ETV Bharat / state

யானை பாகன்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதியில் பாரபட்சம்? - அதிகாரிகள் விளக்கம் என்ன?

author img

By

Published : May 11, 2023, 8:57 AM IST

Updated : May 11, 2023, 9:14 AM IST

ஆஸ்கர் விருது எதிரொலியாக யானை பாகன்களுக்கு முதலமைச்சர் அறிவித்த 1 லட்சம் ரூபாய் நிதியுதவி, முதுமலை யானைகள் முகாமில் உள்ள நிரந்தர யானை பாகன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதால் தற்காலிக யானை பாகன்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
The funds announced by the Chief Minister for Mudumalai Elephant Pagans were given only to the permanent Pagans the Temporary Elephant Pagans are in turmoil
கோப்புப்படம்

முதுமலை யானை பாகன்களுக்கு முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதியில் பாரபட்சம்?

நீலகிரி: முதுமலை யானைகள் பராமரிப்பு முகாமில் சுமார் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் யானைகளை ஆற்றில் குளிப்பாட்டுவது, உணவு மாடத்திற்கு அழைத்துச் சென்று உணவளிப்பது, யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிப்பதும், ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவது போன்ற பணிகளில் இங்கு வளர்க்கப்படும் கும்கி யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் முதுமலையில் குட்டி யானைகளை பராமரித்த பொம்மன்-பெள்ளி பாகன் தம்பதி குறித்து படமாக்கப்பட்ட 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்தது. இந்த தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் பொம்மன் - பெள்ளி தம்பதியின் அன்றாட வாழ்வில் ஒன்றோடு ஒன்றாக இருக்கும் குட்டி யானைகளை அவர்கள் கவனித்துக் கொள்ளும் விதங்களை எந்த மிகைப்படுத்துதலும் இன்றி தத்ரூபமாக படமாக்கப்பட்டிருக்கும்.

இந்த ஆவணப்படத்திற்கு ஆஸ்கர் அறிவிக்கப்பட்டதும் பொம்மன் - பெள்ளி தம்பதி புகழ் பரவத் துவங்கியது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் தெப்பக்காட்டிற்கு சென்று தம்பதியரை சந்தித்தார். தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவண படத்திற்கு ஆஸ்கர் அறிவிக்கப்பட்டதும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பொம்மன் - பெள்ளி தம்பதியருக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார். மேலும் அவர்களுக்கு நிதி உதவியும் வழங்கினார். மேலும் 91 யானை பாகன்களுக்கு வீடு கட்டுவதற்கு உதவும் வகையில் யானை பாகன்களுக்கு தலா 1 லட்சம் வீதம் நிதி வழங்கப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 60 க்கும் மேற்பட்ட யானை பாகன்கள் உள்ள நிலையில், நிரந்தர பாகன்களாக உள்ள 34 பேருக்கு மட்டுமே முதலமைச்சர் அறிவித்த 1 லட்சம் ருபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்காலிகமாக யானை பாகன்களாக பணியாற்று 20க்கும் மேற்பட்டோருக்கு இதுவரை இந்த நிதி வழங்கப்படவில்லை.

இதனால் தற்காலிக யானை பாகன்கள் தங்களது குடும்ப சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். தங்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த நிதி கிடைத்தால் வீடுகளை சீரமைக்கவும், குழந்தைகளின் கல்வி செலவிற்கு உதவியாக இருக்கும் என தற்காலிக யானை பாகன்கள் முதலமைச்சர் அறிவித்த நிதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும், தங்களுக்கு நிதி வழங்கப்படாததால் முதலமைச்சரின் அறிவிப்பு வெறும் அறிப்பாக மட்டுமே இருந்து விடுமோ என்ற கவலையில் அவர்கள் இருந்து வருகின்றனர். முதலமைச்சர் அறிவித்த நிதி டாப்சிலிப் யானைகள் முகாமில் உள்ள அனைத்து யானை பாகன்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "முதலமைச்சர் அறிவித்த நிதி அனைவருக்கும் வழங்கப்படும். தற்காலிக பணியாளர்களுக்கு வழங்க காலதாமதம் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கும் விரைவில் வழங்குவோம்" என தெரிவித்தனர்.

இதையும் படிங்க: "ரூ.1 லட்சம் கோடி மதுபான ஊழல்" - மு.க.ஸ்டாலின் அரசு மீது கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

Last Updated :May 11, 2023, 9:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.