ETV Bharat / state

தருமபுரி அருகே லஞ்சம் பெறுவதாக கூறி கிராம அலுவலருக்கு எதிராக போராட்டம்

author img

By

Published : May 27, 2022, 7:45 AM IST

தருமபுரி அருகே பொது மக்களிடம் அதிகமாக லஞ்சம் பெறுவதாக கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து கிராமம் முழுவதும் விழிப்புணர்வு துண்டறிக்கை ஒட்டி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லஞ்சம் பெறுவதாக அலுவலருக்கு எதிராக குற்றம் சாட்டி கிராம இளைஞர்கள் நூதன போராட்டம்
லஞ்சம் பெறுவதாக அலுவலருக்கு எதிராக குற்றம் சாட்டி கிராம இளைஞர்கள் நூதன போராட்டம்

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்திற்கு உட்பட்ட சில்லாரஹள்ளி வருவாய் கிராமத்தில் 2500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றும் பரமசிவம் மற்றும் உதவியாளர் ஜெயந்தி இருவரும் அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

இதில் முதியோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் முதியவர்களிடம் 5000 வரை கொடுத்தால் மட்டுமே மனுக்களை பரிந்துரை செய்வதாகவும், பிறப்பு, இறப்பு சான்றிதழ், நிலம் அளவீடு செய்யும் பணிக்கு 10 ஆயிரம் என லஞ்சம் கேட்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். லஞ்சம் கொடுக்கவில்லை என்றால், அவர்களை நீண்ட நாட்கள் அலை கழிப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பரசுராமன் என்பவர் தனது நிலத்தை அளவீடு செய்ய கிராம நிர்வாக அலுவலர் கேட்டதால் ரூ.6000 பணம் கொடுத்துள்ளார்.

ஆனால் பணம் பெற்றுக்கொண்டு இரண்டு மாத காலமாக அளவீடு செய்ய வராததால், அவரை பரசுராமன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.அப்பொழுது பேசிய கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் உரிய பதிவேடுகள் கிடைக்கவில்லை, கிடைத்தவுடன் அளவிடு செய்து தருவதாக தெரிவித்துள்ளார்.பணத்தை பெற்றுக் கொண்டு ஏன் காலதாமதம் செய்கிறீர்கள் என்று கேட்டபோது, வேண்டும் என்றால் உனது பணத்தை திருப்பி வாங்கிக் கொள் என கிராம நிர்வாக அலுவலர் பேசும் உரையாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவிடம் புகார் தெரிவித்துள்ளனர். லஞ்சத்திற்கு எதிரான நோட்டீஸ்களை கிராமம் முழுவதும் இளைஞர்கள் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். லஞ்சம் பெறுகின்ற கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது உதவியாளர் ஜெயந்தி இருவரையும் உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு சமூக வலைதளத்திலும்(ட்வீட்டர்) பதிவிட்டு கோரிக்கை விடுத்துள்ளனர்.

லஞ்சம் பெறுவதாக அலுவலருக்கு எதிராக குற்றம் சாட்டி கிராம இளைஞர்கள் நூதன போராட்டம்

ஆனால் சமூக வலைதளப் பக்கத்தில் உடனடியாக பதில் அளிக்கும் மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மக்களின் கோரிக்கைக்கு பதில் அளிக்காததால் மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். மேலும் உடனடியாக தங்கள் கிராமத்தில் நேர்மையாக பணிபுரியும் அலுவலர்களை பணியமர்த்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினியிடம் கேட்டபோது, சில்லாரஹள்ளி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் மக்களிடம் இலஞ்சம் பெறும் புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீட் முதுகலை நுழைவுத் தேர்வு - மத்திய அமைச்சருக்கு தருமபுரி எம்பி கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.