ETV Bharat / state

‘அதிமுகவும், பாஜகவும் மூழ்கும் கப்பல்கள்’- சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்!

author img

By

Published : Jan 14, 2021, 9:16 AM IST

திண்டுக்கல்: அதிமுகவும், பாஜகவும் மூழ்கும் கப்பல்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஜன.13) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு கொடும் துயரத்தில் இருந்தபோது நிவாரணம் கொடுக்க அதிமுக அரசு முன்வரவில்லை. ஆனால், தேர்தல் பரப்புரையை தொடங்கிய பிறகு முதலமைச்சர் பொங்கல் பரிசாக 2ஆயிரத்து 500 ரூபாய் கொடுப்பதாக அறிவிக்கிறார்.

உண்மையில் அரசு பணத்தை எடுத்துக் கொடுத்து தேர்தல் ஆதாயம் பெறலாம் என்று ஆளுங்கட்சி நினைக்கிறது. இந்த பணம் அரசு பணமா? ஆளுங்கட்சி கொடுக்கும் பணமா? என மக்களுக்குத் தெரியாதா? இந்த சமயத்தில் ஏன் பணம் தருகிறது என்பதும் மக்களுக்கு தெரியாதா? இன்னும் 2ஆயிரத்து500 ரூபாய் சேர்த்து 5ஆயிரம் ரூபாயாக கொடுங்கள் என்று தான் கரோனா காலத்தில் இருந்து நாங்கள் கூறுகிறோம். இப்படியெல்லாம் அரசு பணத்தை கொடுத்து மூழ்கிக்கொண்டிருக்கும் அதிமுக, பாஜக அரசுகளை இந்த தேர்தலில் தூக்கி நிறுத்திவிடலாம் என்று கனவு கண்டால் அது பலிக்காது. ‌

அதிமுக – பாஜக கூட்டணியில் குழப்பம்:

பாஜக அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே பெரும் குழப்பம் நிலவுகிறது. பாட்டாளி மக்கள் கட்சி அந்த கூட்டணியில் தான் இருக்கிறதா என்று இன்னும் அவர்கள் தெளிவுபடுத்தவில்லை. தேமுதிக பொதுக்குழு தான் எதையும் முடிவு செய்யும் என்று பிரேமலதா பேட்டியளித்துள்ளார். எனவே பாஜக-அதிமுக கூட்டணியில் தான் குழப்பம் நீடிக்கிறதே தவிர திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.

ஒவ்வொரு கட்சியும் அவர்களுக்கு உகந்த வகையில் தேர்தல் பரப்புரைகளை எடுத்துச் செல்கிறோம். நாங்கள் வீடு வீடாக பரப்புரையை எடுத்துச் செல்கிறோம். திமுக கிராம சபைக்கூட்டங்கள் நடத்தி பரப்புரை செய்கிறது. நாடாளுமன்ற தேர்தலின்போது எப்படி தேர்தல் உடன்பாடு கண்டு செயல்பட்டோமோ அதேபோல இந்த தேர்தலிலும் சுமூக உடன்பாடு காணுவோம்.

பொள்ளாச்சி வழக்கில் ஆளுங்கட்சி பிரமுகர்களின் மகன்கள் சம்மந்தப்பட்டுள்ளனர்:

மேலும் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக திமுக மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர், மாதர் சங்கங்கள் சார்பாக போராட்டங்கள் நடத்தியுள்ளன. இந்நிலையில் அமைச்சர் வேலுமணி அதேபோல போராட்டங்களை நடத்தியுள்ளார். அவர் எதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தினார் என்பது புரியவில்லை. அதிமுக ஆட்சியில் தான் பாலியல் கொடுமைகள் நடந்தது. அதிமுக மாணவரணி பொறுப்பில் உள்ளவரை கைது செய்திருப்பது அதிமுகவை பகிரங்கமாக குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்பட்டுள்ளதைதான் வெளிப்படையாக காட்டுகிறது.

இந்த வழக்கில் இன்னும் பலர் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். பல ஆளுங்கட்சி பிரமுகர்களின் மகன்கள் சம்மந்தப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான பெண்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த வழக்கில் அரைகுறையாக விசாரணை நடத்தக்கூடாது. முழுமையாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்று மாதர் சங்கங்கள் போராட்டம் நடத்தின. இதற்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் உள்ள ஆளுங்கட்சியினர் குற்றவாளிகளை பாதுகாக்க 50 ஆயிரம் பேரை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இப்படி ஒரு ஆளுங்கட்சி தேவையா? இது போன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தி குற்றவாளிகளை பாதுகாக்கலாம் என்று ஆளுங்கட்சியினர் நினைத்தால் அது நடக்காது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: போராடும் உழவர்களோடு பொங்கல் கொண்டாடுவோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.