ETV Bharat / state

Sharmila: கோவை பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம்.. ஷர்மிளாவின் விளக்கம் என்ன?

author img

By

Published : Jun 23, 2023, 4:39 PM IST

Updated : Jun 23, 2023, 6:12 PM IST

கோவையில் தனியார் பேருந்தில் பெண் ஓட்டுநரான பணியாற்றி வந்த ஷர்மிளா தீடீர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

driver sharmila
ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கம்

பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா செய்தியாளர்கள் சந்திப்பு

கோயம்புத்தூர்: கோவையில் காந்திபுரம், சோமனூர் ரூட்டுகளின் தலைவியாக வலம் வந்தவர் 23 வயது ஷர்மிளா. இவர் தமிழ்நாட்டின் முதல் பெண் தனியார் பேருந்து ஓட்டுநர் என்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தார். ஆணுக்கு பெண் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை எனவும், பெண்களால் முடியாது என்று எதுவும் இல்லை எனவும் அனைவருக்கும் வார்த்தைகளில் அல்ல செயலில் கூறியவர்.

தனியார் பேருந்து ஓட்டுநரான சர்மிளா ஆண் ஓட்டுநருக்கு இணையாக பேருந்தை வளைத்து அனாயசமாக ஓட்டும் திறமை கொண்டவர் என்றும் கூறப்படுகிறது. இப்படி திறமை படைத்த ஷர்மிளாவுக்கு அப்பேருந்தில் வரும் அனைவருமே ரசிகர்களாக மாறிவிட்டனர். கூறப்போனால் எங்கு பார்த்தாலும் ஷர்மிளாவுக்கு பாராட்டு மழை பொழிந்தது. அதுவே தற்போது வினையானது என்று கூறும்படி ஆகிவிட்டது.

ஆட்டோ ஓட்டுநரான ஷர்மிளாவின் தந்தை மகேஷ் தான் ஊக்கம் கொடுத்து வளர்த்துள்ளார். அந்த ஊக்கமே அவரை மிகவும் ஊக்கப்படுத்தியுள்ளது. பெண்கள் என்றால் அதை செய்யக் கூடாது, இதை செய்யக் கூடாது என கூறும் பெற்றோர் மத்தியில் ஷர்மிளாவுக்கு நீ எதை வேண்டுமானாலும் செய் எனக் கூறி உறுதுணையாக இருந்துள்ளார் இவரின் தந்தை.

ஆரம்பத்தில் தனது தந்தை ஓட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டிப்பார்த்த ஷர்மிளா, பின் தந்தைக்கு துணையாகவும் ஆட்டோ ஓட்டியுள்ளார். இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்தே ஆட்டோ ஓட்டி தனது ஓட்டுநர் பயணத்தை துவங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தனக்கு கனரக வாகனம் ஓட்ட வேண்டும் என தனது தந்தையிடம் கூறிய போது, முழு ஆதரவு தந்து, "நீ சாதிக்கனும்ன்னு நினச்சா... சாதிச்சிரு, கோவையில என் பொண்ணுதான் முதல் டிரைவர்ன்னு நான் பெருமையா சொல்லிப்பேன்" என ஊக்கம் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து, ஓட்டுநர் பயிற்சி முடித்து அரசு வேலைக்காக காத்திருந்து நேரத்தை வீணடிக்காமல் விவி டிரான்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவனத்தில் ஓட்டிநராக சேர்ந்துள்ளார்.

ஆரம்பத்தில் காக்கி சட்டை போட்ட போது சர்மிளாவைப் பார்த்து நகைத்தவர்கள் வாயில் கை வைக்கும் அளவிற்கு சாதித்து காட்டியுள்ளார் ஷர்மிளா. அதன்பின்னர் மீடியா மூலம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாடு முழுவது பேமஸ் ஆக மாறிவிட்டார். அதனைத் தொடர்ந்து பல கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் ஷர்மிளாவை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஷர்மிளாவை சந்திக்க வேண்டும் என கடந்த ஜூன் 13 ஆம் தேதி வானதி ஷர்மிளாவுக்கு அதிர்ச்சி கொடுத்து பார்வையிட்டார். அப்போது காந்திபுரத்தில் இருந்து கருத்தம்பட்டி செல்லும் பேருந்தில் பார்வையிட்ட வானதி சீனிவாசன் பேருந்தில் பயணித்து அவருடன் கலந்துரையாடினார்.

அதனைத் தொடர்ந்து, இன்று காலையில் தூத்துக்குடி எம்.பி கனிமொழி ஷர்மிளாவை நேரில் சென்று வாழ்த்துக் கூறி பார்வையிட்டார். அதன் பின்னர் கனிமொழி பேருந்தில் பயணித்த ஷர்மிளாவிடம் சரிவர பேச முடியவில்லை என்ற காரணத்தால் பீளமேடு பகுதியில் இறங்கி இருவரும் கலந்துரையாடினர். அதன் பின்னர் தங்களுக்கு எந்த உதவி வேண்டும் என்றாலும் தாங்கள் செய்வதாக கூறிய கனிமொழி ஷர்மிளாவிற்கு கடிகாரத்தை பரிசளித்து கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் கனிமொழி.

இந்த நிலையில், அவர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் அப்பேருந்தில் புதிதாக பணிக்கு சேர்ந்துள்ள நடத்துநர் பெண் தான் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு பெண்ணுக்கு பெண் தான் எதிரி எனக் கூறுவார்கள் ஆனால் அது ஷர்மிளா விஷயத்தில் உண்மையாகிவிட்டது என பலரும் சமூகவலைதளத்தில் கூறுகின்றனர்.

எம்.பி கனிமொழி பார்த்து சென்ற பின்னர் இது தொடர்பாக பேருந்து நடத்துநர் மன உளைச்சல் ஆகும் படி பேசியதாகவும், அது குறித்து உரிமையாளரிடம் புகார் செய்த போது அவரும் உன் புகழுக்காக பேருந்தை பயன்படுத்துகிறாயா? என திட்டியதாகவும் கூறப்படுகிறது. அதனால் வாக்குவாதம் ஏற்பட்டு "உன் பிள்ளையை கூப்பிட்டு போ" எனக் கூறியதால் தானாகவே பணியை விட முடிவு செய்ததாக ஷர்மிளா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஷர்மிளா அளித்த பேட்டியில், "காலையில் கனிமொழி எம்பி என்னை பார்க்க வந்து, பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவர் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு தான் பேருந்தில் பயணம் செய்தார். ஆனால் பேருந்தில் இருந்த பெண் நடத்துநர் (அன்னத்தாய்) மனம் வருத்தப்படும்படி பேசினார். அப்போது நான் அவரிடம் இவ்வாறு பேச வேண்டாம் எனக் கூறினேன்.

அதனால் இது குறித்து எனது முதலாளியிடம் தெரிவிக்கும்போது உனது பாப்புலாரிட்டிக்காக ஒவ்வொருவரையும் அழைத்து வருகிறாயா?... அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. கனிமொழி பேருந்தில் வரும் விஷயமே தங்களுக்கு தெரியாது என்று முதலாளி மாற்றி மாற்றி கூறினார். ஆனால் கனிமொழி வருவது குறித்து நான் ஏற்கனவே முதலாளியிடமும், மேனேஜரிடமும் தெரிவித்திருந்தேன்.

மேலும் இந்த வாக்குவாதம் நிகழும் போது எனது அப்பாவும் உடன் இருந்தார். அந்த சூழ்நிலையில் என் அப்பா கோபத்தில் 'நான் பைத்தியக்காரனா' என்று வார்த்தையை விட்டுவிட்டார். அதனால், பேருந்து உரிமையாளர் உனது பிள்ளையை அழைத்துக் கொண்டு போ என்று கூறினார். அதற்கு என்ன அர்த்தம், ஆகையால் நாங்கள் வருகிறோம் என்று கூறிவிட்டு வந்து விட்டோம். பப்ளீசிட்டிக்காக செய்தால் யாராவது காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணிவரை பேருந்தை ஓட்டுவார்களா?. மனசாட்சியே இல்லாமல் பேசுகின்றனர்.

எப்போதும் எனக்கு ஆதரவாக பேசுபவர் இன்று எனக்கு எதிராக பேசியது மிகவும் மன வருத்தத்தை அளித்தது. வானதி சீனிவாசன் சொல்லாமலேயே வந்தார். ஆனால் கனிமொழி கூறிவிட்டு தான் வந்தார். ஆகையால் இது குறித்து ஓனரிடமும் நான் கனிமொழி வருவதாக தெரிவித்து இருந்தேன். இருப்பினும் அவர்கள் நான் கூறவில்லை என்று கூறிவிட்டார். தற்போது ஒரு ஓட்டுநரின் நிலைமை இதுதானா என மனதில் உறுத்தி கொண்டே இருக்கிறது" என மிகவும் மன வேதனையுடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வைரல் பெண் டிரைவர் ஷர்மிளா பணி நீக்கம் - கனிமொழியுடன் சந்தித்த நிலையில் நடவடிக்கை

Last Updated : Jun 23, 2023, 6:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.