ETV Bharat / state

’ஜக்கி வாசுதேவ் ஆதரவாளர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் தொலைபேசியில் மிரட்டுகிறார்கள்’

author img

By

Published : Apr 19, 2021, 8:45 AM IST

Updated : Apr 19, 2021, 9:51 AM IST

கடலூர்: ஈஷா மையத்தை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும், வன்முறையைத் தூண்டும் வகையில் ஜக்கி வாசுதேவ் ஆதரவாளர்களும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் தொலைபேசி வாயிலாக தன்னை மிரட்டுவதாகவும் தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

ஜக்கி
ஜக்கி

தமிழ் தேசியப் பேரியக்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சிதம்பரத்தில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழ் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். இதில் மாநிலம் முழுவதுமிருந்து வந்த கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனையொட்டி தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

”தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில், வெள்ளியங்கிரி பகுதியில் கட்டப்பட்டுள்ள ஈஷா மையத்தை அரசு ஏற்க வேண்டும். சட்ட விரோத காரியங்கள் அங்கு நடைபெறுவதால் மையத்தை அரசு கையகப்படுத்த வேண்டும். இந்து அறநிலையத்துறையின்கீழ் ஈஷா மையத்தை நிர்வாகம் செய்ய வேண்டும். ஜக்கி வாசுதேவ் ஆதரவாளர்களுக்கு கோயிலுக்குள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தது தவறான முன்னுதாரணமாகும்.

இதற்கு மூல காரணமாக விளங்குபவர் ஜக்கி வாசுதேவ். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும். சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்ய விரும்புபவர்கள் அவர்கள் விருப்பத்தின்படி செய்து கொள்ளலாம். தமிழ்நாடு கோயில்களில் தமிழ்வழியில் பூசையும் குடமுழுக்கும் நடத்த வேண்டும்.

ஜக்கி வாசுதேவின் கோரிக்கையை அரசு மறுத்து அறிக்கை வெளியிட வலியுறுத்தி, வருகிற மே 8ஆம் தேதி தஞ்சையில் ’தெய்வத் தமிழ்ப் பேரவை’ சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. அதில் தமிழ் தேசியப் பேரியக்கத்தினரும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.

மேலும் ஜக்கி வாசுதேவ் ஈஷா அறக்கட்டளை சம்பந்தமாக பேசியதை அடுத்து எனக்கு ஈஷா அமைப்பைச் சேர்ந்தவர்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் தொலைபேசியில் மிரட்டல் விடுத்து வருகின்றனர். முன்னதாக ஜக்கி வாசுதேவ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். அதன் அடிப்படையில் உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய வேண்டும்” எனப் பேசினார்.

தமிழ்நாட்டு கோயில்கள் சிதிலமடந்துள்ளதாகவும், எனவே அவை இந்து அறநிலையத் துறையிலிருந்து விடுவிக்கப்பட்டு பக்தர்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் எனவும் ஜக்கி வாசுதேவ் சமீப காலமாக வலியுறுத்தி வருகிறார். இதற்கு ‘தெய்வத் தமிழ்ப் பேரவை’ என்ற அமைப்பின் மூலம் பெ. மணியரசன் முன்னதாக கடும் எதிர்ப்பு தெரிவத்திருந்தார். தமிழ்நாட்டின் யோகி ஆதித்யநாத்தாக ஜக்கி வாசுதேவ் மாற முயற்சி செய்துவருவதாகவும் முன்னதாக பெ.மணியரசன் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கோயில்களை விடுவிக்க வலியுறுத்தல்: பக்தி பாடல்கள் பாடி விழிப்புணர்வு

Last Updated : Apr 19, 2021, 9:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.