ETV Bharat / state

மதுபோதையில் பாம்பை பிடித்த நபர் - கடித்து உயிரைப் பறித்த பாம்பு!

author img

By

Published : Jan 1, 2023, 9:19 PM IST

கடலூர் அருகே மதுபோதையில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து விளையாடிய இளைஞரை பாம்பு கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அதே பாம்பு மற்றொருவரையும் கடித்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

திருப்பாதிரிப்புலியூரில் மதுபோதையில் பாம்பை பிடித்த நபர் - கடித்து உயிரைப் பறித்த பாம்பு!

கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் சுப்பராயன் நகர் பகுதியைச் சேர்ந்த சலவைத் தொழிலாளியான மணிகண்டன் (எ) அப்பு என்பவர் நேற்று (டிச.31) இரவு மதுபோதையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அந்நேரம் அவ்வழியாக சென்ற பாம்பு ஒன்றைக் கண்ட அவர், அதனைப் பிடித்து 'இது புத்தாண்டு பரிசு' என தனது நண்பர்களுக்கு காட்டியுள்ளார்.

இதனைக் கண்டு அச்சத்தில் அங்கிருந்தவர்கள் பயந்து ஓடவே, அந்த பாம்பு அவரை கண்ணிமைக்கும் நேரத்தில் கடித்ததில் அவர் அங்கே மயங்கி விழுந்தார். இதைத்தொடர்ந்து, மயங்கி விழுந்த அந்த இளைஞரை அந்த பாம்புடன் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனிடையே மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், அவர் கொண்டு வந்த அந்த பாம்பை அரசு மருத்துவமனையில் பிரித்துப் பார்த்தபோது அது கொடூரமான விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு (Russell's viper - kannadi viriyan) என்பது தெரியவந்தது. மேலும், அவருடன் வந்த நபர் அந்தப் பாம்பினை பிரித்து பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்த பாம்பு அவரையும் கடித்துவிட்டது. தற்போது உடன் வந்த கபிலன் என்பவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருந்தவர்கள் அந்த பாம்பினை அடித்து கொன்றுவிட்டனர்.

கொடூர விஷத் தன்மையுடைய கண்ணாடி விரியன் பாம்பை இவ்வாறு விளையாட்டாக, மதுபோதையில் பிடித்து புத்தாண்டு பரிசு வழங்கிய நபர், அதே பாம்பு கடித்ததில் உயிரிழந்த சம்பவம் புத்தாண்டு தினத்தில் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: புத்தாண்டு: கோவா சென்று திரும்புகையில் நடந்த கார் விபத்தில் 4 தமிழர்கள் பலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.