ETV Bharat / state

கடந்தாண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு பதிவான குற்ற வழக்குகள் குறைவு - கோவை காவல் துறை

author img

By

Published : Dec 30, 2020, 7:01 AM IST

கோவை: 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள், பதிவான வழக்குகள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை கோவை மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ளது.

The number of reported criminal cases this year is lower than last year shows covai police statement
கடந்தாண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு பதிவான குற்றவழக்குகள் குறைவு; கோவை காவல்துறை அறிக்கை

கோவை மாவட்ட காவல் துறை 2020ஆம் ஆண்டில் நடைபெற்ற குற்றச் சம்பவங்கள், பதிவான வழக்குகள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "இவ்வாண்டு பதிவான 41 கொலை வழக்குகளில் 38 கொலை வழக்குகளில் எதிரிகள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்குள்படுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஆதாயக்கொலை (2), கூட்டுக்கொள்ளை (4), வழிப்பறி (39) கன்னக்களவு (6), திருட்டு (349) ஆகிய குற்றங்கள் தொடர்பாகப் பதிவுசெய்யப்பட்ட 400 வழக்குகளில் 307 வழக்குகள் (77%) கண்டுபிடிக்கப்பட்டு களவாடப்பட்ட சொத்தின் மதிப்பு ரூபாய் 3,77,50,125 மதிப்பிலான சொத்துக்களில் ரூபாய் 3,19,65,540 மதிப்பிலான (85%) சொத்துகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயர் அலுவலர்களின் அறிவுறுத்தலின்படி செய்யப்பட்ட பகல், இரவு ரோந்தின் காரணமாக கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு 185 குற்ற வழக்குகள் குறைந்துள்ளன. 2019ஆம் ஆண்டைக் காட்டிலும் இந்த வருடம் 4 விழுக்காடு அதிகமாக குற்ற வழக்குகள் துப்பு துலக்கப்பட்டுள்ளன.

இதில், இந்த ஆண்டு ஏழு விழுக்காடு அதிகமான களவுபோன பொருள்கள் (85%) மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டு, நீதிமன்ற விசாரணையில் இருந்த 7 கொலை வழக்குகளில் 5 வழக்குகளில் ஆயுள் தண்டணையும், 2 வழக்குகளில் 7 ஆண்டு சிறைத்தண்டனையும் 1 ஆதாய கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும் நீதிமன்றம் மூலம் உறுதிசெய்யப்பட்டது. 1 கூட்டுக்கொள்ளை வழக்கில் 10 ஆண்டு சிறைத்தண்டனை நீதிமன்றம் மூலம் உறுதிசெய்யப்பட்டது.

பெண்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்கள்

கோவை மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக இவ்வாண்டு பதிவான 6 பாலியல் வன்கொடுமை குற்றங்களில் எதிரிகள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்குள்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் 63 பதிவாகியுள்ளன. அனைத்து வழக்குகளிலும் எதிரிகள் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின்கீழ் 121 குற்ற வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவ்வாண்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற 8 போக்சோ வழக்குகளில் 5 வழக்கில் எதிரிக்கு ஆயுள் தண்டனையும், 1 வழக்கில் 7 வருட சிறைத்தண்டனையும் 1 வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனையும் 1 வழக்கில் எதிரிக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும் பெற்றுத்தரப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் சம்பந்தமாக மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு 10 போக்சோ வழக்குகள் அதிகமாகப் பதிவாகியுள்ளன.

மதுவிலக்குத் தொடர்பாக இந்தாண்டு 4,794 வழக்குகள், போதை பொருள்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் 120 வழக்குகள், லாட்டரி தொடர்பாக 252 வழக்குகள், சூதாட்டம் தொடர்பாக 382 வழக்குகள், மணல் திருட்டு தொடர்பாக 14 வழக்குகள், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற பொருள்களை விற்றது தொடர்பாக 499 வழக்குகளும் பதிவுசெய்யப்பட்டு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மோட்டார் வாகன வழக்குகள்

வாகனத்தைப் பாதுகாப்பாக இயக்குவது குறித்து இந்தாண்டு மட்டும் மொத்தம் 3,263 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக மோட்டார் வாகன விபத்து வழக்குகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1814லிருந்து 1,724 ஆக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு சாலை விபத்தில் 456 நபர்கள் மரணம் அடைந்துள்ளனர். இந்தாண்டு உயிரிழப்பு 371 ஆக குறைந்துள்ளது.

மாவட்டத்தில் 3,57,194 மோட்டார் வாகன மட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு அவற்றில் குடிபோதையில் வண்டி ஓட்டுதல், அபாயகரமாக வாகனங்களை ஓட்டுதல் போன்றவற்றில் உட்பட்ட 3,265 நபர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு மீறல் வழக்குகள்

பொதுமக்களோடு மக்களாக இணைந்து பணியாற்றியதால் காவல் துறையில் 179 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதில், கோவை மாவட்ட ஆயுதப்படையைச் சேர்ந்த தங்க இசக்கி கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். மற்ற அனைவரும் பூரண நலம் பெற்றனர்.

இந்த கோவிட்- 19 தடை உத்தரவு காலங்களில் தடையை மீறியவர்கள் மீது மொத்தம் 23,080 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 28,200 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 20,300 வாகனங்கள் பறிமுதல்செய்து அனைத்து வாகனங்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.

மேலும், அபராதத் தொகையாக மொத்தம் 33,00,350 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது முகக்கவசம் அணியாதவர்கள், அரசு விதிகளை மீறுவோர்கள் மீது நடவடிக்கை எடுத்து ரூ.15,49,000 அபராதம் வசூலிக்கப்பட்டது. இரண்டு முறை கோவிட்-19 தொற்று குறித்து இணைய வழி ஓவியப்போட்டி நடத்தி குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறப்பு முகாம்கள்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக இந்தாண்டு 2,399 சிசிடிவி கேமராக்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் அதிகப்படியான குற்ற வழக்குகள் இந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 மாதங்களாக 1,150 மனு விசாரணை மனுதாரரின் வீட்டிற்குச் சென்று விசாரணை செய்தும், 15 சிறப்பு முகாம்களை நடத்தி மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வும் காணப்பட்டது. தேசிய குறை தீர்ப்பு நாளான டிசம்பர் 12ஆம் தேதி 1,056 வழக்குகள் நீதிமன்றத்தில் முடிக்கப்பட்டன.

தொலைந்துபோனவர்களைக் கண்டுபிடிக்க கடந்த நவம்பர் மாதம் 22ஆம் தேதியில் சிறப்பு முகாம் நடத்தியும், டிசம்பர் 25ஆம் தேதிவரை காணாமல்போன குழந்தைகளைக் கண்டுபிடிக்கும் சிறப்பு முகாம் நடத்தி 44 தொலைந்துபோனவர்களைக் கண்டுபிடித்தும், அடையாளம் தெரியாமல் இறந்தவர்களை அடையாளம் கண்டுபிடித்தும் அக்குடும்பத்தாருக்கு தெரியப்படுத்தப்பட்டது. 12 காணாமல்போன இளம்சிறார்களை சிறப்பு முகாம் மூலம் கண்டுபிடித்துள்ளோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஊரடங்கு காலத்தில் அதிகரித்த சைபர் குற்றங்கள் - திணறும் காவல்துறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.