ETV Bharat / state

பட்டுப்புழுவால் பணக்காரராக மாறிய கிராமம் விவசாயத்தை கைவிடும் அவலம்.. கிருஷ்ணகிரியில் நடந்தது என்ன?

author img

By

Published : Aug 11, 2023, 11:05 PM IST

ஒசூர் அருகே பட்டுப்புழு வளர்த்து பணக்காரர்களாக மாறிய கிராமம் தற்போது மாற்று தொழிலுக்கு மாறி வரும் அவலத்தை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

Etv Bharat
Etv Bharat

பட்டுப்புழு விவசாயத்தை கைவிடும் நிலையில் உள்ள விவசாயிகள்

கிருஷ்ணகிரி: தமிழகப் பெண்களின் பாரம்பரிய உடைகளில் புடவை குறிப்பிடத்தக்கதாகும். அதிலும் குறிப்பாகப் பட்டுப் புடவையை விரும்பாத பெண்களே இல்லை என்றும் கூறலாம். மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் பட்டாடைகள் இடம்பெறாத சுப நிகழ்ச்சிகளே கிடையாது. பல்வேறு இடங்களில் பட்டாடைகள் தயாரானாலும் அதற்கான மூலப்பொருளான பட்டுநூல் தயாரிப்பது என்னவோ பட்டுப்புழுவிலிருந்துதான்.

அந்தவகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் அருகே அமைந்துள்ள கூலி அக்ரஹாரம் கிராமத்தை, பட்டுப்புழு வளர்த்து பணக்காரர்களாக மாறிய கிராமம் என்றே கூறலாம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் உள்ளோரின் 90% பணி, பட்டுப்புழு வளர்ப்பதாகவே இருந்து வந்தது.

பட்டுப்புழு வளர்ப்பு: முட்டை பொரிப்பிலிருந்து நன்கு முதிர்ந்து கூடுகட்டும் வரை 5 பருவங்கள் உள்ளன. இரண்டாம் பருவம் வரை அவை இளம் புழுக்கள் பருவத்தைச் சேரும். புழு வளர்ப்பில் ஏற்படும் திடீர் தட்பவெப்ப மாற்றங்கள், நோய்களை உண்டாக்கும் என்பதால், அவற்றைச் சிறந்த முறையில் கவனித்து நல்ல தரமான புழு வளர்ப்பிற்கு ஒரே சீரான வெப்பம் தேவை என்பதாலும், தனி புழு வளர்ப்பு மனை அவசியமாக உள்ளது.

இளம் புழு வளர்ப்பிற்கும், வளர்ந்த புழு வளர்ப்பிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாகக் கூறும் அவர்கள் முதிர்ந்த புழுக்களை வளர்க்கும் இடங்களிலிருந்து கிருமித் தொற்றைத் தவிர்க்க இளம் புழு வளர்ப்பிற்கெனத் தனியாக ஓர் அறை வைத்திருக்க வேண்டும் என்கின்றனர்.

உடுமலைப்பேட்டை மற்றும் கர்நாடகாவின் முதுக்கூடர் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் நிறுவனத்திடம், தனி அறையில் நல்லமுறையில் வளர்க்கப்பட்ட 100 பட்டுப்புழுக்கள் 5,500 ரூபாய் எனப் பெற்று வரும் விவசாயிகள் மல்பெரி இலையைக் கொண்டு வளர்க்கின்றனர்.

முதிர்ந்த புழுக்கள்: மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் நிலைப்புழுக்கள் முதிர்ந்த புழுக்கள் என்றும், வளர்ந்த புழு மூன்றாம் பருவ பட்டுப்புழுக்கள் மிகவேகமாகவும், அதிகமாகவும் இலைகளை உண்ணும். ஐந்தாம் பருவத்தின் 7 ஆம் நாளில் புழுக்கள் முற்றி, உணவு உண்பதை நிறுத்திக் கூடு கட்ட இடம் தேடும்.

நல்ல தரமான கூடுகளைப் பெற, முதிர்ந்த புழுக்களை உரிய நேரத்தில், தரமான கூடு கட்டும் தட்டுகளில், விட்டுவிடுகின்றனர். கூடு கட்ட ஈரப்பதமும் நல்ல காற்றோட்டமும் தேவை. கூடு கட்டிய ஆறாம் நாளில் அறுவடை செய்து தரம் பிரிக்கின்றனர். 100 பட்டுப்புழுக்களை வளர்க்க 0.25 ஏக்கரில் மல்பெரி இலை விவசாயம் செய்யப்படுகிறது. பட்டுப்புழுவின் ஆயுட்நாட்கள் 30 தினங்கள் மட்டுமே.

மாற்றுத் தொழிலுக்கு மாறிய கிராம மக்கள்: கூலி அக்ரஹார கிராம மக்கள் 1970 முதல் பட்டுவளர்ப்பில் ஆர்வம் செலுத்தியதில், ஒட்டுமொத்த கிராமமே வருவாய் ஈட்டி நல்ல வளர்ச்சியை அடைந்ததாகச் சொல்லப்படுகிறது. 1990 முதல் 2019 வரை வளர்ச்சியின் பாதையில் நல்ல லாபம் ஈட்டி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மல்பெரி செடிகளை அழித்து மாற்று விவசாயத்திற்கும், பலர் விவசாயத்தையே கைவிட்டு பல்வேறு தொழிற்சாலைகளுக்கும் சென்றுவிட்டதாகக் கிராம மக்கள் கூறுகின்றனர்.

5 ஆண்டுகளுக்கு முன்பு ஒருகிலோ பட்டுக்கூடு 550 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்ததாகவும், தற்போது ஓசூர் பகுதியில் 320 ரூபாய்க்கும் கர்நாடகா மாநிலத்தில் 450 ரூபாய்க்கும் விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கிராமத்தில் 90% மக்கள் பட்டு வளர்ப்பதை முழுநேர தொழிலாளராகக் கொண்டிருந்த நிலையில், தற்போது 60% மக்கள் முழுமையாகப் பட்டு வளர்ப்பை விட்டு மாற்றுத் தொழில் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், தினக்கூலியாகப் பெண் ஒருவருக்கு 3 வேளை உணவுடன் 450 ரூபாய் மற்றும் ஆண்களுக்கு 800 ரூபாய் வழங்கி மல்பரி செடிகளை வளர்ப்பது, பட்டு அறுவடை என்பது கூடாத காரியம் என்பதால் முழுமையாக மாற்றுத் தொழிலை நோக்கிச் சென்றதாகக் கூறுகின்றனர்.

280 ஏக்கர்களில் மல்பரி பயிரிட்டு விவசாயம் செய்து வந்தவர்களில் தற்போது 20 ஏக்கர்களில் 10% விவசாயிகள் மட்டுமே பட்டு வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். பட்டு வளர்ப்பிற்குக் கிராம மக்கள் திரும்ப வேண்டும் என்றால் ஓராண்டு முழுவதும் நஷ்டத்தையே சந்தித்து வந்த விவசாயிகளுக்கு அரசு நிதி உதவி, கூலி ஆட்களுக்கான தேவைகள் உள்ளிட்ட உதவிகளை வழங்க முன்வர வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைக்கின்றனர் கூலி அக்ரஹார கிராம மக்கள்.

இதையும் படிங்க: போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் தாமுவின் பேச்சை கேட்டு தேம்பி அழுத காவலர்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.