ETV Bharat / state

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தமிழக அரசு ஆராய வேண்டும் - அண்ணாமலை கருத்து

author img

By

Published : Mar 9, 2023, 7:01 AM IST

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை அர்த்தத்தோடு தான் ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பார் என்றும் அதனை 234 சட்டமன்ற உறுப்பினர்களும் ஆராய்ந்து உரிய பதிலை அளிக்க வேண்டும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கே.அண்ணாமலை
கே.அண்ணாமலை

கோயம்புத்தூர்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 'சாதனை மகளிர் சங்கமம்' என்ற அமைப்பு சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 13 பெண்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்டு சாதனை பெண்களுக்கு விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர், "அனைத்து சகோதரிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். வேறு வேறு பணிகளில் ஆளுமையாக நீங்கள் தொடர்ந்து பிரகாசிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறேன். என் பேருக்குப் பிறகு எம்.பி, எம்எல்ஏ என போடுவதற்காக நான் கட்சிக்கு வரவில்லை. பாஜக வளர வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். அதற்காகத்தான் என்னுடைய முயற்சி. இன்னொரு கட்சியின் பலவீனத்தைப் பயன்படுத்தி பாஜக வளர கூடாது. அப்படி வளர்ந்தாலும் கூட அது தொடர்ச்சியானதாக இருக்காது. பாஜக தமிழக மக்களின் அன்பைப் பெற்று வளர வேண்டும்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "செவ்வாய்க்கிழமையன்று மதுரையில் பேசியது தான் என்னுடைய கருத்து. அதிலிருந்து ஒரு படி மேலும் கிடையாது கீழும் கிடையாது. மற்றவர்களுடைய தனிப்பட்ட கருத்துக்கள் என்பது அவரவர்கள் அவருடைய கருத்துகள். வேறு வேறு கட்சியில் இருக்கும் தலைவர்கள் வளர்ந்த கட்சியின் இணைந்து தலைவர்களாக வாழ்கின்றனர். பாஜக தொண்டர்கள் யாரும் செல்லாத பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்னுடைய பாதை தனியாகத்தான் இருக்கிறது. பாஜகவை அதிமுகவுடன் இணைத்துப் பேசாதீர்கள். ஆளும் கட்சியுடன ஒப்பீடு செய்யாதீர்கள். மற்ற கட்சியில் இருக்கும் எல்லா தலைவர்களும் ஆட்சிக்கு வந்த பிறகு தான் இணைந்திருப்பார்கள். பாஜக தொண்டர்கள் எப்பொழுது ஆட்சிக்கு வரும் என தெரியாமல் காத்திருக்கின்றனர். அதில் நானும் ஒருவனாக இருக்கின்றேன்.

பாஜகவின் பாதை தனித்தன்மையான பாதை. அது எப்படி இருக்கும் என்று சொல்லிவிட்டேன். நான் எப்படி இருப்பேன் என்று சொல்லிவிட்டேன். நான் எதற்கும் மாற மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். நான் தலைவராக இருக்கும் வரை இந்த கட்சி இப்படித்தான் இருக்கும். இந்த கட்சியில் சில விஷயங்கள் மாறித்தான் ஆக வேண்டும். ஆட்சிக்கு வருவோம் என்று சொல்வது எளிது அப்படி சொல்ல நான் விரும்பவில்லை. எனது தொண்டர்களையும் அப்படி வழிநடத்த விரும்புவதில்லை. சில இடங்களுக்குச் செல்ல வலி எடுக்க வேண்டும், ரத்தம் வரவேண்டும், அவமானங்களைச் சந்திக்க வேண்டும். அனைத்து மோசமானவற்றையும்
கடந்து தான் செல்ல வேண்டும்" என்றார்.

மேலும், "ஒவ்வொரு விமர்சனங்களுக்கும் அண்ணாமலை பதில் சொல்லத் தேவையில்லை. எல்லா கட்சியும் வளர்ந்து வந்த பாதை வேறு. பாஜக வளரும் பாதை வேறு. இவர்கள் யார் கருத்துச் சொன்னாலும் அது அவர்களுடைய கருத்துக்கள். அது அவர்களுடைய அரசியல் அனுபவத்தை வைத்துச் சொல்கின்றனர். ஜெயலலிதாவுடன் யாரையும் ஒப்பிடவில்லை. யாரும் யாரையும் கம்பேர் பண்ணவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தன்மையும் இருக்கிறது. சில அரசியல் கட்சிகளில் மேனேஜர் இருக்கின்றனர். சில கட்சிகளில் தலைவர்கள் இருக்கின்றனர். ஜெயலலிதாவிற்கு டெபாசிட் போனாலும் துணிந்து நின்று தேர்தலில் ஜெயித்தார்கள். தலைவர் எப்படி இருப்பார் என்பதற்கான உவமை தான் அது.

இந்த அரசியலில் காப்பர்மைஸ் பாலிடிக்ஸ் எனக்கு தேவையில்லை. என்னுடைய முடிவில் தெளிவாக இருக்கின்றேன். பாஜகவின் காலம் வந்து விட்டதாக நான் கருதுகின்றேன். நான் யாருடனும் என்னை ஒப்பிட்டுப் பார்க்கவில்லை. எனது தாய், மனைவி ஜெயலலிதாவை விட மேலானவர்கள். அவதூறு வழக்குகள் போடாமல் இருக்கும் தலைவர் நான் மட்டும் தான். மக்கள் மன்றத்தில் கருத்துகளை சொல்லட்டும், அவர்கள் முடிவு எடுக்கட்டும்.

ஆளுநர் ரம்மி மசோதா விவகாரம்: ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் அதை தடை செய்ய வேண்டும் என்பது தான் பாஜக கருத்து. சட்டமன்றத்தில் மீண்டும் தீர்மானமாகக் கொடுத்தால் அதற்கு ஆளுநர் கையெழுத்துப் போட்டுத் தான் ஆக வேண்டும். இது சட்டம் ஆளுநர் கையெழுத்துப் போட்டு அமலுக்கு வந்தால், அதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவு ஆக வாய்ப்பு இருக்கின்றது.

234 சட்டமன்ற உறுப்பினர்களும் மறுபடியும் ஆராய்ந்து அதில் இருக்கும் பிரச்சினைகளை விவாதிக்க வேண்டும். ஆளுநர் சும்மா திருப்பி அனுப்ப மாட்டார். எதாவது விளக்கம் கேட்டு இருப்பார். தமிழக அரசும், சபாநாயகருக்கும் ஆளுநர் எழுப்பி இருக்கும் கருத்தை ஒவ்வொரு தமிழனுக்கும் தெரிந்து கொள்ள அதை வெளியிட வேண்டும். அது தெரிந்து கொள்வது கட்டாயமாக இருக்கிறது. அது ஆரோக்கியமான விவாதங்களை ஏற்படுத்தும்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, "தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வேறு வேறு கட்சியிலிருந்து பாஜகவில் இணைகின்றனர். இன்று கரூரில் இணைந்தனர். இணைவதும், வேறு கட்சிக்குப் போவது எல்லாம் சகஜம். இரண்டாம் தர, மூன்றாம் தர, நான்காம் தர தலைவர்கள் வேறு கட்சியில் இணைந்தால் அது பெரிய செய்தியாக வருகிறது என்றால் அதை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்கின்றனர் என அர்த்தம்.

திமுகவில் இருக்கும் பாதி அமைச்சர்கள் அதிமுகவிலிருந்து வந்தவர்கள் தான். மாற்று கட்சிக்குச் செல்பவர்களுக்கு நான் சொல்வது நலலாயிருங்கள். போகும் இடத்தில் விஸ்வாசமாக இருங்கள் அரசியலில் என்ன சாதிக்க வேண்டும் என நினைத்தீர்களோ அதை செய்யுங்கள். பாஜக ஐடி விங் என்பது உணர்வுப்பூர்வமாக வேலை செய்யும் இடம். பாஜகவின் அங்கமாக இல்லாதவர்தான் பாதிப்பேர் இந்த ஐடி விங் வேலையைச் செய்கின்றனர்.

உறுப்பினர் அட்டை இல்லாதவர்கள் ஐடி விங் வேலையை செய்து கொண்டு இருப்பார்கள். இன்னும் ஒரு ஆறு மாதத்தில் பெரிய பெரிய தலைகள் கட்சியிலிருந்து வெளியில் செல்வதற்கும், பெரிய பெரிய தலைகள் இங்கு வருவதற்கும் வாய்ப்பு உண்டு. நாளை ஒரு எம்எல்ஏ வந்தால் கூட பாஜக இன்னொரு இடைத்தேர்தல் வேண்டுமா என யோசிக்கும். புதிய ஆட்களை சேர்ப்பது அகில இந்திய கட்சிக்குப் பெரிய விஷயமல்ல. தமிழகத்திற்கு என்ன பயன் என்று யோசித்துச் செய்கின்றோம்.

ஊழல் செய்தால் அமலாக்கத்துறை வருகிறது. கே.எஸ்.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் அமர்ந்து மணீஷ் சீசோடியா விவகாரம் குறித்துப் பேச வேண்டும். ஆளுக்கு ஒரு கருத்தினை வைத்திருக்கின்றனர்" பேசினார்.

முன்னதாக விழா மேடையில் ஒட்டப்பட்டிருந்த அண்ணாமலையின் புகைப்படத்தை அவரே அகற்றினார். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், இது மகளிருக்கான நிகழ்ச்சி என்பதால் தான் தனது புகைப்படத்தை எடுத்ததாக அவரே விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க: 2வது முறையாக திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.