ETV Bharat / state

வால்பாறை ஆற்றில் மூழ்கி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்; அமைச்சர் முத்துசாமி மாணவர்களின் வீட்டிற்குச் சென்று ஆறுதல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 21, 2023, 7:38 AM IST

college students death in valparai: வால்பாறை பகுதியில் ஆற்றில் மூழ்கி 5 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த நிலையில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி உயிரிழந்த மாணவர்களின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

வால்பாறை ஆற்றில் மூழ்கி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்; அமைச்சர் முத்துசாமி மாணவர்களின் வீட்டிற்கு சென்று ஆறுதல்!
வால்பாறை ஆற்றில் மூழ்கி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்; அமைச்சர் முத்துசாமி மாணவர்களின் வீட்டிற்கு சென்று ஆறுதல்!

வால்பாறை ஆற்றில் மூழ்கி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம்; அமைச்சர் முத்துசாமி மாணவர்களின் வீட்டிற்கு சென்று ஆறுதல்!

கோயம்புத்தூர்: வால்பாறையில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தண்ணீர் சுழலில் சிக்கி ஒரு மாணவர் தத்தளித்த நிலையில், அவரைக் காப்பாற்றச் சென்ற மற்ற மாணவர்களும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் முத்துசாமி ஆறுதல் தெரிவித்து, கட்சி நிர்வாகிகள் சார்பில் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த 10 மாணவர்கள், இரு சக்கர வாகனங்களில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று (அக்.20) மதியம் உணவருந்திவிட்டு சோலையார் எஸ்டேட் செல்லும் வழியில் உள்ள ஆற்றில் குளித்து உள்ளனர்.

அப்போது, ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்ற ஐந்து மாணவர்கள், தண்ணீரில் இறங்கி குளித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது ஒரு மாணவர் நீரில் ஏற்பட்ட சுழலில் சிக்கி தத்தளித்த நிலையில், அவரைக் காப்பாற்ற முயன்றபோது ஒவ்வொருவராக தண்ணீருக்குள் மூழ்கி உள்ளனர்.

இதை கரையிலிருந்து பார்த்த நண்பர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கி உயிரிழந்த தனுஷ்குமார் (20), வினித்குமார் (23), சரத், அஜய், ரபேல் உள்ளிட்ட 5 பேர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: கோவை அருகே விஷம் வைத்து கொல்லப்பட்ட 33 மயில்கள்; வனத்துறையினர் விசாரணை!

இதில் தனுஷ்குமார் மற்றும் வினித்குமார் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு வந்த கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் முத்துசாமி, உயிரிழந்த மாணவர்களின் உடல்களை பார்வையிட்டார். மேலும், உயிரிழந்த மாணவர்களின் வீட்டிற்குச் சென்று உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “மாணவர்கள் குளிக்கச் சென்ற ஆற்றில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டிருந்தும், துரதிஷ்டவசமாக மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த துயரமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பவத்தை அறிந்து தமிழக முதல்வர் வருத்தம் தெரிவித்து, நேரில் சென்று தேவையான உதவிகளை செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து அந்தப் பகுதிகளில் எந்தெந்த ஆற்றில் பாதுகாப்பு இல்லை என்பதை ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கட்சி நிர்வாகிகள் சார்பில் 50 ஆயிரம் ரூபாய் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும்” என தெரிவித்தார். இந்நிகழ்வில் கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தளபதி முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: பெற்ற பிள்ளைகள் நிலத்தை ஏமாற்றியதாக புகார்.. அழுது புரண்டா மூதாட்டியால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.