ETV Bharat / state

ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு - தமிழ்நாடு எல்லையில் கேரள காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Jul 21, 2022, 9:30 PM IST

ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு - கேரள காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு - கேரள காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

கோயம்புத்தூர்: சமீபத்தில் தமிழ்நாடு அரசு, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில் ரூ.930 கோடி செலவிலான திட்டம் ஒன்றை அறிவித்தது. இதற்கு பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசியல் கட்சியினர், விவசாயிகள், தொழில்துறையினர் உள்படப் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கேரள மாநில எல்லையோர கிராமங்களிலும் எதிர்ப்புக்கிளம்பியுள்ளது. இதனால் தமிழ்நாடு - கேரள எல்லையான கோபாலபுரம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் பாலக்காடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் தணிகாச்சலம் தலைமையில் நடைபெற்றது.

இதற்கு சித்தூர் ஒன்றியத் தலைவர்களான ராஜமாணிக்கம், சதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் சுமேஷ் அச்சுதன், கேரள காங்கிரஸ் துணைத்தலைவர் சுசீந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கேரள காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

இதனைத்தொடர்ந்து பாலக்காடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் தணிகாச்சலம் பேசுகையில், “கேரள மாநிலத்தில் உள்ள சித்தூர் நகராட்சி, கொழிஞ்சாம்பாறை, வடகரபதி, எரித்தேன்பதி, நல்லேபிள்ளை உள்ளிட்ட 11 ஊராட்சி பகுதிகளின் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் ஆழியாறு அணையிலிருந்து வரும் தண்ணீரை நம்பி உள்ளோம்.

பி.ஏ.பி ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் 7.25 டி.எம்.சிக்கு பதிலாக குறைவான தண்ணீரே வழங்கப்படுகிறது. இதனால் இங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிலும் மழை குறைந்தால் எங்களுக்கு வழங்கப்படும் தண்ணீரின் அளவும் குறைகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு, ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு குடிநீர் கொண்டு செல்ல புதிய திட்டத்தை அறிவித்துள்ளது, இப்பகுதி மக்களை மேலும் கடுமையாகப் பாதிக்கும்.

ஆகவே, இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பாலக்காடு காங்கிரஸ் கமிட்டியின் துணைச்செயலாளர் சுமேஷ் அச்சுதன், “தமிழ்நாடு எல்லையில் உள்ள கேரள மாநிலத்திற்கு உட்பட்ட ஒரு நகராட்சி, பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள், அதற்கு உட்பட்ட 115 கிராமங்கள் ஆகியவற்றில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவை, சுமார் 60,000 ஏக்கர் விவசாய நிலங்களும் ஆழியாற்றில் இருந்து வரும் தண்ணீரை நம்பி உள்ளது.

ஆனால், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஒட்டன்சத்திரத்திற்கான குடிநீர் திட்டத்தால் இப்பகுதி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, பாலைவனமாகும் சூழ்நிலையும் உள்ளது. ஆகவே, கேரள அரசு உடனடியாக தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும். தவறினால் போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலத்திட்டத்திற்கு எதிர்ப்புத்தெரிவித்து மூணாறில் தமிழ் மக்கள் வேலை நிறுத்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.