ETV Bharat / state

தமிழ்நாட்டில் பாஜக எங்குள்ளது.. மொத்த உறுப்பினர்கள் எவ்வளவு.. கேள்வி எழுப்பிய செந்தில் பாலாஜி..

author img

By

Published : Dec 24, 2022, 1:15 PM IST

ரூ.345 மதிப்புள்ள காது கேளாதோர் கருவியை கொடுத்துவிட்டு, 10,000 ரூபாய் என பொய் சொல்லக்கூடியவர்கள் பாஜகவினர் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

காது கேளாதோர் கருவியின் விலை ரூ.345.. பாஜகவினரை விமர்சித்த செந்தில் பாலாஜி!
காது கேளாதோர் கருவியின் விலை ரூ.345.. பாஜகவினரை விமர்சித்த செந்தில் பாலாஜி!

கோயம்புத்தூர்: பெரியாரின் 49ஆவது நினைவு தினத்தை ஒட்டி, காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (டிசம்பர் 24) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ் மண் என்பது திராவிட மண். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய முப்பெரும் தலைவர்களின் உருவமாக முதலமைச்சர் உள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் இழந்த பெருமைகளை மீட்டெடுத்து, இன்று ஒரு சிறந்த ஆட்சியை முதலமைச்சர் வழி நடத்தி வருகிறார்.

ஒன்றரை ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதி நிலைமைகளை சரி செய்து, 85 விழுக்காடு வாக்குறுதிகளை முழுவதுமாக வழங்கி உள்ளார். இன்னும் வரக்கூடிய ஆண்டுகளில் கோவை மண்ணுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளோடு, கூடுதலாக திட்டங்களை நிறைவேற்றுவார்.

விமான நிலைய விரிவாக்கத்துக்கு ஒன்றரை ஆண்டுகளில் 1,084 கோடி செலவிடப்பட்டு நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, விரிவாக்க பணிகள் தொடங்க உள்ளது. மேம்பாலம், சாலை மற்றும் குடிநீர் திட்டம் ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அதற்கான நிதிகளை முதலமைச்சர் வழங்குகிறார்.

தொடர்ந்து செயல்படுத்தப்படும் பணிகள்: கோவை மாநகராட்சியில் 114 கிலோ மீட்டர் மண் சாலைகள் உள்ளது. இதனை அதிமுக ஆட்சியில் தார் சாலைகளாக மாற்றி இருக்கலாம். ஆனால் அவர்கள் செய்யவில்லை. பாதாளச் சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகளையும் சரி செய்யவில்லை. ஒரு சாலை அமைப்பது ஐந்து ஆண்டு ஆயுட்காலம்.

கோவை மாநகராட்சி பகுதியில் எந்த விதமான சாலை பணியும் கடந்த ஆட்சியில் நடைபெறவில்லை. தற்போது புதிய சாலைகளை அமைக்க நிதி கொடுத்து திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. 211 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, கூடுதலாக 19 கோடி ரூபாய் சிறப்பு நிதியை முதலமைச்சர் விடுவித்துள்ளார்.

மீதமுள்ள நிதியான 200 கோடியும் மார்ச் மாதத்தில் விடுவிக்கப்பட்டு, விடுபட்ட சாலைகள் புனரமைக்கப்படும். தனியார் பள்ளிகளில் மாணவர் குறிப்பேட்டில் சாதி குறிப்பிடுவது குறித்து கல்வி அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

பாஜகவின் ஓட்டு வங்கி எவ்வளவு? பாஜக, தமிழ்நாட்டில் எங்கு உள்ளது? அதில் எத்தனை பேர் உள்ளனர்? எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளது என்பது தெரியாத கட்சி, பாஜக. 345 ரூபாய் மதிப்புள்ள காது கேளாதோர் கருவியை கொடுத்துவிட்டு, 10,000 ரூபாய் என பொய் சொல்லக்கூடியவர்கள் பாஜகவினர்.

37 வயதில் 20,000 புத்தகங்கள் படித்துள்ளனர் என பொய் சொல்கின்றனர். பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது, கேஸ் சிலிண்டர் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை பார்த்தால் சாமானிய மக்களின் நிலைமை என்ன? அது குறித்த கருத்தை அவர்களிடம் கேளுங்கள். கேஸ் மானியம் எத்தனை பேருக்கு வருகிறது? ஒரு பைசா கூட வரவில்லை, ஜீரோ.

இப்படிப்பட்ட சூழலில் சிறந்த ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டுக்கு களங்கம் விளைவிக்கக் கூடிய வகையில், சமூக வலைதளத்தை பாஜகவினர் பயன்படுத்துகின்றனர். அவர்கள் சொல்லக்கூடிய கருத்துக்கள் சரியா, தவறா என தெரிந்து பின்னர் செய்தி வெளியிடுங்கள்.

நடந்து முடிந்த நகர்புற தேர்தலில் கோவை மாநகராட்சியில் எத்தனை வார்டில் பாஜக ஜெயித்தது? பாஜகவுக்கு எவ்வளவு ஓட்டு வங்கி முதலில் உள்ளது? எவ்வளவு உறுப்பினர் என்பதை கேட்டு சொல்லுங்கள். அதை வைத்து ஒப்பிட்டு பார்க்கலாம். 234 தொகுதியின் தனது தொகுதியாக நினைத்து கோவை மாவட்ட வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்களை முதலமைச்சர் வழங்கி வருகிறார்.

நாளை முதலமைச்சர் நல்லாசியோடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 25,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி, விழாப் பேருரை ஆற்றுகிறார். நேரு விளையாட்டு மைதானத்தில் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் துறை சார்ந்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதன் பின்னர் நலத்திட்ட உதவி நடைபெறும்.

திட்டங்களை பெறும் மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது. சிங்காநல்லூர் எஸ்ஐஎச்எஸ் காலனி பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்துக்கு ரூ.29 கோடி நிதியை ஒன்றரை ஆண்டுகளில் முதலமைச்சர் வழங்கியுள்ளார். விரைவில் பாலப்பணி நிறைவடையும். கடந்த அதிமுக ஆட்சியில் இந்த பாலத்திற்கு நிதி ஒதுக்கவில்லை” என்றார்.

இதையும் படிங்க: அண்ணாமலை பேச்சுக்கு அஞ்சக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.