ETV Bharat / state

27 ஆண்டுகளுக்கு பிறகு மூதாட்டிக்கு கிடைத்த நீதி!

author img

By

Published : Apr 30, 2021, 10:21 AM IST

கோவை: வீட்டு வசதி வாரியம் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை பாக்கியை தர வலியுறுத்தி மூதாட்டி ஒருவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கானது 27 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்வு காணப்பட்டது.

நீதிமன்றம் தீர்ப்பு
நீதிமன்றம் தீர்ப்பு

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதியம்மாள் (90). 1983ஆம் ஆண்டு, இவருக்கு சொந்தமான நிலத்தை, வீட்டுவசதி வாரியம் கையகப்படுத்தியது.

இந்நிலத்துக்கு உரிய இழப்பீடு கிடைக்காததால் அவர் 1994ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து அவருடைய நிலத்துக்கு இழப்பீடாக வட்டியுடன் சேர்த்து மொத்தம் 67.87 லட்ச ரூபாயை 2021 மார்ச் 31ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவை வீட்டுவசதி வாரியம் நிறைவேற்றாததையடுத்து, கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் சரஸ்வதியம்மாள் தாக்கல் செய்திருந்த மனு, கடந்த 21ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாவட்ட ஆட்சியர் கோவை வீட்டுவசதி வாரிய அலுவலகத்தை பூட்டி ‘சீல்’ வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து பணம் செலுத்த கால அவகாசம் கேட்டிருந்த நிலையில், இந்த வழக்கு நேற்று (ஏப்ரல் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, வீட்டு வசதி வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வருமான வரி பிடித்தம் போக, கோவை டாடாபாத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயற்பொறியாளர் சார்பில் மொத்தம் ரூ.62.15 லட்சம் இழப்பீடாக சரஸ்வதியம்மாள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

எனவே, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் மனுவை முடித்துவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.