ETV Bharat / state

எம்.பி. நிதியில் முறைகேடு நடைபெறவில்லை:  மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Sep 12, 2020, 1:30 AM IST

தருமபுரி: மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடைபெறவில்லை என மாவட்ட ஆட்சியர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர்

தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஒரு கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார்.

அவரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், தருமபுரி மக்களவை தொகுதி மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடைபெறவில்லை. மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் நிதியை கரோனா தடுப்பு பணிக்கு பயன்படுத்த கோரி அவரது தரப்பில் ஒப்புதல் கடிதம் வழங்கப்பட்டது.

இதில் மக்களவை உறுப்பினர் நிதியாண்டு குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆகவே அவர்களுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாய் கரோனா தடுப்பு பணிக்காக எடுக்கப்பட்டுள்ளது.

கரோனா நிதியை மாவட்ட பேரிடர் மேலாண்மை குழு மட்டுமே முற்றிலும் கையாளும். இக்குழுவில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஊராட்சி குழு, மாவட்ட வருவாய் அலுவலர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்டோர் குழுவில் உள்ளனர்.

குழு உறுப்பினர்கள் கூடி நிதியில் இருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தேவையின் அடிப்படையில் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்தவித ஒளிவு மறைவும் இல்லை.

கரோனா தடுப்பு பணிகள் அனைத்தும் வெளிப்படையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் தருமபுரி மாவட்ட அலுவலர்களின் கரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்கான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கவே வந்திருந்தார்.

முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஆய்வு கூட்டத்திற்கு அழைப்பு எதுவும் அளிக்கப்படவில்லை. கூட்டத்தில் மனு அளிக்க வேண்டும் என வந்த மக்களவை உறுப்பினர் கரோனா பரிசோதனை முடிவு இருப்பின் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்கூட்டியே தகவல் அளித்திருந்தால் முறையான பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டிருக்கும். இதில் எந்தவித வழிகாட்டு நெறிமுறைகளும் மீறப்படவில்லை. குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கிறேன்.

அரசியல் காரணங்களுக்காக இப்படி உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை மக்களவை உறுப்பினர் கூறி வருகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.