ETV Bharat / state

மருத்துவரிடம் ரூ.20 லட்சம் லஞ்சப் புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி சிக்கியது எப்படி? முழு பின்னணி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 9:13 PM IST

Enforcement department: அமலாக்கத்துறைக்கு விசாரணைக்கு வந்த வழக்கில் தொடர்புடையவரிடம் லஞ்சமாக ரூ.51 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக அமலாக்கத்துறை அதிகாரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

enforcement
ரூ.51 லட்சம் பணம் லஞ்சம் கேட்ட அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்

திண்டுக்கல்: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் துணைக் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருபவர் டாக்டர் சுரேஷ்பாபு. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2018 ஆம் ஆண்டு இவரது மருத்துவமனை மற்றும் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பதவி உயர்வு பெற்று அதிகாரி அன்கிட் திவாரி பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு, அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி, டாக்டர் சுரேஷ்பாபுவைத் தொடர்பு கொண்டு சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறைக்கு விசாரணைக்கு வந்துள்ளது என்றும், இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.3 கோடி பணம் தர வேண்டும் என ‌மிரட்டியதாக சொல்லப்படுகிறது.

இதற்கு சுரேஷ் பாபு ஒத்துக் கொள்ளாததால் இறுதியாக ரூ.51 லட்சம் தந்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சுரேஷ்பாபு கடந்த நவம்பர் 1ஆம் தேதியன்று மதுரை - நத்தம் சாலையில் வைத்து ரூ.20 லட்சம் லஞ்ச பணமாக கொடுத்துள்ளார். அதன்பின், மீண்டும் தொடர்பு கொண்டு மீதமுள்ள ரூ.31 லட்சம் பணத்தை தர வேண்டும் என கேட்டு மிரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சுரேஷ்பாபு திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் நாகராஜனிடம் நேற்று (நவ. 30) இதுகுறித்து புகார் அளித்து உள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரசாயன கலவை தடவிய ரூபாய் நோட்டுகளை சுரேஷ்பாபுவிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இன்று 01.12.23 அதிகாலை திண்டுக்கல் - மதுரை சாலையில் உள்ள தோமையார்புரம் அருகே அமலாக்கத்துறை அதிகாரியின் கார் டிக்கியில் சுரேஷ்பாபு பணத்தை வைத்து உள்ளார். பின்னர், கொடைரோடு சுங்கச்சாவடியில் வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அமலாக்கத்துறை அதிகாரியின் காரினை மடக்கி பிடித்தனர்.

லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும், லஞ்சம் வாங்க பயன்படுத்தப்பட்ட கார், பணம் ரூ.20 லட்சம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரியை திண்டுக்கல் இபி காலனியில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வைத்து கடந்த 12 மணி நேரமாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தற்போது மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: அலட்சிய போக்கில் செயல்படுகிறதா திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையம்..? அமைச்சர் நடவடிக்கை எடுத்தும் தொடரும் பழையநிலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.