ETV Bharat / state

கோவையில் தொடரும் ராகிங் பிரச்சினை! ஜூனியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சீனியர்கள் உள்பட 3 பேர் கைது!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2023, 7:19 PM IST

கோவை தனியார் கல்லூரியில் ஜூனியர் மாணவரை ராக்கிங் செய்து தாக்குதல் நடத்தியதாக சீனியர் மாணவர்கள் இருவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Senior students arrested for ragging a junior in a private college in Coimbatore
கோவையில் தனியார் கல்லூரியில் ஜூனியரை ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

கோயம்புத்தூர்: சூலூர், குமரன் கோட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தக் கல்லூரியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அகிலேஷ் (வயது 18) என்ற மாணவர் இரண்டாம் ஆண்டு பொறியியல் (மெக்கட்ரானிக்ஸ்) படிப்பை கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகிறார்.

இந்த நிலையில் அகிலேஷ் உடன் அதே கல்லூரியில் அவரது பாடப்பிரிவல் படிக்கும் 12 மாணவர்களும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் அகிலேஷ் மற்றும் சக மாணவர்கள் விடுதியில் தங்கி இருந்த போது கடந்த புதன்கிழமை மாலை அதே கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு படிக்கும் குரல் இனியன், அரவிந்த், நான்காம் ஆண்டு படிக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த முத்து குமார் மற்றும் கரூரை சேர்ந்த கோகுல் ஆகியோர், கல்லூரிக்குள் காப்பு கயிறு கட்டக்கூடாது, முழுக்கை சட்டை அணிந்து டக்கின் செய்திருக்க வேண்டும், சீனியர் முன்னாள் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது, சீனியர் வந்தால் மரியாதை செலுத்த வேண்டும் எனக் கூறி எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அகிலேஷ் விடுதியில் இருந்து வெளியே சென்றுவிட, நேற்று (நவ. 23) மாலை அகிலேஷ் மற்றும் அவருடன் படிக்கும் 12 மாணவர்களையும் கல்லூரி முடிந்த பின்பு சூலூர் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வெங்கடேஷ் என்ற மாணவனின் அறைக்கு வருமாறு கூறியதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, அகிலேஷ் மற்றும் 12 மாணவர்களும் சென்ற நிலையில் அகிலேஷைத் தவிர மற்ற 12 மாணவர்களையும் கோகுல், முத்துக்குமார் ஆகிய இருவரும் எச்சரித்து அனுப்பி வைத்ததாகவும், அகிலேஷை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்ட முத்துக்குமார் மற்றும் கோகுல் ஆகியோர் முத்துக்குமாரின் நண்பரான சூலூர் டீக்கடையில் வேலை செய்து வரும் தனபால் என்பவரின் அறைக்கு அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.

அங்கு மூவரும் இணைந்து அகிலேஷை தகாத வார்த்தையால் திட்டியதோடு கைகளால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அகிலேஷின் கைக்கடிகாரம் மற்றும் செல்போனை பிடுங்கி உடைத்து, "சீனியர் மாணவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும், இல்லையென்றால் கொலை செய்து விடுவோம்" என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதில் நெற்றி பகுதியில் காயமடைந்த அகிலேஷ் இதுகுறித்து விடுதி காப்பாளர் இடம் தகவல் கூறிவிட்டு சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அந்த புகாரின் பேரில் சூலூர் காவல் துறையினர் 294(b), 323, 506(i),4 of tamilnadu prohibition ragging act ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருந்த முத்துக்குமார், கோகுல், டீக்கடை ஊழியர் தனபால் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சீனியர் மாணவர்கள் இரண்டாம் ஆண்டு மாணவரை மொட்டை அடித்து தாக்குதல் நடத்தி ராகிங் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு கல்லூரியில் ராகிங் சம்பவம் அரங்கேறியிருப்பது கோவையில் பயிலும் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: "தவறு செய்வது மனிதம்.. மன்னிப்பது தெய்வீகம்" - நடிகை த்ரிஷா ட்வீட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.