ETV Bharat / state

எஸ்.பி.வேலுமணி செய்யாத பணிகளை நாங்கள் செய்வோம் - அமைச்சர் செந்தில் பாலாஜி

author img

By

Published : Nov 20, 2022, 10:43 PM IST

கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்யாத பணிகளை நாங்கள் செய்வோம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

கோவை: கணபதி பகுதியில் தனியார் மருத்துவமனையை தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று (நவ.20) திறந்து வைத்தார். இந்நிகழ்க்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ’மின் நுகர்வோரிடத்தில் ஆதார் எண் இணைப்பு என்பது மின் துறையில் நிகழ்காலத்திற்கு ஏற்ப மேம்படுத்துவதற்கான நடவடிக்கை’ எனக் கூறினார். முன்னர் 1 கோடியே 15 லட்சம் தரவுகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது 3 கோடிக்கும் மேற்பட்ட மின் நுகர்வோரின் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மின்சாரம் எவ்வளவு உற்பத்தி செய்யப்படுகிறது, தனியார் கொள்முதல் மற்றும் மின் விநியோகம் செய்யப்படும் அளவு, கட்டண அளவுகள் கணக்கிடப்பட்டு மின் துறையை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்றார். இதற்காகவே, ஆதார் இணைப்பு எனவும் ஆதார் இணைக்காவிட்டால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்பது மிக அவதூறான கருத்துகள் எனவும் கூறினார். இப்போதுள்ள மின் விநியோகத்தில் எந்த வித மாற்றமும் இருக்காது எனவும்; மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தக் கூடிய கருத்துகளை யாரும் வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

100 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு மின் இணைப்பு: ஏற்கெனவே, ஓராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து, தற்போது கரூரில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி தமிழக முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றதை எடுத்துக்கூறினார். மேலும், 100 நாட்களுக்குள் 50 ஆயிரம் விவசாயிகளுக்கும் முழுமையாக இலவச மின் இணைப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், 50 ஆயிரமாவது மின் இணைப்பு பெறும் விவசாயி முதலமைச்சர் கையால் பெறுவார் எனவும் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் கோவையில் நடைபெற்ற திட்டங்களை விட இந்த 5 ஆண்டுகளில் வளர்ச்சித் திட்டங்கள் கோவைக்கு வரவழைக்கப்படும் எனக் கூறினார். தற்போது 2 லட்சம் மின் கம்பங்கள், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் மாற்றிகள் கையிருப்பில் உள்ளன எனத் தெரிவித்தார். பருவமழையை சமாளிக்க முன் ஏற்பாடுகள் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மின் கம்பங்கள் சீரமைப்பு: ஜூன் முதல் அக்டோபர் வரை பழுதடைந்த 44 ஆயிரம் மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், இதுபோல 14 லட்சத்து 69 ஆயிரம் சிறப்புப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மழையை எதிர்கொள்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். கடந்த காலத்தைப்போல், இந்தமுறை மழைக்காலத்தில் மின் விநியோகம் தடைபடவில்லை எனவும் தெரிவித்தார்.

கேஜி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை திறந்த வைத்த அமைச்சர் செந்தில்பாலாஜி
தனியார் மருத்துவமனையைத் திறந்து வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை மாநகராட்சி சாலைகளைப் பொறுத்தவரை கடந்த ஒன்றரை ஆண்டில் ரூ.211 கோடி சாலைப் பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். ரூ.26 கோடி முதற்கட்டமாக வந்து சேர்ந்து பணிகள் நடப்பதாகவும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அப்பணிகள் நிறைவுபெறும் எனவும் கூறினார். மீதமுள்ள நிதி, வருகிற மார்ச் மாதத்திற்குள் வந்து சேரும் எனத் தெரிவித்தார்.

சட்ட விதிமுறைப்படி டெண்டர் விடப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், ’அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டில் 2 லட்சத்து 20 ஆயிரம் மின் இணைப்புகள் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் தற்போது, ஒன்றரை ஆண்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும்’ தெரிவித்தார்.

மேலும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கடந்த 10 ஆண்டுகளில் கோவையில் செய்யாத பணிகளை நாங்கள் செய்வோம் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ’உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்படும்' - திருமா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.