ETV Bharat / state

கரோனா ஊரடங்கும்... அரசு அலுவலகங்களின் நிலையும்!

author img

By

Published : Sep 9, 2020, 8:41 PM IST

Updated : Sep 11, 2020, 4:39 PM IST

திண்டுக்கல்: கரோனா தாக்கத்தின் காரணமாக, அரசு அலுவலகங்கள் சீராக செயல்பட முடியாததால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள் குறித்தான சிறப்புத் தொகுப்பு..!

Corona curfew and the condition of government offices
Corona curfew and the condition of government offices

கரோனா பெருந்தொற்று பாதிப்பின் காரணமாக, மார்ச் 24ஆம் தேதி இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து கரோனா பெருந்தொற்றுப் பரவல் வேகத்தினால் தடுப்பு நடவடிக்கையாகத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் ஊரடங்கு உத்தரவால் மக்கள் அரசு அலுவலகங்களை அணுகுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மக்கள் தங்கள் அன்றாடத் தேவைகள் மற்றும் குறைகளை அரசு அலுவலர்களிடம் கூறுவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன் மருத்துவமனைகள், காவல் நிலையம், மின் வாரியம், மாநகராட்சி, சுகாதாரத்துறை, மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட அத்தியாவசிய அரசுத்துறைகளைத் தவிர்த்து பிற அரசு அலுவலகங்கள் செயல்படவில்லை.

அதன்பின்னர் அரசு அலுவலகங்களில் 33 விழுக்காடு ஊழியர்களுடன் இயங்க ஆரம்பித்த நிலையில், மே 18ஆம் தேதி முதல் வாரத்தில் 6 நாட்களும் 50 விழுக்காடு அரசு ஊழியர்களுடன் அலுவலகங்கள் இயங்கத் தொடங்கின. தற்போது வெளியிடப்பட்ட தளர்வு அறிவிப்பில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 100 விழுக்காடு ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கத் தொடங்கியுள்ளது. ஆனால், இந்த இடைப்பட்ட காலத்தில் பொதுமக்கள் அரசு அலுவலகங்களை அணுக முடியாத சூழல் இருந்தது.

ஐம்பது விழுக்காடு பணியாளர்களுடன் இயங்கிய போதும் அங்கிருக்கும் அரசு ஊழியர் யாருக்காவது தொற்று இருப்பது உறுதியானால், உடனடியாக அந்த அரசு அலுவலகம் மூடப்பட்டது. அங்கிருந்த அலுவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனிடையே அரசு அலுவலகங்களுக்குச் செல்லும் மக்கள் தொற்று பாதிப்பு இருப்பதால் உள்ளே அனுமதிக்கப்படாமல், வாசல்களிலேயே நின்றுவிட்டு அலுவலர்களைச் சந்திக்க முடியாமல் காத்திருந்தனர்.

தொடர்ந்து பலமுறை அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டதால் மக்களின் நேரம் விரயமானது. இது போன்றச் சூழலை சந்தித்த ஜோதி என்பவர் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து எங்குமே செல்லவில்லை. அதன்பின்னர் பத்திரம் புதுப்பிப்பு செய்வதற்காக அரசு அலுவலகத்திற்குச் சென்றபோது, இன்று நாளை; இன்று நாளை என ஒரு மாதத்திற்கு மேலாக அலைக்கழித்தனர். தினமும் அரசு அலுவலகத்திற்குச் சென்றாலும் யாரையும் சந்திக்கமுடியவில்லை. பின்னர் ஒரு கட்டத்திற்கு மேல் அலையவேண்டாம் நிதானமாக பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் அந்த அலுவலகத்தின் முன்பு காத்திருப்பார்கள். அதுமட்டுமின்றி அரசு அலுவலகத்திற்கு செல்லும்போது அங்குள்ள அரசு அலுவலருக்குத் தொற்று பாதிப்பு இருந்தால், அலுவலகம் செயல்படாது எனக்கூறி திருப்பி அனுப்பிவிடுவார்கள். இப்போதாவது பேருந்துகள் இயங்குகின்றன. ஆனால், போக்குவரத்து இல்லாதபோது சிரமப்பட்டு அரசு அலுவலகங்களுக்கு வந்தால் அதற்கான பயனே இல்லாமல் திரும்பி வருவோம். இந்த சிரமத்தைப் போக்க அரசு வழிவகை செய்ய வேண்டும்"என்றார்.

இதுகுறித்து பாலாஜி கூறுகையில், "தற்போது எல்லாவற்றிற்கும் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையிலும், அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் சென்று வருவதற்கான சூழல் இல்லை. திண்டுக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்களை சந்திப்பதில் மிகுந்த சிரமமுள்ளது. மக்கள் தங்களது கோரிக்கைகள் தெரியப்படுத்த அரசு அதிகாரிகளை சந்திக்கச் சென்றால், புகார்ப் பெட்டியில் போடும்படி காவல் துறையினர் கூறுகிறார்கள்.

ஆனால் புகார்ப் பெட்டிகளில் போடப்படும் புகார்களுக்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. அதேபோல் இணையம் வாயிலாக இ-சேவை மூலம் மக்கள் அரசு அலுவலகங்களை அணுகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், இங்குள்ள மக்களில் எத்தனை பேருக்கு கல்வி அறிவு உள்ளது. எத்தனை பேருக்கு இணையத்தை இயக்கும் தொழில் நுட்பம் பரிச்சயமாகி உள்ளது. இதையெல்லாம் சிந்தித்து நடைமுறை சாத்தியங்களை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்" என்று கூறினார்.

கரோனா ஊரடங்கும்... அரசு அலுவலகங்களின் நிலையும்!

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமிடம் கேட்டபோது, ''கரோனா தொற்று காரணமாக அரசு அலுவலகங்கள் தமிழ்நாடு அரசின் வழிமுறைப்படி இயங்கி வருகிறது. தொடக்கத்தில் அரசு அலுவலர்களுக்கு கரோனா பெருந்தொற்று ஏற்பட்டால், அலுவலகங்கள் முழுவதுமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுப் பின்னர் இயங்கும். தற்போது பாதிக்கப்பட்ட நபர் இயங்கும் அலுவலகம் மற்றும் அவரது பணியை சார்ந்து தேவைக்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, அரசு அலுவலகங்கள் இயங்காமல் இருப்பதில்லை. அதிகபட்சம் ஒரே நாளில் இயங்கத் தொடங்குகிறது. இதன் மூலம் மக்கள் இடர்பாடுகளை சந்திப்பது கிடையாது. மேலும் மக்களின் அத்தியாவசிய கோரிக்கைகள் குறித்து அந்தந்த துறைசார்ந்த அலுவலர்களிடம் ஆலோசித்து, அதற்கான தீர்வுகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:இடியும் நிலையிலுள்ள துணை சுகாதார நிலையத்தைப் புதுப்பிக்க கிராம மக்கள் கோரிக்கை!

Last Updated : Sep 11, 2020, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.