ETV Bharat / state

தமிழ்நாடு அரசு கோரும் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

author img

By

Published : Dec 9, 2020, 10:54 PM IST

கடலூர்: புயல், மழை பாதிப்பு போன்றவற்றின்போது தமிழ்நாடு அரசு கோரும் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

Central Government should provide the  full fund requested by the  Tamil Nadu Government - K. Balakrishnan
தமிழ்நாடு அரசு கோரும் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட கடலூரை சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று (டிச.9) நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அக்கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “2000ஆவது ஆண்டு முதல் இதுவரை கடலூர் மாவட்டத்தில் 9 முறை புயல், பெருவெள்ளம் போன்ற இயற்கை சீற்றம் ஏற்பட்டுள்ளது.

ஏறத்தாழ 20 ஆண்டுகாலமாக ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பார்வையிடுவதும், நிவாரண உதவி வழங்குவதும் மட்டுமே நடந்து வருகிறது. தொலைநோக்கு பார்வையில் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

மாவட்டத்தில் சுமார் 1.50 லட்சம் ஏக்கருக்கு மேல் நெல்பயிர் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரமும், வாழைக்கு ரூ.50 ஆயிரமும், இதர பயிர்களுக்கு உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

வறட்சி, புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசிடம் கோரும் தமிழ்நாடு அரசு கோரும் நிதியில் வெறும் 10 % மட்டுமே வழங்குகிறது.

பின்னர் எதற்காக மத்தியக் குழுவினை அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. எனவே, புயல், மழை பாதிப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு கோரும் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும்.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டிருந்தாலே தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். வீடு இடிந்தால் மட்டுமே நிவாரணம் என்று சொல்லக்கூடாது.

சேலம் 8 வழிச்சாலையைப் போன்றே சென்னை-திருவள்ளூர்-பெங்களூரு சாலைக்காக சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. இந்த இரு திட்டங்களையும் அரசு கைவிட வேண்டும்.

விவசாயத்தை அழித்து விட்டு வளர்ச்சி தேவைப்படுகிறதா? டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜரிவால், காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹாபூபா முப்தி போன்றோரையும் வீட்டுக்காவலில் வைத்திருப்பது மத்திய அரசின் அராஜக செயலாகும். ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைத்துவிட்டு பெரிய அளவிலான நாடாளுமன்ற கட்டடம் தேவையா?

Central Government should provide the  full fund requested by the  Tamil Nadu Government - K. Balakrishnan
தமிழ்நாடு அரசு கோரும் நிதியை மத்திய அரசு முழுமையாக வழங்க வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது என்று மத்திய அரசு கூறிவிட்டதால் இப்போராட்டம் நீடித்துக் கொண்டே செல்லலாம்.

இதே போன்ற சட்டத்தை தான் அதிமுக அரசு தமிழ்நாட்டின் சட்டப்பேரவையிலும் நிறைவேற்றி உள்ளது.

மத்திய அரசு இச்சட்டத்தை திரும்பப் பெற்றாலும் தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறையில் இருக்கும் நிலை உள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகளின் நலனை அதிமுக காவுக்கொடுத்துவிட்டது" என்றார்.

இதையும் படிங்க : திருப்பூரில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.