ETV Bharat / state

குடிநீர் குழாய்களில் கழிவுநீர்.. தருமபுரி மக்கள் கடும் அவதி.. நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 26, 2023, 8:52 PM IST

Dharmapuri drinking water issue: தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட அமுதம் காலனியில் போதுமான சாக்கடை கால்வாய் வசதி இல்லாத காரணத்தால் சாக்கடை நீர் நிலத்தடி நீரில் கலந்து பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

தருமபுரியில் நிலத்தடி நீரில் கலந்து வரும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி
தருமபுரியில் நிலத்தடி நீரில் கலந்து வரும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி

தருமபுரியில் நிலத்தடி நீரில் கலந்து வரும் கழிவு நீரால் பொதுமக்கள் அவதி

தருமபுரி: தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டில் உள்ள அமுதம் காலனியில், சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இங்கு, போதுமான சாக்கடை கால்வாய் வசதி, சாலை வசதி, குடிநீர் வசதியின்றி தவித்து வருகின்றனர். இங்கு, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஒப்பந்ததாரர்களால் கட்டப்பட்ட சாக்கடை கால்வாய், முழுமை பெறாமல் பாதியிலேயே பணிகள் முடிக்கப்படாத நிலையில் கிடப்பில் உள்ளது.

இதனால், சாக்கடை நீர் வெளியே செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் நிலை உருவானது. இதன் மூலம், நோய்த் தொற்று பரவும் அபாயமும் இருந்து வந்துள்ளது. மேலும், பட்டா நிலத்தின் வழியே இந்த சாக்கடை கால்வாய் செல்ல பட்டா தாரர் மறுத்து, சாக்கடை கால்வாயின் குறுக்கே தடுப்பு ஏற்படுத்தி அடைத்துள்ளார். இதனால் சாக்கடை தண்ணீர் தேக்கம் அடைந்து, அப்பகுதி நிலத்தடி நீரில் கலந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, கைப்பம்பு மற்றும் வீடுகளில் குடிநீர் மோட்டார் பயன்படுத்தும் போது ஒரு வித துர்நாற்றத்துடன் தண்ணீர் வந்துள்ளனது. எனவே அதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தாமல் உள்ளனர். மேலும், இப்பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் செல்வதற்கு போதுமான இட வசதி இல்லாததால், இப்பகுதி மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திமுகவின் நீட் கையெழுத்து இயக்கம் மீது குற்றச்சாட்டு - அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்ற அமர்வு மறுப்பு!

மேலும், சிலர் அருகாமையில் உள்ள தெருக்களுக்குச் சென்று தண்ணீர் பிடித்து வரும் அவல நிலையும் இருந்து வருகிறது. தற்போது வீட்டில் உள்ள தண்ணீருடன் சாக்கடை நீரும் கலந்து வருவதால் பணிக்குச் செல்வோர், பள்ளி கல்லூரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் தெரிவித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் மாவட்ட ஆட்சியரைக் கடைசியாக நேரில் சந்தித்து, அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர். இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கி, போராட்டம் நடத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: திருவேற்காடு நகராட்சி அலுவலக வாசலில் கழிவு நீரைக் கொட்டி ஆர்ப்பாட்டம் - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.