவாக உள்ளதை உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்து இந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக நடந்த விசாரணையில் அப்போதைய சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் காவல் துறையினர், சிலையை செய்த ஸ்தபதி முத்தையா, அப்போதைய இணை ஆணையர் ராஜா ஆகியோரைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.

பழனி கோயில் அலுவலர்களிடம் விசாரணை
பழனி கோயில் அலுவலர்களிடம் விசாரணை

தொடர்ந்து சிலை தொடர்பான நடந்த பல கட்ட விசாரணையில், அப்போதைய இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக இருந்த தனபால், சிலையை செய்த ஸ்தபதி முத்தையா, நகை மதிப்பீட்டாளர்கள் தேவேந்திரன், புகழேந்தி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குள்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) மாதவன் தலைமையிலான காவல் துறையினர் பழனியில் தற்போது முகாமிட்டுள்ளனர்.

பழனி கோயிலில் பணிபுரியும் அலுவலர்களிடம் விசாரணை செய்ய அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி இன்று தனியார் தங்கும் விடுதியில் விசாரணை நடந்தது.

இதையும் படிங்க: உடற்கூராய்வுகளை வீடியோ பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.