ETV Bharat / state

உலக யானைகள் தினம்: யானைகளை ஊருக்குள் புகாமல் தடுப்பது எப்படி?

author img

By

Published : Aug 12, 2023, 8:13 AM IST

வனப்பகுதியில் நிலவும் உணவு பற்றாக்குறையால் நாள்தோறும் குடியிருக்கும் பகுதிகளுக்குள் புகுந்து வரும் யானைகளைப் பாதுகாக்கும் திட்டம் மற்றும் ஊருக்குள் யானை வருவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை உலக யானைகள் தினத்தில் (World elephant day) காணலாம்.

World Elephant Day
யானைகள் தினம்

வனப்பகுதியில் நிலவும் உணவு பற்றாக்குறையால் நாள்தோறும் குடியிருக்கும் பகுதிகளுக்குள் புகுந்து வரும் யானைகளைப் பாதுகாக்கும் திட்டம் மற்றும் ஊருக்குள் யானை வருவதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு

கோயம்புத்தூர்: காடு வளமாக இருந்தால்தான் நாடு வளமாக இருக்க முடியும். அத்தகைய காட்டின் வளர்ச்சியை அதிகரிக்க யானைகள் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே கூறலாம். யானை வழக்கமாக தினந்தோறும் 200 முதல் 250 கிலோ அளவு உணவை உட்கொள்ளும். அதுமட்டுமின்றி நாளொன்றுக்கு 100 முதல் 150 லிட்டர் வரை தண்ணீர் அருந்தும்.

யானை உட்கொள்ளும் 200 முதல் 250 கிலோ உணவில் 10 விழுக்காடு விதைகளும், குச்சிகளும் இருக்கும். 10 விழுக்காடு என்பது 20 முதல் 25 கிலோ விதைகள் மற்றும் குச்சிகளாகும். இவை யானைகளின் சாணம் மூலம் மீண்டும் மண்ணில் விதைக்கப்படுகின்றன. அவற்றின் மூலம் மரங்கள், காடுகள் உருவாகின்றன. அந்த வகையில், ஒவ்வொரு யானையும் தங்களது வாழ்நாளில் 18 லட்சம் மரங்களை உருவாக்குவதாக யானை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சுற்றுச்சூழல் அமைப்பில் யானைகளின் பங்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்தும், யானைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாலும், யானைகள் குறித்த விழிப்புணர்வுக்காக கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் நோக்கம், யானைகளால் காடு வளம் பெறுகிறது என்பதை அறிந்து கொள்ளவும், யானைகளின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையிலும் இந்த யானைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, ஏன் யானைகளை பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

எனினும், யானைகளின் வலசைப் பாதை ஆக்கிரமிப்பு, காடுகளின் வளம் குறைதல் உள்ளிட்ட காரணங்களால் வனத்தை விட்டு யானைகள் நாள்தோறும் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம பகுதிக்குள் புகுந்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் யானைகளின் வருகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

அவ்வாறு உணவு மற்றும் தண்ணீர் தேடி வரும் யானைகள் மின்வேலியில் சிக்கி உயிரிழப்பது, ரயில் பாதையை கடக்க முயலும்போது விபத்தில் சிக்கி உயிரிழப்பது உள்ளிட்ட பல நிகழ்வுகள் தொடர்ந்து வருகிறது. இவ்வாறு யானைகள் வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழையாமல் இருக்க அரசு செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கிறார், இயற்கை பாதுகாப்பு நலச்சங்கத்தின் நிறுவனர் ஜலாலுதீன்.

இது தொடர்பாக இயற்கை பாதுகாப்பு நலச்சங்க நிறுவனர் ஜலாலுதீன் பேசுகையில், "யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. இதற்கு முக்கிய காரணம், யானைகளுக்குத் தேவையான உணவுகள் வனப்பகுதிக்குள் கிடைப்பதில்லை. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருகிறது.

அவ்வாறு யானைகள் ஊருக்குள் வரும்போது மனித-மிருக மோதல்கள் அவ்வப்போது ஏற்பட்டு மனிதர்கள் மற்றும் யானைகள் இறப்பது தொடர்ந்து வருகிறது. மேலும், வனப்பகுதிக்குள் உள்ள களைச் செடிகளை யானைகள் சாப்பிடுவதால் அவைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு யானைகள் உயிரிழக்கும் சூழலும் நிலவுகிறது. யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வராமல் இருக்க வனப்பகுதிக்குள் யானைகளுக்கு பிடித்தமான தாவரங்களைப் பயிரிட வேண்டும். அவ்வாறு செய்தால் ஓரளவு யானைகள் வெளியே வருவதை தடுக்க முடியும்" என தெரிவித்தார்.

இதனையடுத்து, இது குறித்து கோயம்புத்தூர் வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளையின் செயலாளர் சண்முகம் சுந்தரம் கூறுகையில், "யானைகள் உணவு தேடி கிராமத்துக்குள் நுழைந்து விவசாயப் பயிர்களை சாப்பிடுவது குறிப்பாக வாழை, கரும்பு, தென்னை போன்ற பயிர்களை உட்கொண்டு பழகிவிட்டதால், அவை வனத்துக்குள் சென்று உணவு தேடுவதை நிறுத்துகிறது. இதனைத் தடுக்க வனத்திற்குள் யானைகளுக்கு பிடித்தமான உணவுகளை பதிவிட வேண்டும்" என தெரிவித்தார்.

மேலும், தடாகத்தைச் சேர்ந்த விவசாயி ஜெயபிரகாஷ் கூறுகையில், "யானைகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், யானைகள் வனத்தில் இருந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகிறது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் தடாகம், மருதமலை, பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் அதிக அளவில் யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாயப் பயிர்களை சேதம் செய்து வருவதால் விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக விவசாயிகள் தங்களது நிலங்களை ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு விற்பனை செய்வதால், அவர்கள் கேளிக்கை விடுதிகள், ரிசார்ட், அடுக்குமாடி குடியிருப்பு போன்றவை கட்டி யானை வலசை பாதையை மறிக்கின்றனர். அது மட்டுமின்றி மனித - மிருக மோதலுக்கு இது வழி வகுக்கிறது. எனவே, வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு நீண்ட காலம் நடவடிக்கையாக யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: பட்டுப்புழுவால் பணக்காரராக மாறிய கிராமம் விவசாயத்தை கைவிடும் அவலம்.. கிருஷ்ணகிரியில் நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.